காஞ்சி மகாபெரியவர் முன்னிலையில் பக்தர்கள் சிலர் சந்தேகங்கள் கேட்டனர். அவற்றுக்கு மகாபெரியவர் பதிலளிக்க தொடங்கினார். பக்தர் ஒருவர், ‘‘ தன் தந்தை உயிரோடிருந்த காலத்தில் கவனிக்காத இளைஞர் ஒருவரை எனக்குத் தெரியும். வேறொருவரின் பராமரிப்பில் வாழ்ந்த தந்தை சமீபத்தில் காலமானார். உடனே சொத்து முழுவதும் வாரிசான தன்னையே சேரும் என்று வழக்கு தொடர்ந்த மகன், பராமரித்த நபருக்கு ஒன்றும் தர விரும்பவில்லை. இளைஞர் செய்வது சரியில்லை என்றாலும் சொத்து சட்டப்படி அவரைத் தானே சேரப் போகிறது?’’ என வருத்தமுடன் கேட்டார். சற்று மவுனமாக இருந்த மகாபெரியவர், ‘‘சட்டப்படி சொத்து இளைஞருக்கு போகலாம். ஆனால் தர்மப்படி போகக் கூடாது. தகப்பனார் வாழ்ந்த காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாதவனுக்கு அவரது சொத்தை மட்டும் அனுபவிப்பதற்கு தார்மீக ரீதியான உரிமை கிடையாது’’ என்றார். அந்த பக்தர் மேலும், ‘‘பெற்றோரை புறக்கணிக்கும் மகன்கள் அவர்களின் காலத்திற்குப் பிறகு தெவசம், திதி செய்வது சரிதானா?’’ எனக் கேட்டதற்கு, ‘‘தெவசம் கொடுப்பது முக்கியம்தான். பெற்றோரை வாழும் காலத்தில் கவனிப்பது மிக முக்கியம். பெற்றோரை புறக்கணித்தவனுக்கு நரகம் நிச்சயம்’’ என மகாபெரியவர் எச்சரித்தார். இன்னொரு பக்தர், ‘‘தற்காலத்தில் மக்கள் நவீன சிந்தனையுடன் செயல்பட விரும்புகின்றனர். தெவசத்தன்று வைக்கும் பிண்டத்தை முன்னோர் சாப்பிடுவதை கண்ணால் பார்க்க முடிவதில்லை. எனவே நினைவு நாளில் அநாதை, முதியோர் இல்லங்களில் அன்னதானம் செய்வது நல்லது என்றும், அங்கே பலர் சாப்பிடுவதை கண்டு மனநிறைவு கிடைக்கும் என்றும் சொல்கிறார்களே!’’ எனக் கேட்டார். கலகல என்று சிரித்த மகாபெரியவர், ‘‘ஒன்றைச் செய்தால் இன்னொன்றைச் செய்ய தேவையில்லை என எண்ணுவது முறையல்ல! சம்பிரதாயப்படி தெவசத்தை முடித்து விட்டு, அநாதை, முதியோர் இல்லத்திற்கு நன்கொடை தரலாம். அவர்களுக்கு உதவி செய்வதும் நல்ல விஷயம் தான். அதே போல தெவசமும் மிக முக்கியமானது. வழிவழியாக தெவசம், திதி போன்ற அனுஷ்டானங்கள் நம் பாரத தேசம் முழுதும் வழக்கத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் நோயின்றி நலமுடன் வாழ இந்த சம்பிரதாயங்கள் அவசியமானவை. காலம் காலமாக உள்ளதை புறக்கணிக்க நினைப்பது சரியல்ல. ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றுவது அந்தந்த குடும்பத்தைச் சார்ந்த முன்னோரின் ஆசி என்பதை அறிந்தால் இப்படி சிந்தனை ஏற்படாது’’ என விளக்கினார்.