பதிவு செய்த நாள்
05
நவ
2020
12:11
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் பங்கேற்கும் அபிஷேகம் மற்றும் திருமண பதிவு துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலில், தினமும், மூன்று கால அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தில், இரண்டு பக்தர்கள் பங்கேற்க, சிறப்பு கட்டணமாக, 1,500 ரூபாய் காணிக்கையாக பெறப்படுகிறது.
ஒரு அபிஷேகத்திற்கு, அதிக பட்சமாக, 50 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.அதே போல், மலைக்கோவிலில் திருமணம் செய்வதற்கு, ஒரு ஜோடிக்கு, 2,500 ரூபாய் சிறப்பு கட்டணமாக நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.இதுதவிர, பக்தர்கள் தங்கத்தேர், வெள்ளித்தேர் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமானை தேர் வீதியில் உலா வருவதற்கு, 1,500 - 4,000 ரூபாய் வரை பக்தர்களிடம் காணிக்கையாக கோவில் நிர்வாகம் வசூலிக்கப்படுகிறது.இதனால், கோவிலுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச், 22ம் தேதி முதல், கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அபிஷேகம் மற்றும் திருமண பதிவு ரத்து செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன், அரசு உத்தரவு, தளர்வுகள் மற்றும் உரிய விதிமுறைகளின் படி முருகன் கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால், அபிஷேகம் மற்றும் திருமண பதிவு இன்னும் துவங்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.எனவே, கோவில் வருமானம் மற்றும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற, அபிஷேகம் மற்றும் திருமண பதிவு மீண்டும் துவங்க, அரசு அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.