பதிவு செய்த நாள்
28
நவ
2020
07:11
திருவாசகத்தை அருளிய மாணிக்க வாசகருக்கு ஈசனே குருவாக வந்து குருந்த மரத்தடியில் உபதேசம் செய்த தலம், திருப்பெருந்துறை. இக்கோயிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை வகை வகையாக அமைத்துள்ளனர். 27 நட்சத்திரங்கள், 3 மூர்த்திகள், 36 தத்துவங்கள், 5 கலைகள், 51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வகையில் இவ்விளக்குகள் அமையப் பெற்றுள்ளன. 27 நட்சத்திர தீபங்களை கருவறையில் ஏற்றியுள்ளனர். உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் குறிக்க 3 தீபங்களை ஏற்றி கருவறையில் மஞ்சள், பச்சை, சிவப்பு நிற கண்ணாடிப் பெட்டியில் வைத்துள்ளனர். 36 தத்துவங்களைக் குறிப்பதாக 36 தீபங்களை தீப மாலையாக தேவ சபையில் ஏற்றி வைத்துள்ளனர். 5 வகை கலைகளைக் குறிக்க 5 தீபங்களை கருவறையில் ஒன்றின் கீழ் ஒன்றாக ஏற்றியுள்ளனர். 51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதைக் குறிக்க 51 தீபங்களை கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.
உலகங்கள் 87. இதைக் குறிப்பதற்கு கனக சபையில் குதிரைச் சாமிக்கு அருகே 87 தீபங்களை ஏற்றி வைத்துள்ளனர். மந்திரங்களைக் குறிக்க 11 விளக்குகளை நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர். இப்படி தேவர்களை திருவிளக்குகளாக அமைத்து தீபமாக ஏற்றி வைத்துள்ளனர். இப்படிப்பட்ட அதிசய அமைப்பு தீபங்களை ஆவுடையார் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும். ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சத் தீபவிழா. மயிலாப்பூரில் ஆண்டுதோறும் இது நடக்கும். திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவர். அதிலும் இவ்வாலய சங்கு தீர்த்தத்தில் 12 வருடத்துக்கு ஒருமுறை தோன்றிய வலம்புரி சங்குகளைக் குவியலாகச் சேமித்து வைத்துள்ளனர். அச்சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து லட்சதீப விழா நடத்துவர். காஞ்சியில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏற்றிய மாவிளக்கை தலையில் வைத்துக்கொண்டு ஆலய வலம் வந்து வழிபட்டு ஈசன் அருளை பெறுவர். விருட்ச வடிவம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தால் ஒரு மரமே தீப ஒளியுடன் பிரகாசிப்பது போல இருக்கும். இவ்விளக்குகளை குருவாயூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆலயங்களில் காணலாம்.
திருமழிசை குளிர் நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோம வாரத்தில் காலையில் 108 சங்காபிஷேகம் செய்வர். மாலையில் லட்ச தீப விழா நடத்துவர். பின் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். குமரி மாவட்டத்தில், கார்த்திகை தீபத்தன்று பெண்கள் வீட்டு முற்றத்தில் பூக்கள் நிரப்பிய தாம்பளத்தின் மத்தியில் குத்துவிளக்கேற்றி வைப்பர். அதனருகில் ஒரு பெரிய அகல் விளக்கின் எண்ணெய், திரிகளை நிரப்பி எரிய விடுவர். தினமும் வீட்டில் சுவாமி அறையில் ஏற்றும் தீபத்தில் பாக்கி உள்ள எண்ணெய், திரிகளை சேமித்து வைத்து அதனால் இதை எரிய விடுவர். இதனை பரணி தீபம் என்பர். இது குமரி மாவட்டப் பழக்கமாகும். வாஞ்சியத்தில் உள்ள முனிதீர்த்தம் என்ற குப்தகங்கையில் கங்காதேவி 999 பங்கு தன் சக்திகளுடன் ரகசியமாக வசிக்கிறாள். காசியில் ஒரு பங்கு சக்தியுடன் தான் வாசம் செய்கிறாள். எனவே காசியைவிட வாஞ்சியம் அதிக மகத்துவம் பெற்ற தலம். இங்கு கார்த்திகை ஞாயிறுகளில் நீராடி ஈசனை வழிபட்டால் பஞ்சமாபாதகம் விலகும். அன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஈசனும், தேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து குப்தகங்கை கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பது புண்ணியம். குடந்தை நன்னிலம் சாலையில் ஒரு கி.மீ, தொலைவில் இத்தலம் உள்ளது.