பதிவு செய்த நாள்
12
அக்
2020
11:10
மணலி புதுநகர் : மணலி புதுநகர் அய்யா கோவில், திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் வடம் பிடிக்காமல், தேர் வலம் வந்தது.
மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும், புரட்டாசி மாதம், 10 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இவ்வாண்டு, 2ம் தேதி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில், அய்யா, காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம், நேற்று காலை வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, செண்டை மேளம், உறுமி மேளம் முழங்க, திருத்தேரில் அய்யா வைகுண்ட பரம்பொருள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது, பக்தர்கள், அய்யா ஹரஹர சிவ சிவ, அய்யா உண்டு என, பக்தி பரவசத்தில் விண்ணதிர முழங்கினர். வழக்கமாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிலையில், இம்முறை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் வடம் பிடிக்க அனுமதியளிக்கப்படவில்லை.ராட்சத கயிறு மூலம், கிரேன் முன்பக்க தேரை இழுக்க, இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள், பின்னால் தள்ளியபடி, திருத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் ஆங்காங்கே, முக கவசம் அணிந்து, இடைவெளியுடன் நின்று, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.மேலும், தனி நபர் அன்னதான வினியோகமும் தடை செய்யப்பட்டிருந்தது. மாலையில், அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல், பின் இரவில், பூப்பல்லக்கில் பதிவலம் வருதல், திருநாமக் கொடி அமர்வுடன் விழா நிறைவுற்றது.