பதிவு செய்த நாள்
29
நவ
2020
04:11
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள, 1,193 கோவில்களில் திருப்பணி செய்ய வேண்டிய கோவில்களை கண்டறிதல் பணி நடந்து வருகிறது,’’ என, அறநிலையதுறை ஆணையர் பிரபாகர் கூறினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திருப்பணி செய்ய வேண்டிய கோவில்களை கண்டறியும் பணிகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: தர்மபுரி கோட்டை காமாட்சியம்மன் உடனுறை மல்லிகார்ஜூனசுவாமி கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மேடாக உள்ளதால், மழைக்காலங்களில் கோவில் வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கும் சூழல் உள்ளது. தேங்கும் மழை நீரை, கழிவுநீர் கால்வாய் வழியாக வெளியேற்ற நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமாட்சியம்மன் சன்னதிக்கு முன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கான்கிரிட் கூரை சிதலமடைந்துள்ள நிலையில், அதை அகற்றவும், மல்லிகார்ஜூனேஸ்வரர் கருவறையின் உத்திரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை சீர்செய்ய வேண்டும்.கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான உயர்நீதிமன்ற வல்லுநர் குழுவிடம் ஒப்புதல் பெற்று, இக்கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நல்லம்பள்ளி தாலுகா ஏரிகோடிப்பட்டி வேணுகோபாலசுவாமி கோவில், இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், கன்னம்பள்ளி வெங்கட்ரமணசுவாமி கோவிலில் மாநில குழுவின் ஒப்புதல் பெற்று திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள, 1,193 கோவில்களில் திருப்பணி செய்ய வேண்டிய கோவில்களை கண்டறிதல் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சப்–கலெக்டர் பிரதாப், தர்மபுரி அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.