பதிவு செய்த நாள்
19
அக்
2020
05:10
நாமக்கல்: நவராத்திரியை முன்னிட்டு, செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவில், புதிய வரவாக, மரப்பாச்சி பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், நவராத்திரி விழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா, நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 25 வரை நடக்கும் இவ்விழாவில், தினமும், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாளில், சுவாமி தங்க கவசத்தில் எழுந்தருளினார். நேற்று, வெள்ளி கவசத்திலும், தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளும் சுவாமி, கடைசி நாளான, அக்., 25ல், சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தற்போது, கொரோனா தடுப்பு விதிமுறைகள் உள்ளன. அதன் காரணமாக, ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பக்தி பாடல்கள், பஜனை போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நவராத்திரியை முன்னிட்டு, மகா மாரியம்மன் கோவிலில், நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய வரவாக, மரப்பாச்சி பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. ஏற்பாடுகளை, ஊர் மக்கள், வார வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.