பதிவு செய்த நாள்
25
மே
2012
10:05
தூத்துக்குடி : தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 30ம் தேதி திருக்கல்யாணமும், 2ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசிபெருந்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை ஒட்டி பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. கொடிக்கம்பத்திற்கும், சுவாமிக்கும் விசேஷ பூஜைகளை அர்ச்சகர் வைகுண்டராமன் செய்கிறார். இதனை தொடர்ந்து கொடியேற்றம் நடக்கிறது. இரவு பெருமாள் தோளுக்கினியான் வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.திருவிழாவை ஒட்டி ஒவ்வொரு நாள் காலையிலும் பெருமாள் தோளுக்கினியான் வாகன்ததில் வீதி உலா வருதல் நடக்கிறது. இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை இரவு பெருமாள் சிம்மவானகத்திலும், 27ம் தேதி இரவு ஹனுமான் வாகனத்திலும், 28ம் தேதி இரவு ஆதிசேஷ வாகனத்திலும், 29ம் தேதி இரவு கருட வாகனத்திலும், 30ம் தேதி இரவு யானை வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது. அன்று இரவு திருக்கல்யாண விழா வெகு விமரிசையாக நடக்கிறது. பாகம்பிரியாள் சமேத சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாண குழு சார்பில் மதியம் 12 மணிக்கு கோயில் கணக்கர் சண்முகசுந்தரம், மணியம் ஏற்பாட்டில் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. 31ம் தேதி இரவு தோளுக்கினியான் வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருதல் நடக்கிறது.
ஜூன் முதல் தேதி காலை 8 மணிக்கு பெருமாள் புதுக்கிராமம் வெங்கடாஜலபதி கோயிலுக்கு எழுந்தருளல் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் ரதவீதி உலா வருதல் நடக்கிறது. 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 3ம் தேதி பத்தாம் திருநாள் அன்று பெருமாள் தோளுக்கினியான் வாகனத்தில் வீதி உலா வருதலும், 4ம் தேதி நிறைவு நாள் அன்று ஊஞ்சல் விழாவும் நடக்கிறது. விழாவை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பரதநாட்டியம், ஆய்குடி அனந்தகிருஷ்ணன் குழுவினர் பஜனை, இளம்பிறை மணிமாறன் சொற்பொழிவு, தென்திருப்பேரை அரவிந்த் லோசநன் சுவாமி சொற்பொழிவு, கடக்கல் புஷ்பகுமார் குழுவினரின் வாழும் கலை சத்சங்கம் நடக்கிறது.கலை நிகழ்ச்சிகளின் குழு அமைப்பாக நடராஜன், மாரியப்பன், வைரவநாதன், பி.எஸ்.கே ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், பாலாஜி, கார்த்திகேயகுமார், ராமன் ஆகியோர் செயல்படுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசன்காத்த பெருமாள், அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.