காரைக்கால்; காரைக்கால் சோமநாதர் கோவிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு முதன் முறையாக சந்திரபகவான் பிரகார புறப்பாடு நடைபெற்றது.காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள சோமநாதர் கோவிலில் பிரதோஷம் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பவுர்ணமி பூஜை கோவில் நிர்வாகம் சார்பில் துவங்கப்பட்டது.நேற்று முன்தினம் இரண்டாம் ஆண்டை முன்னிட்டு முதல் முறையாக (உற்சவர்) சந்திரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் பிரகாரம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் கேசவன், செயலர் பக்கிரிசாமி, துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.