பதிவு செய்த நாள்
09
அக்
2020
01:10
சென்னை: ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு, உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை, கோவில் நிதியிலிருந்து வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து கோவில் சார்நிலை அலுவலர்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளர்களுக்கு, ஓய்வூதியம், 2,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாகவும், ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, குடும்ப ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, அவரவர் பணிபுரிந்த கோவில் நிதியில் இருந்து, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.தற்போது வரை, ஓய்வூதியம் பெற்று வரும் நபர்களை தவிர, புதிதாக ஓய்வு பெற வேண்டி வரப்படும் விண்ணப்பங்களை, ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, முதல் கட்ட அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்தின் கடைசி வேலை நாளில், சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரர் வங்கி கணக்கில், நேரடியாக பணம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும், புதிதாக ஆளறிதல்பதிவேடு துவக்க வேண்டும். அதில், ஓய்வூதிய தாரர்களின் விபரங்களை பதிந்து, ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் ஆளறிதல் செய்து, ஓய்வூதியம் மற்றும்குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.