ஒரு செங்கல்லை கூட அகற்றக்கூடாது: அனைத்து கோயில்களுக்கும் பொருந்துமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2020 11:11
சென்னை: இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒரு செங்கல்லை கூட அகற்றக்கூடாது என்ற அறிவுரை சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு மட்டுமானதா; அறநிலைய துறையின் அனைத்து கோயில்களுக்கும் பொருந்துமா என்பதை நீதிமன்றமே தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த கோயில் புனரமைப்பு குழு தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது பழமைவாய்ந்த மூன்று கோயில்கள் இடிக்கப்பட்டு விட்டதாகதெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒரு செங்கல்லை கூட அகற்றக் கூடாது; இது குறித்து இணை கமிஷனர்கள் நிர்வாக அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். நீதிமன்ற அறிவுரையை மேற்கோள் காட்டி அறநிலைய துறை கமிஷனர் பிரபாகர் கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதனால் கோயில்களின் திருப்பணி பராமரிப்பு பணிகள் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வேலைகளை செய்யலாமா; கூடாதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தின் அறிவுரை வழக்கில் தொடர்புடைய மூன்று கோயில்களுக்கு மட்டுமா மற்ற கோவில்களுக்கும் பொருந்துமா என்பதை நீதிமன்றம் தெளிவு படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிகை விடுத்துள்ளனர்.