பதிவு செய்த நாள்
19
அக்
2020
01:10
சென்னை : நவராத்திரியை களைகட்ட வைக்க, சென்னை மயிலாப்பூர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான புது வடிவ பொம்மைகள் வந்துள்ளன. அழகாகவும், சிறப்பாகவும் உள்ள இந்த பொம்மைகளை வாங்குவதன் மூலம், பொம்மைகள் தயாரிக்கும், விற்கும் எளிய மக்களை, சந்தோஷத்தில் சிரிக்க வைக்கலாம்.
மயிலாப்பூர் மாடவீதியெங்கும் கொலு மண்டபங்களாக மாறியிருக்கிறது. கள்ளழகர், கிருஷ்ணன், முருகன் போன்ற சாமி பொம்மைகளுடன், கையில் சிலம்புடன் நீதி கேட்டு நிற்கும் கண்ணகி சிலையும் இடம் பெற்று உள்ளது.தனியார் கடைகளும், தற்காலிகமாக நவராத்திரி பொம்மை விற்கும் கடைகளாக மாறியுள்ளன. இதுபோன்ற கடைகளில், விஸ்வரூப காட்சி பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.எவ்வளவு தான், வீட்டில் ஏற்கனவே வாங்கிய பொம்மைகள் நிறைய இருந்தாலும், ஒவ்வொரு நவராத்திரிக்கும் புதுப்புது பொம்மைகள் வாங்கி வைக்கும் வழக்கம், நம் மக்களிடம் உண்டு.
அப்படி வாங்கும் பொம்மைகள், செட் பொம்மைகளாக இருக்கும்படி, தற்போது பார்த்துக் கொள்கின்றனர்.இவர்களுக்காகவே, மாப்பிள்ளை அழைப்பு செட், கல்யாணம் செட், சீமந்தம் செட் மற்றும் நவக்கிரக நாயகியர் செட் போன்ற செட் பொம்மைகளை வைத்துள்ளனர். நவராத்திரி என்பது, விருந்தினர்களை வரவழைத்து, அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து கொலுவை காண்பித்து மகிழ்வதுடன், வந்த விருந்தினர்களுக்கு நினைவு பரிசும் கொடுத்து வழியனுப்புவர்.இதற்காகவே, விதவிதமான பரிசு பொருட்களும், சந்தையில் விற்று வருகின்றன.
விடுமுறை தினமான நேற்று, மயிலாப்பூர்,தி.நகர் கொலு பொம்மை கடைகள், களைகட்டியிருந்தன. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.கொரோனாவை காரணம் காட்டி, நம் பண்டிகைகளையும், பண்பாடுகளையும் ஒதுக்கவும் வேண்டாம்; ஒதுங்கியிருக்கவும் வேண்டாம்.தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், வழக்கம் போல பண்டிகைகளை கொண்டாடுவோம். காரணம், இதில் கிடைக்கும் மகிழ்ச்சி, சங்கிலி தொடர்போல பலருக்கும் கிடைக்கும்.