பதிவு செய்த நாள்
01
டிச
2020
03:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், வெளியூர் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டதால், கிரிவலப்பாதை உள்ளிட்ட நகர் பகுதிகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா நாட்களில், வழக்கமாக, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால், வெளி மாவட்டம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த மற்றவர்கள், திருவண்ணாமலை நகருக்கு வர தடை விதிக்கப்பட்டது. இதனால், மாட வீதி மற்றும் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அதிகாரிகள், போலீசாரின் வாகனங்கள் மட்டுமே நகரில் சுற்றி திரிந்தது. கிராமப்புற விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து, விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். பால் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. நகரில் மக்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க, ?ஹலி கேம் மூலம் கண்காணிக்கப்பட்டது. போலீஸ் மொபைல் வேனில், 360 டிகிரி சுழலும் கேமரா பொருத்தப்பட்டு, நகர் பகுதி மற்றும் கிரிவலப்பாதையில் ரோந்து சென்றவாறு இருந்தது. வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் நகரினுள் அனுமதிக்கப்படாமல், பைபாஸ் சாலை வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. கோவிலிற்கு வரும் பக்தர்களை, மாவட்ட எல்லைகளிலேயே கண்டறிந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.