திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்த மலையில் வெற்றி வேலாயுத சுவாமி என்னும் பெயரில் முருகன் இருக்க, தெய்வானையும், வள்ளியும் கன்னிகளாக உள்ளனர். முருகனின் திருத்தலங்களை தரிசிக்க அகத்தியர் யாத்திரை புறப்பட்டார். அவருடன் நாரதர் உள்ளிட்ட தேவர்களும் வந்தனர். ஒருநாள் பூஜை செய்வதற்கு எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. நடந்த களைப்பில் அகத்தியருக்கும் தாகம் எடுத்தது. அவருக்கு காட்சியளித்த முருகன் வேலினைத் தரையில் துளைக்க நீரூற்று பீறிட்டது. அதில் தீர்த்தம் எடுத்து பூஜை நடத்தியதோடு, தண்ணீர் குடித்து தாகம் நீங்கினார் அகத்தியர். ஊற்று என்பதால் ‘ஊற்றுக்குழி’ எனப்பட்டது. நாளடைவில் ‘ஊத்துக்குளி’ என மருவியது. அற்புதம் நிகழ்த்திய முருகனுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. வெற்றி வேலாயுதசுவாமி என அழைக்கப்படுகிறார். தெய்வானை, வள்ளிக்கு தனி சன்னதி உள்ளது. திருச்செந்துாரில் சூரபத்மனை வதம் செய்த பின் முருகன் இங்கு தங்கினார். அப்போது மகாவிஷ்ணுவின் மகள்களான அமுதவள்ளி, சுந்தரவள்ளி தங்களை ஏற்கும்படி வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து வேண்டினர். அதற்காக இந்திரனின் மகளாக தெய்வானை என்ற பெயரிலும், வேடுவர் தலைவன் நம்பிராஜனின் மகளாக வள்ளி என்னும் பெயரிலும் அப்பெண்களை பூமியில் அவதரிக்கச் செய்தார். இவர்களே கன்னியராக இங்குள்ளனர். இங்கு வழிபட்டால் திருமணத்தில் தடை நீங்கும். பிரிந்த தம்பதியர் சேர்வர். எப்படி செல்வது திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் 15 கி.மீ., விசேஷ நாள்: வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், நேரம்: காலை 6:00 – 11:00 மணி மாலை 5:00 – 8:00 மணி தொடர்புக்கு: 04294 – 262 052, 262 054 அருகிலுள்ள தலம்: சென்னிமலை முருகன் கோயில் 24 கி.மீ.,