பதிவு செய்த நாள்
10
அக்
2020
02:10
பல்லடம்: திண்டுக்கல் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு நீதி கேட்டு, பல்லடம் தாலூகா சவர தொழிலாளர்கள், விநாயகரிடம் கோரிக்கை மனு வைத்து வழிபட்டனர்.
திண்டுக்கல்லில், சிறுமிக்கு நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் சவர தொழிலாளர் சங்கத்தினர், நேற்று கடைகளை அடைத்து கண்டனத்தை தெரிவித்தனர். தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சவர தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று, திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலூகா சவர தொழிலாளர் சங்கத்தினர், நூதன முறையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். பல்லடம் அண்ணா நகர் ஸ்ரீராஜ மருத்துவ கணபதி கோவிலில் சிறுமிக்கு நீதி கேட்டு விநாயகரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகிக்க, கோரிக்கை மனு கோவில் பூசாரியிடம் வழங்கப்பட்டு வழிபாடு நடத்தது. தொடர்ந்து, அனைவர் முன்னிலையிலும் கோரிக்கை மனு வாசிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், பாலியல் பலாத்கார சம்பவத்தில் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே, மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதை வரவேற்கிறோம். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல், நீதிமன்றம் கைவிட்டாலும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்பதால், இச்சம்பவத்தில் நீதி கிடைக்க விநாயகரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.