பதிவு செய்த நாள்
10
அக்
2020
02:10
மும்பை : மஹாராஷ்டிராவில் நவராத்திரி விழா (துர்கா பூஜை) பண்டிகைக்கான கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை மும்பை மாநகராட்சி (பிஎம்சி) வெளியிட்டது. அத்துடன் கொரோனா காலங்களில் விழாவை பாதுகாப்பாகவும், எளிமையாகவும் கொண்டாட வலியுறுத்துகிறது. மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆயினும் நோய் தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) , கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிஎம்சி இன்று (அக்.,9) வரவிருக்கும் நவராத்திரி திருவிழாவிற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் தொற்றுநோயின் தீவிரத்தை கருத்திற்கொண்டு, தெய்வ சிலைகளின் ஆன்லைன் தரிசனத்தை பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு நகரத்தில் உள்ள சர்வஜானிக் (சமூகம்) கட்டளைகளை பரிந்துரைத்தது.
நவராத்திரி விழாவின் முக்கிய பண்டிகையான துர்கா பூஜை பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாகவும், வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா பாதிப்பு காலங்களால் துர்கா பூஜை மேற்கு வங்கம், உ.பி., மற்றும் மஹாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களிலும் எளிமையாக, பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என அம்மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அதற்காக மஹா., அரசு முறயைான வழிகாட்டுதலுடன், மண்டலங்களில் சுவாமி சிலைகளின் உயரம் 4 அடி வரையும், வீடுகளில் 2 அடி வரையும் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. குடிமை அமைப்பு சிலைகளுக்கு அதே உயர கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. அக்.,17 முதல் தொடங்கும் நவராத்திரி விழாவின் போது கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொள்கிறது. மேலும் விழாவிற்காக அமைக்கப்படும் பந்தல்களை கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கவும், பக்தர்களுக்கிடையே சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மும்பை மாநகராட்சிஅறிவுறுத்தியது. மேலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது உள்ளிட்ட அரசு வழிகாட்டுதல்களை விழாக்களில் பங்கேற்போர் அனைவரும் பின்பற்றுவது அவசியம் என்று கூறுகிறது.