பதிவு செய்த நாள்
24
மே
2012
11:05
திசையன்விளை : உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா வரும் ஜூன் 2ம் தேதி துவங்குகிறது. தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு, ஆடி அமாவாசை, நவராத்திரி, திருகார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடக்கிறது. இதில் முக்கிய விழாக்களில் ஒன்று வைகாசி விசாக திருவிழாவாகும். இத்திருவிழாவிற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும், கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். நடப்பு ஆண்டு வைகாசி விசாக திருவிழா வரும் ஜூன் 2ம் தேதி துவங்கி 3ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடக்கிறது. விழாவில் முதல் நாள் ஜூன் 2ம் தேதி மாலை 6 மணிக்கு சிவசக்தி மகளிர் மன்றம் சார்பில் பரத நாட்டியம், குழு நடனம், பரிசு வழங்கல், இரவு 8 மணிக்கு கலைமாமணி டாக்டர் சதாசிவம் தலைமையில் பஜனை, பக்திஇசை பாடல்கள், இரவு 10 மணிக்கு டாக்டர் திருஞானசம்பந்தர் நிகழ்த்தும் இருளப்பபுரம், சிவஅருள்நெறி திருக்கூட்டத்தாரின் தேவார இன்னிசை ஆகியன நடக்கிறது. ஜூன் 3ம் தேதி வைகாசி விசாக திருநாள் அன்று காலை 9 மணிக்கு சிவபுராணம் ஒப்புவித்தல் போட்டியும், 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பக்தி பாடல்களும், 11 முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு சிவபெருமான் பாடல்களும், 15 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சுயம்புலிங்கசுவாமி பாடல்களை பாடும் பாட்டு போட்டி நடக்கிறது. 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு "சிவனடியார்கள் என்ற தலைப்பிலும், 11 முதல் 15 வயது வரை "சுயம்புலிங்க சுவாமியின் பெருமை என்ற தலைப்பிலும், 15 வயதுக்கு மேல் "ஆன்மிகமும், அறிவியலும் என்ற தலைப்பிலும் பேச்சு போட்டிகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு செல்வகுமார் வரவேற்புரை, நாகர்கோவில் கனகசபாபதி சார்பில் "பக்தியின் மகிமை என்ற தலைப்பில் நாகர்கோவில் யோகிராம் சூரத்குமார் அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாகர்கோவில் நாகர் சார்பில் "அன்பேசிவம் என்ற தலைப்பில் தூத்துக்குடி வாசுகி மனோகரன் ஆகியோரின் சமய சொற்பொழிவுகளும், இரவு 11 மணிக்கு எஸ்.ஆர்.சந்திரனின் ஸ்டார் நைட் திரைப்பட மெல்லிசையும் நடக்கிறது. இரவு 2 மணிக்கு சுவாமி வீதிஉலா வருதல், வாணவேடிக்கை, மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றார். பாதுகாப்பு ஏற்பாடுகளை உவரி போலீசார் செய்து வருகின்றனர். விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.