பதிவு செய்த நாள்
29
அக்
2020
05:10
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே பள்ளிபாளையத்தில் சருகு அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கன்னிமூல கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயப் பெருமாள், சப்த கன்னிமார் ஆகிய சன்னதிகளும், தீபஸ்தம்பம், கருவறை அர்த்தமண்டபம், விமானம் ஆகிய திருப்பணிகள் புதிதாக செய்யப்பட்டன.
இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த, 26 ம் தேதி விக்னேஸ்வர, கணபதி பூஜை, மகாதீபாராதனை உடன் துவங்கியது. அன்று முதல் கால யாக பூஜையும், 27 ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜையை செய்யப்பட்டது. அடுத்து தீர்த்த கலசங்களை, யாகசாலையில் இருந்து, வெளியே எடுத்து வந்து, கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்பு அம்மன் விமானத்திற்கும், அம்மனுக்கும், இதர சன்னதியில் உள்ள தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சரவண சிவாச்சாரியார் யாக பூஜைகளையும், கும்பாபிஷேகத்தையும் நடத்தினார். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.