பதிவு செய்த நாள்
14
அக்
2020
11:10
புதுடில்லி : பண்டிகை மற்றும் குளிர் காலம் துவங்க உள்ளதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதனால், சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, மக்கள், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சரவை குழுவின், 21வது ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.வீடியோ கான்பரன்சிங் வழியாக நடந்த இந்த கூட்டத்துக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை வகித்தார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் லால் மாண்டவியா, சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, நிடி ஆயோக்கின் சுகாதார பிரதிநிதி வினோத் கே பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:ஆறு மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல், மக்களுக்கு சேவை செய்து வரும் முன்களப் பணியாளர்களுக்கு, என் நன்றி. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசு, தன் உறுதியான நடவடிக்கைகளால், நோயின் தாக்கத்தைக் குறைத்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை, 62 லட்சத்து, 27 ஆயிரத்து, 295 பேர் குணம் அடைந்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம், 86.88 ஆக அதிகரித்து உள்ளது. உலகிலேயே, நம் நாட்டில் தான், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் அதிகமாக உள்ளது.
இந்தியாவில், கொரோனாவுக்கு பலியானவர்களின் சதவீதம், 1.53 ஆக உள்ளது. கடந்த, மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில், 1,927 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும், 15 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனாலும், கொரோனா பரவல் தொடர்கிறது. பண்டிகை காலம் துவங்க உள்ளது. அதையடுத்து குளிர்காலம் துவங்க உள்ளது.
இந்த காலங்களில் வைரஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர். அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவது என்ற பேச்சுக்கே, இடம் அளிக்க கூடாது.முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், துாய்மையை கடைப்பிடித்தல் உட்பட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் கட்டாயம் பின்பற்ற வேணடும். பண்டிகைகளை, வீட்டிலேயே மக்கள் கொண்டாடுவது நல்லது. அதிகமாக கூடுவதை தவிர்ப்பது நல்லது. பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது, தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுதும் கொரோனா நடத்தை முறைக்கான மக்கள் இயக்க உறுதிமொழி பிரசாரத்தை துவக்கி உள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.
அடுத்தாண்டு துவக்கத்தில் தடுப்பூசி!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:அடுத்த ஆண்டின் துவக்கத்தில், நமக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.தடுப்பூசி வினியோகத்தை மேற்கொள்வதற்கான திட்டங்களை, நிபுணர் குழுக்கள் வகுத்து வருகின்றன. நம் நாட்டுக்கு, குறைந்தது, 50 கோடி தடுப்பூசிகள் தேவை. அடுத்த ஆண்டு துவக்கத்தில், 20 - 25 கோடி பேருக்கு, கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை தடுப்பூசி போட்டால் போதுமா என்பது பற்றி, இப்போது சொல்ல முடியாது. தேவைப்பட்டால், இரண்டு முறை தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.