பதிவு செய்த நாள்
13
நவ
2020
10:11
திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், இரண்டாம் நாளான நேற்று, பெரிய சேஷ வாகனத்தில்பத்மாவதி தாயார் வைகுண்டநாதன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருமலை ஏழுமலையானின் பட்டத்துராணியான திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, நேற்று முன்தினம் முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, தாயார், ஏழு தலைகள் உடைய பெரிய சேஷ வாகனத்தில், வைகுண்டநாதன் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிரம்மோற்சவ நாட்களில், உற்சவமூர்த்திகள் வாகனங்களின் மீது எழுந்தருளும் அலுப்பை போக்க, மதிய வேளையில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மதியம், 12:30 மணிக்கு, தாயாரை பழம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் எழுந்தருளச் செய்து, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் அர்ச்சகர்கள் திருமஞ்சனத்தை நடத்தினர். நேற்றிரவு, தாயார் சரஸ்வதி தேவி அலங்காரத்தில், கையில் வீணை ஏந்தி, வெண்பட்டு அணிந்து, அன்னபறவை வாகனத்தில் எழுந்தருளினார்.