மதுரை : மதுரை முனிச்சாலை - நெல்பேட்டை ரோட்டில் மரத்தடியில் தெய்வமாக வழிபட்டு வரும் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் காலத்து சதிக்கல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
கோயில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் சசிகலா கூறியதாவது: மதுரைகோயில் சிலை, கல்வெட்டுகள் குறித்து மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் சார்பில் ஆய்வு செய்த போது இக்கல்லை கண்டறிந்தோம். போரில் வீரமரணம் தழுவிய, உயிர் தியாகம் செய்தோர் நினைவாக நடுகல் அமைப்பர்.இக்கல் போரில் வீர மரணம் தழுவிய வீரனுடன் மனைவியும் தீயேந்துதல் என்ற உடன் கட்டையேறி உயிர்நீத்த நினைவாக அமைக்கப் பட்டுள்ளது. இதனால் இதைசதிக்கல், நடுகல் என்பர். நீண்ட செவ்வக கல்லில் இரண்டு உருவங்கள் புடைப்பு சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன. சிலையின் ஆடை, அணிகலன்கள், தலையின் கொண்டை அமைப்பை வைத்து ஆய்வு செய்தபோது இது 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.போரில் இறந்த வீரன் வலது கையில் ஓங்கிய வாள், இடது கையில் குறுவாளுடன் இருக்கிறான். அருகில் வீரனின் மனைவியும் கையில் வாளுடன் இருப்பது சிறப்பு. இருவரும் காதுகளில் குண்டலம், கைகளில் வளையல் அணிந்துள்ளனர். மதுரையில் கிராம பகுதிகளில் நடு, சதிகற்கள் கிடைக்கும் நிலையில் நகரில் கிடைத்தது இதுவே முதல் முறை என்றனர்.