பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனியில் கல்யாண சுப்பிரமணியர் கோவில் புதிதாக கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பிரஸ்காலனியில் இந்திய அச்சகத்தின் முன்பு, கோவை மேட்டுப்பாளையம் ரோட்டின் ஓரத்தில் விநாயகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் நான்கு வழிச்சாலையாக மேட்டுப்பாளையம் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டதால், நெடுஞ்சாலை துறையினரால் கோவில் அகற்றப்பட்டது. இதையடுத்து கோயில் நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன், புதிய கோவில் கட்ட நிலம் வாங்கியது. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு, கோயில் நிர்வாக குழு தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவானந்தா தவக்குடியைச் சேர்ந்த ஸ்வயம்பிரகாஷானந்தா பணிகளை துவக்கி வைத்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.