காவிரி பாதுகாப்பு ரத யாத்திரைக்கு கும்பகோணத்தில் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2020 04:11
தஞ்சாவூர், தலைக்காவிரியில் தொடங்கி பூம்புகார் வரை செல்லும், காவிரி பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு கும்பகோணத்தில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
ஆண்டுதோறும் குடகுமலை தலைக்காவிரியில் தொடங்கி பூம்புகார் வரை காவிரி பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை நடக்கிறது. காவிரி நதியில் குப்பைகள், கழிவுகளை கொட்டுவதை கைவிட வேண்டும். அரசு இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லட்சகணக்கான மரக்கன்றுகளை நட வேண்டும். நதிகளின் தாயார் காவிரியை போற்றுவோம் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் ரத யாத்திரை செல்கிறது. 10வது ஆண்டாக, இந்தாண்டு யாத்திரை கடந்த அக்.21-ம் தேதி தொடங்கி வரும் 8-ம் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது. இந்த யாத்திரை வாகனம் நேற்று திருவையாறு புஷ்பமண்டபத்திற்கு வந்தது. அங்கு காவிரி அன்னைக்கு, காவிரியாற்றில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து இன்று கும்பகோணம் அருகே கொட்டையூர் வந்தது. அங்கு தென்பாரத கும்பமேளா, மகாமகம் அறக்கட்டளையினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர். பின்னர் கோடீஸ்வரர் கோவில், மேலக்காவிரி அன்னை கருணை இல்லங்களுக்கு சென்றனர். மாலை பழைய பாலக்கரை டபீர் படித்துறையில் தீப ஆரத்தி வழிபாடு நடந்தது. இதில் துறவியர்கள், சன்னியாசிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.