Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ ... சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை உத்திர பாகம்(பகுதி-1) சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை உத்திர ...
முதல் பக்கம் » சிவமகா புராணம்
சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பகுதி-2)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2012
05:05

முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, தேவரே! சிவபெருமானே சர்வலோக நாயகனாகையால் அந்தப் பகவான் விஷயத்திலேயே எங்கள் திரிகரணங்களும் விநியோகிக்கத்தகும். நாங்கள் மன்னர்களின் கதைகளை கேட்க ஆசைப்படவில்லை. தேவதேவனாகிய சங்கரபகவானுடைய சரிதங்களையே நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஆகையால் தக்ஷன் மகளாகியத் தாக்ஷõயணி என்ற பெயர் சூடிய சர்வலோக மாதாவாகிய பார்வதிதேவி பர்வதராஜகுமாரியாக அவதரித்த வகையும், தக்ஷப்பிரஜாபதி சிவபெருமானை அகந்தை கொண்டு இகழ்ந்த கதையும் சிவபெருமான் அவனைச் சினந்த விதமும் கூற வேண்டும் என்று கேட்க, வாயுதேவன் மகிழ்ந்து சிறிது நேரம் சிவத்தியானத்திலிருந்து கூறத்துவங்கினான்.

முனிவர்களே! காமதேனு, கற்பகத்தரு, சங்கநிதி, பதுமநிதி சிந்தாமணி முதலிய செல்வத்தையும் கற்பகச் சோலையையும் அரமகளிர் சுகத்தையும் அநுபவித்த இந்திரன் முதலிய இமையவர்கள் அனைவரும் சேர்ந்து, நாம் இது வரையில் சுகத்தை அநுபவித்துப் பலவகையான பாவங்களைச் செய்தோம். ஐயகோ! அவை எப்படிக் கழியும்? என்று ஏங்கி, முனிவர்கள் தவஞ்செய்யும் இமயமலையை அடைந்தார்கள். சிவபெருமானையும் சிவசக்தியையும் தரிசித்தார்கள். அவர்களிடம் வரம் பெற்றுத் தங்கள் தேவநகருக்குச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் தக்ஷன் தன் குமாரியாகிய சதிதேவியையும் தன் மருகனான சங்கரனையும் காண விரும்பி, இமயமலைக்குத் தேவருடன் வந்திருந்தான். பார்வதிதேவி அங்கு வந்த தேவர், முனிவர் முதலியவர்களுடன் தக்ஷனையும் சமமாகக் கருதிப் பேசினாள். தக்ஷன் தன் அஞ்ஞானத்தால் சதி தேவியைச் சர்வலோக மாதாவென்று உணராமல், தன்னைத் தன் மகள் சிறப்பாக வரவேற்று, மரியாதை செய்யவில்லையே என்று துவேஷங் கொண்டு தன் விதிவசத்தால் தன் மருகனாகிய சர்வேசனையும் தன் மகளாகிய சதிதேவியையும் அவமானஞ் செய்யவேண்டும் என்று கருதி, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அவிர்ப்பாகம் கொடுக்காமல் ஒரு யாகஞ்செய்யத் தீர்மானித்துத் தன் நகரடைந்து, அவர்களை அழைக்காமல், பிறபுத்திரிகளையும் மருமகர்களையும் ஓலை அனுப்பித்து அழைத்தான். அதனால் சதிதேவியும் சிவபெருமானும் நீக்கிய சகல தேவர்களும் அங்கு வந்திருந்தார்கள். அதையறிந்த நாரத முனிவர் சிவபெருமானையும் சதிதேவியையும் தரிசித்து நடந்தவற்றைச் சொல்ல, சதிதேவி தானும் அந்த யாகத்தை காணவேண்டும் என்று சிவபெருமானிடஞ் சொல்ல சிவபெருமான், நீ அங்கு போனால் அவமானமடைவாய்! என்று கூறி, மீண்டும் தேவியின் விருப்பத்திற்கு இசைந்து விடை கொடுக்க சதிதேவி எல்லாத் திக்குகளிலும் முகங்களும் திவ்விய சோபானங் களுமுடைய புடமிட்ட பொன்னாற் செய்யப்பட்டதும், இரத்தினங்கள் இழைக்கப் பெற்றதும், முத்து விதானமிட்டு, புஷ்பமாலைகள் தொங்கவிட்டு, நூறு சித்திரப்பதுமைகள் கட்டப்பெற்ற நவரத்தின அசிதமான தூண்களையுடையதும் பவளத் தோரணங்கள் கட்டப்பெற்று, மலர் மெத்தை பரப்பியுள்ளதுமான ஒரு விமானத்தில் சித்திர விசித்திர நவரத்தினங்கள் இழைக்கப்பெற்ற சிங்காசனத்தில் அமர்ந்தாள். அந்த விமானத்திற்கு எருதுக்கொடி கட்டப்பெற்றது. பார்வதிதேவி புறப்படும்போது, பரிவாரப் பெண்கள் புடைசூழ்ந்து அந்த விமானத்தில் மெய்க்காப்பாளராக ஏறிக் கொண்டார்கள். அவர்களில் இருவர் வஜ்ரதண்டம் பொருந்திய சாமரைகளை வீச அவை இரண்டு அன்னங்களையும் அந்தச் சாமரைகளுக்கிடையேயுள்ள தேவியின் திருமுகம் ஒரு தாமரை மலரும் போலிருந்தன. சுமாலினி என்ற கன்னிகை பூரணச் சந்திரன் போன்ற குடையைப் பிடித்தாள்.

சுபாவதி, தேவியுடன் கவறாடினாள். தேவியின் பாதுகைகளை ஒரு கன்னி மார்பிலணைத்து நின்றாள். ஒருத்தி கண்ணாடி காட்டி நின்றாள். ஒருத்தி விசிறினாள். ஒருத்தி தம்பலப் படிக்கமேந்தினாள். ஒருத்தி கிளியைக் கரத்தில் ஏந்தி நின்றாள். ஒருத்தி மலர் மாலைகளையும் ஒருத்தி ஆபரணப் பெட்டகத்தையும் ஏந்தியிருந்தார்கள். இப்படிப் பல மங்கையர், தத்தமக்கு விசித்த பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் சதிதேவி, நட்சத்திரங்களின் இடையே விளங்கும் சந்திரனைப் போலிருந்தாள். பிரயாணத்தை விளக்கத்தக்க பேரிகை சங்கம் வேணுமிருதங்கம் முதலிய கருவிகளும் அநேகவாயிரம் கரஹனங்களும் ஒலிக்க, எண்ணாயிரம் கணநாதர் முழக்கமிட்டு முன்செல்ல, குமாரக்கடவுள் கஜாரூடராக வந்தாற்போல, சோமநந்தி என்ற கணநாயகன் எருது வாகனத்தில் முன் செல்லவும் தேவ துந்துபிகள் முழங்கவும் அப்சரமங்கையர் நடனஞ்செய்யவும், முனிவர்களும் சித்தர்களும் யோகீஸ்வரர்களும் மகிழ, மேகங்கள் மலர்மாரி பொழிய, விமானம் புறப்பட்டது. சதிதேவி, தன் தந்தையின் யாகசாலையை அடைந்தாள். அவளது வருகையைக் கண்ட தக்ஷன், சிறிதும் மரியாதை செய்யாமலும் உபசார வார்த்தைகள் சொல்லாமலும் தன் அழிவு காலத்தால் மிகவும் கோபங்கொண்டு, சதிதேவியைவிடத் தாழ்ந்த பிற புத்திரிகளை விசேஷமாகப் போற்றிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட சதிதேவி பெருங்கோபங் கொண்டு, தேவர்கள், நடுவில் வேதவல்லியுடனிருந்த தன் தந்தை தக்ஷனை நோக்கி, பிரமன் முதல் பைசாசம் ஈறாகவுள்ள உலகத்துக்கு நாயகனாகிய சங்கர பகவானைப் பூஜை செய்ய மறந்தாயே ஏன்? அதிருக்கட்டும், உன் புதல்விகளில் மூத்தவளாகிய என்னைப் பிற புத்திரிகளுடன் சமானமாக கருதி மதிக்காமல் என் கணவனைப் போல என்னையும் அவமதித்த காரணம் என்ன? சொல்வாய்! என்று கேட்டாள். அதற்குத் தக்ஷன் கோபத்துடன், ஓ சதி! உனக்கு இளையவர்களாகிய என் குமாரத்திகள் யாவரும் குணத்திலே சிறந்தவர்கள். உன் கணவனாகிய திரியம்பகனைவிட என் மருமகர்கள் யாவரும் சிறந்த அறிஞர்களாகவும் பலவான்களாகவும் இருக்கிறார்கள். ஆகையால் உங்கள் இருவரையும் போலின்றி அவர்கள் யாவரும் என்னால் போற்றுதலுக்கு உரியவர்களே! உன் கணவனோ பித்துபிடித்து, மயானத்தில் பேய் பிசாசுகளுடன் அக்கினி கூத்தாடுகிறவன். உத்தமலக்ஷணம் சிறிதும் இல்லாதவன், எலும்பு மாலையும் கபால மாலையும் அணிந்தவன். அவன் எனக்குப் பகைவன். ஆகையால், அவனும் அவனுக்கு மனைவியாகிய நீயும் இந்த யாகத்திற்கு வருவதற்குரிய யோக்கியதையற்றவர்கள் என்றான். அதைக் கேட்ட சதிதேவி கோபங்கொண்டு, தக்ஷனை நோக்கி யாகசாலையிலிருந்த அனைவரும் கேட்க, கொடியவனே! சிவபெருமனை நிந்தித்த நீ குருத்துரோகியாகையால், மஹாபாவி! உலக நாயகனாகிய மகேசனுடைய கோபத்திற்கு இரையாவாய்! விரைவில் நீ தண்டிக்கப்படுவாய்! என்று சபித்து தன் தக்ஷ சம்பந்தமான உடலை மாயா சம்பந்தமாக ஒழித்தாள்.

நெடுங்காலமாகப் பார்வதிதேவியை மகளாகப் பெற வேண்டும் என்ற கருத்துடன் ஹிமாசல மன்னன் பெருந்தவஞ் செய்து கொண்டிருந்தான். ஆகையால் சதிதேவி தன் மாயா உடலுள் அவனை அடைந்து, அவனுக்கு மகளானாள்.

முனிவர்களே! சதிதேவி தக்ஷனை வெகுண்டு பிரிந்தவுடனேயே மந்திரங்கள் யாவும் மறைந்தன. யாகமும் நிறைவேறாது என்று உணர்ந்த தேவர்களும் முனிவர்களும் நடுங்கினார்கள். இந்தச் செய்தியை சிவபெருமான் உணர்ந்து, அத்தகைய யாகத்தைச் செய்த தக்ஷன்மீது சினங்கொண்டு தக்ஷõ! நீ என்னையும் என் மனைவியையும் அவமதித்துப் பிற புத்திரிகளையும் மருகர்களையும் போற்றினாயாகையால், நீ மானுடனாகப் பிறக்கக் கடவாய்! அப்போது நீ யாகஞ்செய்ய எத்தனிப்பாய். அந்த யாகத்தையும் யாமே அழிப்போம். உன்னால் போற்றப் பெற்ற மருகர்கள் வைவஸ்வத மனுவந்தரத்தில் மானுடராவார்கள். உன் காரியங்கள் யாவும் விக்கினம் அடைக! என்றும் சபித்து, அவ்வாறே அவர்கள் தோன்றிய காலத்தில் சிவபெருமான் அவர்களை அழித்தார்.

17. வீரபத்திர அவதாரம்

முனிவர்களே! சகல லோக மாதாவாகிய உமாதேவியைக் குறித்து நெடுங்காலம் தவஞ்செய்து புத்திரியாகப் பெறக்கருதிய மலை மன்னன் மனங்களிக்கும்படி, அவ்விறைவியே புதல்வியாகி அவனிடம் வளர்ந்து வந்தாள். சிவபெருமான் அந்தப் பர்வதராஜன் மகளான பார்வதியை மணந்து இமயமலைச் சிகரத்தில் நெடுங்காலம் தேவியுடன் கூடி வாழ்ந்திருந்தார். அநேக யுகங்கள் கழிந்தன. தக்ஷன் சிவபெருமானின் சாபப்படி பிரசேதசு என்பவனுக்கு புத்திரனாகி, மோக்ஷ விருப்பத்தால் அஸ்வமேதயாகஞ் செய்ய விரும்பி, இமயமலையில் முனிவர்களும் சித்தர்களும் நிரம்பிய கங்காத்துவாரம் என்ற இடத்தில் யாகாரம்பம் செய்தான். அந்த யாகத்தில் இந்திரன் முதலிய தேவர்களும் ஆதித்தர்களும் வசுக்களும் உருத்திரர்களும் மருத்துக்களும் பிதுர்க்களும் ஆத்தியர்களும் தூமபர்களும் அஸ்வினி தேவர்களும் பல முனிவர்களும் விஷ்ணு மூர்த்தியும் தத்தமது யாக பாகத்தை ஏற்க வந்தார்கள். எண்ணற்ற முனிவர்களுடன் வந்த ததீசி முனிவர், அங்கிருந்த தேவர்களையெல்லாங்கண்டு, சிவபெருமானைக் காணாததால் கோபங்கொண்டு தக்ஷனை நோக்கி  தக்ஷõ! பூஜிக்கத்தகாதவர்களைப் பூஜித்ததாலும் பூஜிக்கத் தக்கவர்களைப் பூஜிக்காமல் விட்டதாலும் மனிதன் பெரும்பாவத்தைச் சந்தேகமில்லாமல் அடைவான். அசத்துக்களுடைய ஆதரணையைக் கொண்டு சத்துக்களை அவமதித்தால் சர்வேசன் அப்போதே தண்டிப்பான். சர்வலோக நாயகனாகிய சங்கரனை நீ ஏன் பூஜிக்கவில்லை! என்று கேட்டார். தக்ஷன் அந்த முனிவரை நோக்கி, முனிவனே! எருது மீது சவாரி செய்து ஜடைமுடி தரித்த, சூலமேந்திய பதினொரு ருத்திரர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களையன்றி வேறு ஒரு சூத்திரனும் இருக்கிறானோ? என்று கேட்டான். ததீசி முனிவர் கோபங்கொண்டு அடா தக்ஷõ! நீ யாது கூறினை? இந்த யாகத்தே கர்த்தாவாகிய முதல்வனை விடுத்து, பின்னவர்களாகிய பிரம விஷ்ணு முதலியவர்களுக்குப் பூஜை செய்து யாது பயன்? பிரமன் முதலியவர்களைப் படைத்தவனும் பிரகிருதி புருஷர்களுக்குத் தலைவனும் திருமால் முதலிய தேவர்களையெல்லாம் ஏவலாளர்களாகக் கொண்டவனும் தத்துவ ஞானிகளால் உணரத்தக்கவனும் அழிவற்றவனும் அக்ஷர சொரூபனும் பரம் பொருளும் சிருஷ்டியாதித் தொழில்களை நடத்துவோனும் ஆதிமத்தியாந்த ரஹிதனும் மனம், வாக்கு, காயங்களுக்கு எட்டாதவனும், அநாதி புருஷனும், மும்மூர்த்தி சொரூபனுமாகிய சர்வேஸ்வரனே இந்த யாகத்தில் பூஜிக்கத் தக்கவன்.

அந்தப் பகவானையே பூஜிக்க வேண்டும்; அந்தச் சர்வேசன் வராத யாகம் உனக்கு பயனளிக்கமாட்டாது! என்று கூறினார். அதைக் கேட்ட தக்ஷன் முனி சிரேஷ்டரே ! இந்த யாகத்திற்குப் பிரபுவும் சமானரஹிதனுமாகிய விஷ்ணு பகவானுக்குச் சாஸ்திர விதிப்படிப் புனிதமாகிய அவிசைச் சுவர்ண பாத்திரத்தில் மந்திர பூர்வமாகக் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னான். ததீசி முனிவர், முன்னிலும் அதிக கோபங்கொண்டு, தக்ஷõ! சர்வேசனை ஆராதிக்காத இந்த யாகம் யாகம் ஆகமாட்டாது. இது விரைவில் அழிந்து போகக் கடவது! என்று கூறிச் சிவத்தியானத்துடன் தம் ஆசிரமத்தை அடைந்தார். மஹா புத்திசாலியாகிய ததீசி முனிவர் நிரீசுவர யாகத்தைக் காணக்கூடாது என்று சென்றதைப் பார்த்தும், அங்கிருந்த தேவர்கள் யாக அவிசை உண்ணக் கருதியதாலும், தமக்கு நேரிடும் துன்பத்தை அநுபவிக்க வேண்டிய விதிவசத்தாலும் அங்கிருந்து நீங்காமல் இருந்தார்கள். இந்த விவரங்களை உணர்ந்த சர்வேஸ்வரியான உமாதேவி, தன் கணவனாகிய சங்கர பகவானைப் பணிந்து, நம்மை இகழ்ந்து செய்யும் தக்ஷனுடைய யாகத்தை அழிக்க வேண்டும் என்று கூற சிவபெருமானும் தேவியினுடைய வேண்டு கோளுக்கிரங்கி, மகாபராக்கிரமசாலியும் கணங்களுக்கெல்லாம் தலைவனும் ஆயிரம் தலைகளும் ஆயிரங்கணங்களும் ஆயிரங்கரங்களுமுடையவனும் சூலம், டங்கம், வேல், வாள், வில், சக்கரம், வஜ்ஜிரம் முதலிய ஆயுதங்களை ஏந்தியவனும், சந்திரனைச் சிரத்தில் அணிந்து மின்னல்போல விளங்கும், தலைமயிரும் வக்கிர தந்தங்களும் பெருவாயும் சிவந்த நாவும் தொங்கிய உதடுகளும் சமுத்திர கோஷம் போன்ற த்வனியும், புலிதோலுடையும், பிரம விஷ்ணுக்களின் கபாலமாலையை அணிந்தவனும் வீரக்கழல் வாகுவளையம், இரத்தினாபரணங்களும் சரபசார்த்து சிங்கங்களைப் போன்ற பராக்கிரமமும் மதயானை போன்ற நடையும் சங்க சாமரம் போன்ற வெள்ளிய தேகமும், இமாசலம் நடந்து வந்தாற்போன்று முத்து மாலைகளசைய நடந்து வருகையுமுடைய பிரளய காலாக்கினி போன்ற வீரபத்திரனைப் படைத்தார். அந்த வீரபத்திரர், சிவபெருமானைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து அவர் சன்னதியில் இருந்தார். அப்போது உமாதேவியும் தன் கோபத்தால் ஆயிரம் சிரங்களும் கரங்களும் கரிய மேனியுமுடைய காளியைச் சிருஷ்டித்தாள். சிவபெருமானும் பார்வதிதேவியும் வீரபத்திரரை நோக்கி, உனக்கு மங்களம் உண்டாகுக! என்று வாழ்த்தினார்.

அப்போது வீரபத்திரர் சிவபெருமானை வணங்கி, எனக்கு என்ன கட்டளை? என்று கேட்க சிவபிரான், வீரா! பிரசேதச புத்திரனான தக்ஷன் கங்காத் துவாரத்தில் யாகஞ் செய்கிறான். நீ இந்தக் காளியுடன் சென்று அந்த யாகத்தை அழிப்பாயாக! நான் பார்வதிதேவியுடன் ரைப்பிய முனிவரின் ஆசிரமத்திலிருந்து பார்த்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டார். பார்வதிதேவி வீரபத்திரனையும் காளியையும் அணைத்து மூர்த்தர்க்ரஹணஞ் செய்து புன்னகையுடன், குழந்தாய்! வீரபத்திரா! எனக்குப் பிரியமுண்டாக்க, நீ பிறந்தாய். ஆகையால் நீ என் கோபத்தை ஒழிக்க வேண்டும். அது என்னவென்றால், நீ காளியுடன் சென்று, சிவபெருமானைப் பூஜிக்காமல் தக்ஷன் செய்துவரும் யாகத்தை அழித்துத் தக்ஷனையும் அங்குள்ளவர்களையும் கொன்றுவிட்டு வரவேண்டும் என்று கூறினாள். வீரபத்திரர் அவ்விரு முதுகுரவர் சொல்லையும் சிரமேற்கொண்டு காளியுடன் புறப்படும் போது, தனக்குத் துணைவரைப் படைக்க வேண்டும் என்று கருதி, தன் கோபத்தால் தன் உரோமங்களிலிருந்து உரோமஜர்கள் என்ற கணங்களையும் வலது புயத்திலிருந்து நூறு கோடி கணங்களையும் இடது புறத்திலிருந்து மனைவியருடன் கூடிய அநேகம் புத்திர கண்களையும் பாதத்திலிருந்து கடுங்கோபமுடைய அநேக ருத்திரர்களையும் தொடை, பிருஷ்டம், பக்கம், முகம். குய்யம் முதலிய அவயவங்களிலிருந்து எண்ணற்ற கணங்களையும் சிருஷ்டித்தான். அவர்கள் அனைவரும் தன்னைப் போலவே கண்கள், கரங்கள், சிரம் முதலியன ஆயிரங்களாகவுடையவர்களும் அநேக சூலம், வாள், கவு, வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தியவர்களாகவும் ருத்திரனைப் போன்ற தோள் வலிமையுடையவர்களாகவும் விளங்கினர். அவர்கள் கூத்தாடிக் கொக்கரித்துக் கொண்டிருந்தனர். வீரபத்திரர் அவர்களை உடன் கொண்டு ரிடபவாகனமேறி காளியுடன் புறப்பட்டார். ஆயிரம் வாய்களையுடைய பானகம்பன் தன் ஆயிரம் வாய்களிலும் சங்குகளை முழக்கினான். துந்துபிகள் முழங்கின. பத்திர கணங்களுடனும் காளியுடனும் விளங்கிய வீரபத்திரன் உருத்திர கணங்களிடையே விளங்கும். உமாதேவியுடன் விளங்கும் சிவபெருமானை ஒத்திருந்தான். அந்த க்ஷணமே, அவன் தக்ஷன் யாகஞ்செய்யும் இடம்நோக்கி பிரளய காலத்தில் பிரளய கால ருத்திரன் புனங்களை நோக்கி செல்வதுபோலச் சென்றான்.

18. தக்ஷயாகத்தை அடைந்தது

வாயுதேவன் மேலும் தொடர்ந்தான். முனிவர்களே! விஷ்ணு முதலிய மகிமாதி சுபங்களையுடைய தேவர் கூட்டத்தையும் சித்திரத் துவஜங்கள் கட்டித் தர்ப்ப ஆசனங்கள் விரித்து நல்ல சமிதைகளையடைந்து, மூவகை அக்கினிகளுடன் விளங்கும் யாகசாலையையும் விதி விலக்குகளையறிந்த முனிவர்களும், வேதபாகங்களை அறிந்த அத்வாயு முதலிய பெரியோர்களும், அநேக ஆயிரம் தேவமங்கையரும் அப்சர மங்கையரும் வேணு வீணா கானங்களும் வேத கோஷங்களுமாகியவற்றையுங் கண்டு வீரபத்திரன், சிங்க நாதம் செய்தான். அதைக் கேட்டதும் கணநாதர்கள் ஆகாயம் நிறையப் பெருங் கூச்சலிட்டார்கள். அந்த யாகசாலையிலிருந்த தேவர்கள், முனிவர்கள் ஆகியோரில் பலர் பயமடைந்து தங்கள் தண்டம், கமண்டலம், வஸ்திரம் முதலியவற்றை விட்டு விட்டு ஓடினார்கள். வீரபத்திரரின் வீரமுழக்கத்தால் மலைகள் பிளந்தன! பூமி நடுங்கியது. கடல் கலங்கியது. சூரியனும் கிரகங்களும் நக்ஷத்திரங்களும் அக்கினியும் தத்தமது ஒளியிழந்து மழுங்கின. அந்த நிலையில் வீரபத்திரர் காளியுடனும், தன் சைன்னியங்களுடனும், தக்ஷனுடைய யாகசாலையில் புகுந்தார். தக்ஷன், வீரபத்திரரைக் கண்டு மிகவும் பயந்த போதிலும் மேலுக்குப் பயத்தைக் காட்டாமல் தைரியசாலியைப் போல, நீ யார்? இங்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். வீரபத்திரர் துஷ்டனாகிய தக்ஷனைப் பார்த்துச் சிரித்து, தக்ஷனையும் அங்குள்ளவர்களையும் நோக்கி கம்பீரமான தொனியுடன், நாங்கள் மகா மகிமையுடைய சிவபெருமானின் புதல்வர்கள். உன் யாகத்தில் எங்களுக்குச் சேரவேண்டிய பாகத்தைக் கொடுத்துவிடு. ஆனால் இந்த யாகத்தில் எங்களுக்குப் பாகமில்லை என்று சொல்லுவார் களானால் அப்படிச் சொல்லுவார் என்னுடன் போர் புரிய வேண்டும். அல்லது சரியான காரணத்தையாவது சொல்ல வேண்டும்! என்று கூறினார். அப்போது தக்ஷனை முதலாக வைத்து தேவர்கள் வீரபத்திரரை நோக்கி வீரா! உனக்கும் உன் தலைவனான சங்கரனுக்கும் அவிகொடுக்கும்படி ஆதியாகிய வேதங்கள் கூறுமாயின் அவ்வாறே கொடுப்போம்! என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்து வேதங்கள் ஐயகோ! இப்படியுஞ் சொல்வதுண்டா! இது அடாது. நாங்களும் இங்கிருக்க மாட்டோம்! என்றும் வேதங்கள் நான்கும் விரைந்து பிரம்மலோகத்தை அடைந்தன.

வேதங்கள் அவ்வாறு மறைந்த பிறகு வீரபத்திரர் தம் கோபாக்கினியால் யாகசாலையில் தீப்பற்றும்படி தீவிழியால் எரி மூட்டினார். அவருடன் இருந்த கணநாதர்கள், தேவர்களைத் தொடர்ந்து அங்கு அமைந்திருந்த யூபஸ்தம்பங்களில் தேவர்களை உடல் பதைக்கக் கட்டினார்கள். வேதிகைகளை இடித்தார்கள். கும்பங்களை உடைத்துப் பொடி செய்தார்கள். சிலர் யாகப் பசுவைத் தீக்கடைக்கோலால் பாசனம் செய்து கங்காசலத்தைப் பருகினார்கள். அன்னக் குவியல்களையெல்லாம் புசித்தார்கள். நெய்யும் பாலும் தயிரும் சமைத்தனவும் சமைக்காதனவுமாகிய பதார்த்த வகைகள் தானிய வகைகள் முதலியவற்றையெல்லாம் சாப்பிட்டார்கள். தேவர்களே! யாகப்பசுவின் தசையைப் புசிக்க விரும்பினீர்களே, அது சுவையுடையதோ! இது சுவையுடையதோ சுவை பார்த்துச் சொல்லுங்கள்! என்று அவர்களில் ஒருவர் தோட்சதையை அரிந்து ஒருவர் வாயில் திணித்துச் சிரித்தார்கள். அண்டங்குலுங்க கை கொட்டினார்கள். அவியுண்ண வந்தவர்களே என்று சிலர் வாயில் தீக் கொள்ளியைச் செருகி சிரித்தார்கள். இதனிடையில் காளியோ தேவமாதர்களுடைய தோளையும் கூந்தலையும் மூக்கையும் மூளையையும் காதுகளையும் வாளால் அரிந்து, காலால் உதைத்துத் தள்ளினாள். அவ்வாறு வருந்தும் அமரமங்கையர் தங்கள் கணவருக்குச் சம்பவித்த துன்பத்தை உணராதவர்களாய் விரைந்து வந்து தங்கள் துன்பத்தை விலக்கும்படிக் கூவியழைத்தார்கள். நிலத்தில் விழுந்து புரண்டார்கள் அழுதார்கள். இப்படியாகத் தக்ஷ யாகத்திற்கு வந்திருந்த தேவமாதர்களில் காளிகா தேவியால் தண்டிக்கப்படாதவர் ஒருவருமிலர். தேவர்களில், பத்திர கணங்களால் துன்புறாதவர் ஒருவருமிலர்.

19. தக்ஷ யாகத்தை அழித்தது

முனிவர்களே! அந்தச் சமயத்தில் வீரபத்திரக் கடவுள், பெருங்கோபத்துடன் சூலம், வேல், வாள், தண்டம், சக்கரம் முதலிய ஆயுதங்களை ஏந்தி கடலைக்கலக்கிய மந்திரகிரியைப் போல தேவர்களைக் கலக்கினார். ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனைத் தண்டாயுதத்தால் அடித்து, அவனது ஆயிரம் கண்களையும் வீழ்த்தி அக்கினிதேவனின் கைகளையும் நாவையும் துண்டித்து, நிலத்தில் வீழ்த்தி சமுத்திரத்திலுள்ள வடவைத்தீயைக் குளிரச்செய்து, இயமனைப் பிடித்து அவனை உள்ளங்கையால் பிழிந்து, உயிர் பருகி திசையின் மேல் எறிந்து, நிருதியின் தோலையறுத்து, வருணனின் உந்தியைத் தோண்டி, அவன் குடலைக் கூளிகள் மாலையாக அணிந்து கூத்தாடச் செய்து, வாயுவைக் கடலில் வீழ்த்தி, அவன் சேனையை வாளுக்கிரையாக்கி, குபேரனைக் கச்சாங்கட்டி குறவன் கையில் அகப்பட்ட குரங்கு போலாட்டினார்கள். உமாதேவி பாகனே பரம்பொருள் என்று கூறும் எண்ணிறந்த நூல்களை வாசித்து உணர்ந்தும் சிவபக்தியில்லாமல் விஷ்ணுவையே பொருள் என மதித்தபுல்லறிவாளர்களே என்று, தேவர்களை ஒருவரோடொருவர் குழையும்படி பூஷா என்னும் பானுவின் பற்களை உதிர்த்த, பகவானுடைய கண்களை அகழ்ந்து, சந்திரனைக் காலடியில் போட்டு மிதித்து அவனுடலில் இருந்த அமிர்த கிரணங்கள் ஒழுகியோடச் செய்தார்கள். தக்ஷன் மனைவி வேதவல்லி தலைவிரித்து வயிற்றில் அடித்துக் கொண்டு அலறினாள். பேய்களும் பூதங்களும் அரம்பை முதலிய மங்கையரை முத்தமிட்டும் தனங்களை வருடியும் அணைத்தும் புணர்ந்தும் காமவெறி தீர்த்தன. இதைக் காணச் சகியாத யக்ஞன் கலையுருவத்தோடு ஓட முயலும்போது, வீரபத்திரர் வில்லை வளைத்து அம்பெய்து அதன் தலையைக் கொய்தார். தக்ஷனின் புத்திரிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.

இந்தச் செயல்களையெல்லாம் கண்டு மனம் பொறாத விஷ்ணுமூர்த்தி கருடவாகனத்தில் அமர்ந்து, இறவாமலிருந்த இந்திரன் முதலியவர்களைத் துணையாகக் கொண்டு போர் செய்ய வந்தார். அப்போது ஆயிரஞ் சூரியனுக்குச் சமமான காந்தியும் உத்தம லக்ஷணம் கொண்ட குதிரைகளும் அநேக அஸ்திர சஸ்திரங்களும் அமைந்த தேர் ஒன்று ஆகாயத்திலிருந்து இறங்க பிரமன் சாரதியாக வந்து அதை வீரபத்திரர் முன்பு நிறுத்தி வணங்கி, இது சிவபெருமானால் அனுப்பப்பட்டது. இந்த இடத்திற்கு அண்மையிலுள்ள ரைப்பிய முனிவருடைய ஆசிரமத்தில் பார்வதி பரமேஸ்வரர், உமது பராக்கிரமத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லச் சொன்னார் என்று விஞ்ஞாபனம் செய்தார். வீரபத்திரர் அந்தத் தேரில் ஏறி அமர்ந்தார். அதை விஷ்ணு மூர்த்தியும் கண்டார். பாணிகம்பன் சங்கு முழங்கினான். அந்தச் சங்கநாதத்தைக் கேட்ட தேவர்களும் முனிவர்களுக்கும் பயத்தால் குடர்கள் குழம்பின. உடல் நடுங்கின. யக்ஷ வித்தியாதர பன்னக சித்தர்கள் யுத்தஞ் செய்ய விருப்பமில்லாமல் அச்சங்க முழக்கத்திற்கு ஆற்றாதவர்களாய் அகன்றார்கள். வீரபத்திரருடைய தேரைப் பிரமதேவன் விஷ்ணுமூர்த்திக்கு எதிரே கொண்டு நிறுத்தினான். வீரபத்திரர் விஷ்ணுவைக் கண்டு சிங்கமானது நரியைப் பார்த்து அலட்சியமாக நகைப்பதுபோல நீயா இனிப்போர் செய்பவன்? என்று நகைத்தார். அதைக்கேட்ட விஷ்ணு கோபங்கொண்டு சாரங்கமாகிய தம் வில்லைவளைத்து எண்ணற்ற அக்கினிக்கணைகளை விடுத்தார். அம்புகளை எய்த விஷ்ணு மேல் மிகவும் கோபங்கொண்ட வீரபத்திரர், சிவபெருமான் திரிபுர தகனகாலத்தில் ஏந்திய மேருமலையைப் போன்ற வலியவில்லை எடுத்து, வளைந்து நாணேற்றி டங்காரம் செய்து, விஷ்ணுவின் லலாடத்தில் விஷ சர்ப்பம் போன்ற பற்பல பாணங்களைப் பிரயோகித்தார்.

விஷ்ணு மிகவும் கோபங்கொண்டு, இதற்குச் சமமான ஒரு பாணத்தை வீரபத்திரரின் தோள்மீது எய்ய வீரபத்திரர் கோடி சூரியர்களுக்குச் சமமான தீக்ஷண்யமுடைய பாணத்தால் விஷ்ணுவின் தோளிலடித்தார். இவ்வாறு ஒருவரையொருவர் வெல்லவேண்டும் என்று கருதி கடும்போர் செய்தார்கள். அப்போது வீரபத்திரர் ஒரு கணையை விஷ்ணுவின் மார்பில் கடினமாகச் செலுத்தினார். விஷ்ணு பிரஞ்ஞை தவறிப் பூமியில் விழுந்தார். சிறிது நேரத்திற் கெல்லாம் மூர்ச்சை தெளிந்த விஷ்ணு, கருட வாஹனத்தின் மேல் ஆரோகணித்து, தன் பெயர் எழுதிய எண்ணற்ற பாணங்களை படபடவென்று பொழிந்தார். வீரபத்திரரும் தம் பெயர் தீட்டிய பாணங்களை பலவற்றைச் செலுத்தி, அவை ஒவ்வொன்றையும் துண்டித்தார். பிறகு ஒரு கணையை எய்து விஷ்ணுவின் கரத்தில் இருந்த சாரங்கத்தையும் அவரது வாகனமாகிய கருடனின் சிறகுகளையும் வெட்டியெறிந்தார். மஹாவிஷ்ணு தம் மாயாசக்தியால் தேவர்கள் பலரைச் சிருஷ்டித்து, சங்கு சக்கர கதாதரர்களாய் வீரபத்திரர் மீது போர் செய்ய அனுப்பினார். அதைக் கண்ட வீரபத்திரர் முன்பு சிவபெருமான் தமது தீவிழியால் திரிபுரங்களை கணநேரத்தில் சாம்பலாக்கியது போல, அந்த மாயா விஷ்ணுக்களை தம் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். அதைக் கண்ட விஷ்ணு மிகவும் கோபங்கொண்டு இனி எவ்வகையிலாவது வீரபத்திரரை ஜெயிக்க வேண்டும் என்று விஷம் சிந்தும் சக்கராயுதம் ஒன்றை ஏந்தி, வீரபத்திரருக்கு முன்னால் வந்தார். வீரபத்திரர் இடியேறு போலக்கர்ஜனை செய்தார். அதைக் கேட்டதுமே விஷ்ணு சைத்திரீகன் எழுதிய சித்திரப் பதுமை அசையாது நிற்பதுபோல தூக்கியகரத்துடன் ஸ்தம்பித்து நின்றார். அவ்வாறு நிற்கும்போது அவர் என்ன செய்யக் கருதியும், கொம்பில்லாத எருதைப் போலவும் பல்லில்லாத பாம்பைப் போலவும் நகமிழந்த புலியைப் போலவும் எதையுஞ் செய்ய முடியாதவராக நின்றார்.

அதைக் கண்ட இந்திராதி தேவர்கள் விஷ்ணுவுக்குப் பதிலாக வீரபத்திரரை எதிர்க்க முன்வந்தனர். அவர்கள் யாவரும் வீரபத்திரரின் கர்ஜனையில் அங்கேயே அசைவற்று நின்று விஷ்ணுவுக்கு வந்த கதியை இன்னதென்று தெரிந்து கொண்டார்கள். சிலர் புற முதுகுகாட்டி ஓடினார்கள். சிலர் விண்ணிலும், சிலர் கடலிலும், சிலர் மலைக்குகைகளிலும், சிலர் தேவலோகத்திலும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். வீரபத்திரர் செய்த வீரப்பெரும் போரினால் பூமி நடுங்கியது. கடல் கலங்கியது, இரத்த வெள்ளம் யாகசாலை முழுவதும் அழித்து, கடலிற்சென்று கலந்தது. நடந்த யாகமோ அஸ்வமேத யாகம்! அதை நடத்தியவனோ பிரம புத்திரனான தக்ஷப்பிரஜாபதி, சபையோர்களோ தர்மாதிகள், அந்த யாக ரக்ஷகனோ கருடத்துவஜனான  நாராயணன். பாகங்களைப் பெறுவதற்கு நேரில் வந்தவர்களோ இந்திராதி தேவர்கள். இப்படியெல்லாம் இருந்தும் யஜமானனுக்கும் யாகத்துக்கும் அதை நடத்திய ருத்விக்குகளுக்கும் அந்த க்ஷணமே சிரச்சேதனமான பயனுண்டாயிற்று. ஆகையால் வேதத்தில் விலக்கப்பட்டதும், சொல்லப்படாததும் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடாததும் அசத்துக்களால் நல்லது என்று சொல்லப்பட்டதையும் ஒருவரும் ஒருக்காலத்தையும் செய்யக்கூடாது. அவ்வாறு அநேக யாகங்களைச் செய்தாலும் செய்பவன் சிறிது புண்ணியத்தையும் பெறாமல் பெரும் பாவத்தையே அடைவான். பெரும் பாவியேயாயினும் சிவபெருமானைக் குறித்து யாகஞ் செய்தால், அப்பாவங்கள் நீங்கிப் புண்ணியனாவான். புண்ணியவானாயினும் சிவபெருமானைத் தவிர்த்து யாகத்தைச் செய்தவன் ஒரு காலத்திலும் கடைத்தேறமாட்டான். இந்த விஷயத்தில் சந்தேகமே வேண்டாம். ஈஸ்வர பக்தியில்லாதவன் செய்யும் தானம், தவம், ஹோமம் ஆகிய யாவுமே பயனளிக்காது முனிவர்களே, கேட்டீர்களா ஈஸ்வர பக்தியில்லாத நாராயணனும் தக்ஷனும் இந்திரனும் சந்திரனும் வீரபத்திரரால் என்ன கதியை அடைந்தார்கள்?

20. தேவர்களுக்கு அருள் செய்தல்

முனிவர்களே! அந்தச் சமயத்தில் சகல தேவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருந்த வீரபத்திரர், தமக்கு அருகேயிருந்த பத்திரகணங்களை நோக்கி, கணநாதர்களே! இங்குள்ள தேவ முனிவர் முதலியவர்களை விலங்கிடுவீர்கள் என்று கட்டளையிட்டார். இந்திரன் முதலிய தேவர்களும் கண்ணில்லாத முனிவர்களும் விலங்கிடப்பட்டனர். மறுத்தவர்கள் வதைக்கப்பட்டனர். நடந்தவற்றை யெல்லாம் கவனித்த வீரபத்திரரின் இரதசாரதியாகிய பிரமதேவர், சிறிதும் மனம் சகியாமல் வீரபத்திரரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, சிறியோர் செய்த பிழையைப் பொருட்படுத்துவது தங்களுக்கு அழகல்ல. இவர்கள் எளியவர்கள். தயை செய்து இவர்கள் செய்த அபராதத்தை மன்னித்து அருள் செய்யவேண்டும் என்று பலவாறு துதிசெய்ய, அவரும் மனமிரங்கினார். அதனால் முன்பு போரில் இறந்தவர்களும் அஞ்சியோடியவர்களும் நீங்க, மற்றவர்கள் வீரபத்திரமூர்த்தியைத் துதித்தார்கள்.

சிவரூபியே! சிவபக்தனே! சூலபாணியே! ஆயிரஞ் சிரங்களையுடையோய் யக்ஞனைச் சங்கரித்தவனே! எண்ணற்ற தேவர்களை அழித்தவனே! தக்ஷனின் தலையை அறுத்தவனே! திரிநேத்திரங்களையுடையவனே! சந்திரனைக் காலால் தேய்த்தவனே பானுவின் பற்களை உடைத்தவனே! சூரியனின் கண்ணைத் தொலைத்தவனே! விஷ்ணு முதலியோரை பிணியூட்டிய கன்யனே! அரமகளிரைத் தண்டித்தவனே! சரணம் சரணம் க்ஷமிக்க வேண்டும்! என்று பலவகையாகத் துதித்து, நாங்கள் அறிவீனர்களாகச் சிவ நிந்தை செய்த தக்ஷனுடன் சேர்ந்த குற்றத்தை பொறுத்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். வீரபத்திரர் தயாள பூதராய்த் தம் கணங்களால் அவர்களைப் பிணைத்த தலைகளை அவிழ்க்கச் செய்து, அவர்களையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானை அடைந்து சேவித்தார். தேவர்களும் பணிந்தார்கள். அப்போது மஹாதேவராகிய சாம்பவமூர்த்தி, மதியீனர்களே! இதுவரை நீங்கள் செய்த குற்றங்களைப் பொறுத்தோம் என்று கூற அவர்கள் மரணமுற்று மகிழ்வு பெற்று, ஆர்ப்பரித்துக் குதித்துக் கூத்தாடினார்கள். சிவபெருமான் மகிழ்ச்சியுடன் விளங்குவதைக் கண்ட கமலாசனன், அவரைப் பணிந்து சர்வலோக சரண்யா! என் தந்தையே! உம் திருவடியில் வந்து நிற்கும் அடியார்கள் செய்த குற்றத்தை மன்னித்து அருள் செய்தீர். இனி வீரபத்திரரால் உயிர் இழந்த தேவ, யட்ச, கின்னரர், கருட, சித்தவித்தியாதர ரிஷிகள், தவசியோர் யாவரும் உயிர் பெற்றெழும்படித் திருவருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்க சிவபெருமான் தேவியின் திருமுகத்தைப் பார்த்துப் புன்னகை செய்து அவ்வாறே ஆகுக! எனத் திருவாய் மலர்ந்தருளினார். விஷ்ணு முதலாக ஸ்தம்பித்திருந்தவர்களும் கரஞ்சிரம் முதலியன அறுபட்டு வீழ்ந்து கிடந்தவர்களும் இறந்தவர்களும் சுவாதீனப்பட்டும் தம் தம் அவயவங்கள் வரப் பெற்றும் உயிர்பெற்றும் ஒன்றுகூடி, இந்திரன் முதலிய திக்குபாலகருடன் சிவ சன்னதியை அடைந்து சாஷ்டாங்கமாகப் பணிந்தனர். பிரமன், சிவபெருமானை நோக்கி, எந்தையே! எல்லோரும் உயிர்பெற்று எழுந்து விட்டார்கள். இவர்களுக்கு இத்தகைய வினை விளைவித்த கொடியோனாகிய தக்ஷனையும் எழுப்ப வேண்டும்! என்று வேண்ட சிவபெருமான் மனங்களித்து, தக்ஷனுடைய மதியின்மையை எல்லோருக்கும் விளங்கச் செய்யும் பொருட்டு, அவனுக்கு ஆட்டுத்தலை அளித்து எழுப்பினார். தக்ஷன் சங்கரனைப் பணிந்து தலை வணங்கி நின்றான். சிவபெருமான் அவன் மீது தயை வைத்து, அவனையும் ஒரு கணநாதனாக்கினார்.

விஷ்ணுமூர்த்தி, பிரமனுடன் வந்து பணிந்து, அடியேன் செய்த அபராதத்தை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் விஷ்ணுவை முதலாகவுடைய தேவர்களையும் முனிவர்களையும் நோக்கி, நீங்கள் அனைவரும் செய்த குற்றங்கள், உங்கள் அறியாமையால் செய்தவையாகையால் அவற்றை நாம் மனம் பொறுத்தோம். இனி எதற்கும் அஞ்ச வேண்டாம்! என்று அவர்களைத் தேற்றிப் பரிபூரணமான கடாக்ஷம் செய்து விடை கொடுத்து அனுப்ப, அவர்கள் வீரபத்திரரையும் பணிந்து தங்கள் நகரங்களை அடைந்தார்கள். பிறகு உமாதேவி, வீரபத்திரரையும் காளிகாதேவியையும் தம் அருகே அழைத்து, அன்போடு அணைத்து சந்தோஷ வார்த்தைகளைக் கூறிப் பலவரங்கள் அளித்து வீரபத்திரருக்கு ஓர் உலகம் அளித்து விடுத்தாள். சிவபெருமானும் உமாதேவியாரும் தாம் தக்ஷயாகத்துவம்சம் செய்ததைக் காணும்படித் தங்கிய இடத்திலிருந்த ரைப்பிய முனிவருக்கு அனுக்கிரகஞ் செய்து, அந்தர்த்தானமாய்ச் சென்றார்கள்.

21. தேவி கவுர நிறம் பெற்றது

முனிவர்ளே! முன்பு மந்திரமலையானது சிவபெருமான் பார்வதி தேவியாரோடும் கணேசர் முதலிய புதல்வர்களோடும் பரிசனங்களோடும் தன்னிடத்தில் வசிக்க வேண்டும் என்று நெடுங்காலம் பெருந்தவஞ் செய்தமையால், அந்தத் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் உமாதேவியாருடனும் பிரமத் கணங்களுடனும் அந்தப் பர்வதத்தை அடைந்தார். அந்த மந்திர மலையினுச்சியில் வெண்ணிலா விளங்கும் தோற்றமானது அது சிவ கடாக்ஷத்தால் பெற்ற தாவள்யமான முத்துக்குடை போன்றிருந்தது. அந்த மலையில் உச்சியிலிருந்து அருவி ஆறுகளிழியுங் காட்சியானது. அதற்கு மலைகளில் தலைமை, சிவ கடாக்ஷத்தால் உண்டாவது பற்றி மங்கல ஸ்நானஞ் செய்தது போலிருந்தது. அந்த மலைச் சாரலில் கவரிமான்கள் தங்கள் வால்களை அசைத்துக் கொண்டிருந்தது, சாமரை வீசுவது போல இருந்தது. அந்தச் சிறப்புடைய மந்திரமலையில் சிவபெருமான் உமாதேவியாரோடும் கூடி, அநேக காலம் வாழ்ந்திருந்தார். அப்படியிருக்கும்போது சும்பன் நிசும்பன் என்ற இரண்டு அசுரர்கள் பிரமனை நோக்கிப் பஞ்சாக்கினியின் நடுவேயிருந்து அநேக காலம் அன்ன பானாதிகளை வெறுத்து, அருந்தவஞ் செய்தார்கள். அவர்களது தவத்தையும் திடபக்தியையும் கண்ட பிரமன் அவர்கள் முன்பு தோன்றி, தவத்தால் இளைத்த அவர்களுடைய உடலைத் தம் கரத்தால் தடவிப் பூரிக்கச் செய்து, நீங்கள் எதைக் கருதி இவ்வாறு தவஞ்செய்தீர்கள்? அதைச் சொல்லுங்கள் என்றார். சும்ப நிசும்பர்கள் பிரமனைச் சாஷ்டாங்கமாக வணங்கி, இருகரங்களையும் விரித்து, கடவுளே! நாங்கள் இருவரும் இறவாமல் இருக்கவேண்டும். அதற்குரிய வரத்தைத் தர வேண்டும் அல்லது சர்வலோக மாதாவாகிய உமாதேவியாரின் தேகத்திலிருந்து ஒரு கன்னிகை தோன்றின் அந்தக் கன்னியால் நாங்கள் இறக்க வேண்டும். அவ்வாறின்றி உலகினரால் ஒருவராலும் நாங்கள் இறவாத வரத்தைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும் என்று கூறிப் பணிந்து வரங்கேட்டார்கள். பத்மாசனன் அவ்வாறு நிகழும் என்று கூறித் தம்முலகம் சென்றார். அந்த வரத்தால், தருக்கு எய்திய தானவர்கள் இருவரும் தேவர் உலகத்தையடைந்து, இந்திரனை எதிர்த்து, அதனை முறியடித்து, அவனுடைய வளங்களையெல்லாம் கொள்ளையடித்து அமரர்களையும் அரம்பையர்களையும் ஏவலர்களாகித் தேவலோகம் முழுமையும் தங்கள் கட்டளைக்கு உட்பட்டு நடக்கும்படிச் செய்து பெரும் புகழோடு வாழ்ந்தார்கள்.

தேவேந்திரன் முதலிய தேவர்கள் படுகின்ற துன்பங்களைக் கண்ட மலரோன் மனம் வருந்திச் சிவபெருமானிடம் சென்று அவரை வணங்கி, ஜகதீசா! கொடியோராகிய சும்பநிசும்பர்கள் செய்யும் உபத்திரவங்களைத் தாங்க முடியாமல் தேவேந்திரன் முதலியவர்கள் தவிக்கிறார்கள். தேவலோகமும் பூவுலகமும் பெரும்பாடுபடுகின்றன. அமரரும் அரம்பையரும் சிறையிலடைப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் அந்த அசுரர்களை அழிக்கத் தேவரீர் திருவுள்ளஞ் செய்தருள வேண்டும். அதாவது உமாதேவியாரின் திருமேனியில் ஒரு கன்னிகை தோன்றி அவர்களை அழித்தாலன்றி அவர்கள் ஒருவராலும் இறவாதிருக்கும்படியான வரத்தை நானே கொடுத்தேன். அவர்களை விரைவில் அழிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். பிறகு பெருமானிடம் விடைபெற்றுச் சென்றார். பகவான் பிரமன் சொல்லியதை கருத்தில் கொண்டு, உமாதேவியரை நோக்கி, ஹே காளீ (கருநிறமுடையவளே) வருக! என்று அழைத்தார். அதற்கு உமாதேவியார் ஸ்வாமீ! நீரும் அடியாளும் சிறு பிள்ளைகளல்ல. இன்று தான் திருமணஞ் செய்துகொண்டு, நூதனமாகவா ஒருவரையொருவர் முகம் பார்த்தோம்? நன்றாக இருக்கிறதே! இப்போது தான் உமக்கு என்னிடத்தில் வெறுப்பு உண்டாயிற்றோ? உலகத்துப் பிராணிகளையெல்லாம் சையோகத்தில் அழுந்தச் செய்யும் மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து, காவியாடையும் உத்திராக்ஷ மாலையும் பிரம கபாலங்களும் அணிந்து தவவுரு கொண்ட தங்களுக்கும் காம விருப்பம் உண்டாகியிருப்பது விநோதமே! இவ்வளவு காலம் என்னுடன் கூடியிருந்தும், இப்போது நான் அழகற்ற கருநிறமுடையவள் என்றும் இகழ்ந்து விட்டீர்கள்! அங்கக் குறைபாடுகள் ஏதுமின்றி உத்தம லக்ஷணங்கள் எல்லாம் அமைந்திருந்தாலும், சிறந்த ஆடையாபரணங்களை அணிந்திருந்தாலும், அத்தனை அழகுகளையும் கணவன் கண்டு களிக்காத மனைவியானவள், பெண்களில் பதரைப் போன்றவள் என்பதில் ஐயமில்லை. தங்களுக்கு என் கறுமை நிறத்தில் விருப்பமில்லாமல் வெறுப்பு ஏற்பட்டதால் இனி இந்த காருருவை ஒழிக்கும்படித் தங்களைக் குறித்துப் பெருந்தவஞ்செய்து, தங்கள் திருவருளாலேயே பொன்னிற மேனியை அடைந்து தங்களுக்கே மனைவியாகிறேன் என்று கூறிக் கண்களிலிருந்து முத்துக்கள் தெறித்தாற்போல கண்ணீர் உகுத்தாள். தேவியின் துயரைக் கண்ட சிவபெருமான், மனஞ் சகியாமல் தேவியைத் தம் இருகரங்களாலும் அணைத்துக் கொண்டு, பெண்ணே நீ வருந்த வேண்டாம். நான் விளையாட்டாக அழைத்தேனே தவிர, வேறொன்றுமில்லை. இதற்காக நீ கவலைகொள்ளவும் வேண்டாம். தவமும் செய்யவும் வேண்டாம். நாம் இருவரும் கலந்திருந்தாலன்றி உலகம் விருத்தியடையாது. ஆகையால் நீ உன் கோபத்தைத் தணித்துக் கொள்ளவேண்டும் என்றார்.

உமாதேவி தன்னை அணைத்துக்கொண்டிருந்த ஸ்வாமியின் கரங்களை மெல்ல நெகிழ்த்தி, இப்படித்தான் தாங்கள் காலமெல்லாம் என்னை ஏத்தி, ஆசை போலக்காட்டி, உமது காலத்தைக் கழிக்கிறீர் ஒன்றும் வேண்டாம். நான் இனி வேறொரு தேகத்தைப் பொன்னிறமாக அடையவேண்டுகிறேன் என்று கூறி, சிவபெருமானை முறைப்படி வலம் வந்து வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டு இமயமலையை அடைந்தாள். அங்குள்ள ஓர் ஏரிக்கரையில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதை வேதாகம விதிப்படி பூஜை செய்து ஒரே மனதாக நித்திரை, அன்னம், ஆகாரம் முதலானவை நீக்கி அவ்விடத்தில் தவத்தில் அமர்ந்தாள். அம்மை தவஞ் செய்த இடத்தின் அருகே ஒரு பெரிய வேங்கைப் புலி, கைகால்களில் இயக்கமில்லாமல், பசியால் வருந்திக்கொண்டிருப்பதைத் தேவி கடைக்கண் சாத்தியருளினாள். அதனால் அந்தப் புலி தன் ஆணவம் முதலிய மலங்களும் பிணிகளும் நீங்கிப் பேருணர்வு பெற்றுப் பண்டைய ஞானத்துடன் இவள் பரமேஸ்வரி என்றும் தெரிந்து கொண்டு இங்கு நான் வந்ததும் தேவி இங்கு வந்ததும் என் பாக்கியம் தான்! என்று பரம சந்தோஷமடைந்தது.

முனிவர்களே! தேவியின் செயல்கள் இப்படியிருக்க சும்ப நிசும்பர்கள் செய்யும் உபத்திரவங்களைச் சகிக்காத தேவர்கள் பிரமதேவனை நோக்கி, பிதாமகனே! எங்களையும் படைத்து இந்த அசுரர்களுக்குப் பெரும் வரங்களையும் கொடுத்து எங்களைத் துன்புறுத்துவது உமக்கு நன்றோ? இத்துயர் நீங்க அருள்புரிய வேண்டும்! என்று முறையிட்டார்கள். பிரமதேவன் அமரர்களை யெல்லாம் அழைத்துக்கொண்டு இமயமலையை அடைந்தான். இமயத்தின் உச்சியில் ஏறித் தேவி செய்யும் தவத்தின் மகிமையால், அங்கிருந்த மரங்கள் ருதுவேற்றுமையில்லாமல் மொட்டு மலரும் காயும் கனியும் நிரம்பப்பெற்றும், பசும்புற்கள் செழித்து வளர்ந்தும் மிருகங்கள் வேற்றுமையன்றி உறவு கொண்டும் எல்லா வனப்புகளும் பொருந்தி விளங்கியது. அந்தத் தபோவனத்தை அடைந்து, பிரமனும் அவருடன் வந்த அமரர் கூட்டத்தாரும் பணிந்தார்கள். தேவர்களும் வேதங்களும், முனிவர்களும் தவஞ்செய்து தரிசித்தற்கு அரிய சர்வ ஜகன்மாதாவாகிய நீ யாது கருதித் தவஞ் செய்கிறாய்? தாயே! தவச்செயல் என்பது இத்தகையது நியமங்களையுடையது என்று எங்களைப் போன்றோர் உணர்வதற்காக இவ்வாறு தவஞ் செய்து காட்டுகிறாயோ? உன் உள்ளத்திலுள்ள கருத்து என்ன? என்று கேட்டார்கள். உமாதேவி பிரமனை நோக்கி, யான் எனது கரிய உருவத்தை ஒழித்துப் பொன் உருவை அடைய விரும்பித் தவஞ் செய்கிறேன். இது விஷயத்தில் உன் கருத்து என்னவோ? என்று கேட்டாள்.

பிரமதேவன் தேவியைப் பணிந்து, தாயே! இதற்காகவா தவஞ் செய்வது? நீ உன் சரீரத்திலிருந்து நீங்கிப் பொன் உருவையடைந்து, முன்பிருந்த உருவால் ஒரு கன்னிகையைப் படைத்து, இந்தத் தேவர்களை அலைத்துக் கொண்டிருக்கும் சும்ப நிசும்பர்களைத் தொலைத்து, அவர்களால் தேவர்களுக்கு உண்டான துயரை அகற்றி, தேவர்களுக்குச் சுகத்தை உண்டாக்குவாயாக! என்றார். உடனே உமாதேவி தன் காருருவை விட்டுப் பொன்மலை போன்ற பேருருவங் கொண்டாள். அப்போது தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். ஈஸ்வரி, வீழ்த்திய அந்தக் கரியவுருவம் எட்டுக் கரங்களையும் பாசம், அங்குசம், தண்டம், சூலம், வாள், வேல், வஜ்ஜிரம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி, உலகிலுள்ள கொடியவர்களைச் செருக்கும் ஆற்றலுடைய துர்க்கையாகி, ஈஸ்வரியைப் பணிந்து அவள் எதிரில் கை கட்டி நின்றாள். அப்போது பரமேஸ்வரி, அத்துர்க்கையை நோக்கி, அடிப்பெண்ணே! நீ பிரமனுடைய கட்டளையை மீறாது, அவன் சொற்படி நின்று, நன்மை செய்வது என்பதைப் பற்றிச் சிறிதும் அறியாத அசுரர்களை ஹதஞ் செய்து, தேவர்களுக்கு நன்மை செய்வாயாக! என்று உரைத்தாள். அப்போது பிரமன், ஒரு சிங்கத்தைச் சிருஷ்டி செய்து, அவளுக்கு வாகனமாகக் கொடுத்து, ஆகாயமளாவிய விந்திய மலையில் வாசஞ் செய்து, தேவமானவர்களின் மாமிசத்தை யுண்டு, உலகத்தைத் துன்புறுத்தும் அசுரர்களை அழிக்க வேண்டும் என்று கூறினார். துர்க்கை உடனே தன் சிங்க வாகனத்தில் ஏறியமர்ந்து அநேகம் குழைகளையுடைய விந்திய மலையை அடைந்து, அசுரர்களுடன் பலவகையாகப் போர் செய்து, அவர்களை வென்று, தேவர்கள் தினந்தோறும் தன்னைப் பணி செய்து, வாழ்த்தும்படி வசித்திருக்கிறாள்.

22. கவுரி மந்திரமலையை அடைந்தது

முனிவர்களே! உமாதேவியார் பிரமனை நோக்கி, பிரமனே! இதோ இருக்கும் புலியானது யான் தவஞ்செய்ய இந்த இடத்திற்கு வந்தது முதல் என்னை விட்டுப் பிரியாமல் இங்கேயே ஒரு காவல்காரனைப் போல இருந்து வருகிறது. இந்தப் புலி, நோயுற்று கால்களில் வலுவிழந்து, நடக்கவும் சக்தியற்று துன்பத்தால் தவித்தது. அதைக்கண்டு மனஞ்சகியாத நான், அதன் நோயை அகற்றினேன் என்று கூறினாள். பிரமன் தேவியைப் பணிந்து, அன்னையே! இஃது ஒரு ஓர் புலி என்று எண்ணற்க. ஓர் அசுரன் தன் மாயையால் புலியுருவ மேற்று இருக்கிறான். பாம்புக்கும் பால் வார்த்தாற்போல இந்த தீயவனுக்கு அருள் செய்து விட்டாயே! இது தர்மமல்ல. இவனால் யாருக்கு என்ன தீங்கு விளையுமோ? என்றான். அதற்கு ஸ்ரீகவுரி, பிரமனை நோக்கி, அசுரனாக இருந்தால் தான் என்ன? அவனும் தமது படைப்புத்தானே! எந்தப் பிறவியாக இருந்தாலும் அந்தப் பிறவி துயரத்தால் அவதிப்படும் போது, அந்த அவதியைத் தன் வினையே என்று கருதாமல், அந்த வினையையும் என்னால் நீக்கமுடியும் என்று பூரணமாக நம்பி வேண்ட, அந்தப் பிராணியைக் கண்ட நான். மனங்கனிந்து இந்த வேங்கைவரி புலியின் நோயைத் தீர்த்தேன், என்று திருவாய் மலர்ந்தருளினாள். அதைக் கேட்ட பிரமன், தேவியைப் பணிந்து, தேவி! உன் திருவருள் இந்தக் கொடிய பிராணியின் மீது பரிபூரணமாக இருப்பதை அறியாமல் நான் கூறியதை மன்னித்தருள்வாயாக! உனது திருக்கமலத் தாள்களில் பக்தியுடையவர்கள், பெரும் கொடும்பாவிகளேயினும், சிறிதும் துக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள். உன் திருவடிக்கு அன்பு செய்யாதவர்கள் மகா புண்ணியசாலிகளாயினும், எண்ணற்ற யாக தவங்களைச் செய்தவர்களாயினும், இவற்றால் சிறிதும் பயனடைய மாட்டார்கள்! உன் திருவருள் பிரகாசமுண்டானால் துரும்பு கூட பிரம பட்டத்தை அடையும். உன் திருவருளில்லையென்றால் பிரமனும் தன் பதவியை இழந்து துரும்பாவான். நீயே உலக சிருஷ்டியாதி செயல்களுக்கெல்லாம் ஏகத்தலைவி! ஆகவே, உன் கிருபை இருந்தால், இப்புலியுருவைக் கடையேறச் செய்க! என்றார். பிறகு, தேவியிடம் விடைபெற்று, தம்முடன் வந்த தேவர்களுடன் தன் மனோவதி நகரை அடைந்தார். பிறகு கவுரி தேவி அந்தப் புலியைத் தன்னுடன் வரச் செய்து, தன்னைக் குமாரியாகக் கொண்ட தாய் தந்தையரிடம் விடைபெற்று, அநேகம் மங்கையர்கள் பணி செய்யத் தனது பொன்னிற மேனியுடன் மந்திர மலையை அடைந்தாள்.

23. சோமநந்தியின் சரிதம்

முனிவர்களில் சிறந்தவர்களே! தேவி கவுரி மந்தர மலையை அடைந்த காலத்தில், சிவபெருமான் முதலிய யாவருக்கும் உண்டான மகிழ்ச்சியை என்னால் வர்ணித்துச் சொல்ல இயலாது. கவுரி மந்தரமலையை அடைந்ததுமே, நந்திதேவர் முதலிய சிவகணநாதர்கள் அங்கு சென்றார்கள். பானுகம்பன், சங்குகன்னன், குண்டோதரன் முதலிய கணத்தலைவர்களும் பலகோடி உருத்திரர்களும் தேவியைப் பணிந்து, பற்பல வாத்தியங்களை முழக்கினார்கள். தேவ துந்துபிகள் முழங்கின. அப்சர மங்கையர் நடனமாடினர். நாரதர் வீணாகானஞ் செய்தார். தேவ முனிவர் வாழ்த்தினார்கள். அரம்பையர்கள் மங்களகீதங்களைப் பாடினார்கள். இவ்விதமாக அனைவரும் மகிழ்ந்திருக்க, தேவி கவுரி, சிவசன்னதிக்குள் நுழைந்து சிவபெருமானைப் பணிந்து எழுந்தாள். அப்போது சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து, தேவி கவுரி! இப்போது தான் உன் கோபம் மாறியதோ? என் சொல்லுக்கும் கோபம் கொள்ளலாகுமோ? நாம் இருவருமே மாறுபட்டோமானால் உலகம் யாவுமே அக்கினியால் அழிந்துவிடும். என்னுடைய உருவமோ அக்கினி! உன் உருவமோ சந்திரன்! நீ என்னுடன் கூடியிருப்பதே உலக விருத்திக்குக் காரணமாகும். அக்கினியும் சோமனும் சம்பந்தப்பட்ட இந்த உலகம், சொல்லும் பொருளுமாகிய இவற்றின் தன்மையேயாகும். அவற்றில் நீ சொல்மயம். நான் பொருள்மயம். நீயே வித்தை! யானோ அந்த வித்தையடையும் ஞானம்! நீயே என் ஆணையாகையால், நீ என் ஆணையைக் கடந்தால் நான் ஈஸ்வரனாக விளங்க முடியுமா? இத்தகைய நியாயமிருக்க, நீ என்னை நீங்கும் வகையாது! தேவர்கள் துயரம் அகன்று, அவர்களுக்குச் சுகமுண்டாகும்படி விநோதார்த்தமாக உன்னைக் காளீ என்று அழைத்தேன். அதற்கு நீ சினந்து கொண்டாய்! அதுவும் உலகத்திற்கு உதவியாயிற்று என்று கூறினார்.

அதைக் கேட்ட கவுரி மனங்களித்து புன்னகை செய்து தான் தவஞ்செய்யும் போது துர்க்கை தோன்றியதும் அவளால் சும்பநிசும்பர்களைக் கொன்று, தேவர்கள் மகிழ்ச்சியடைந்ததும், அவனைப் பிரமனது கட்டளையில் இருத்தியதும் ஆகிய அனைத்தையும் கூறி, பிறகு சிவபெருமானைப் பணிந்து, எம்பெருமானே! நான் தவஞ்செய்து கொண்டிருக்கும் போது, இந்தப் புலி என்னைப் பணிந்து, எனக்குக் காவல்புரிந்து, தான் உஜ்ஜீவிக்கக் கருதி என் அருகிலேயே வசித்திருந்தது. இதை நான் என்னுடன் கொண்டு வந்தேன். ஆகையால் இதுவும் ஒரு கணநாதனது நம் நந்தியோடு வாயிற்படிக் காத்துக் கொண்டிருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமான் அந்தப் புலியின்மீது மனமிரங்கி அருள்செய்ய, அது கஞ்சுகம் பூண்டு, பொற் பிரம்பேந்தி, வாளும் தரித்து, நந்தி தேவருடன் வசித்து, அதிகாரஞ் செலுத்தும் சோம நந்தி என்ற பெயரைப் பூண்டது. அதைக் கண்ட அமரர்களும் முனிவர்களும் ஆனந்தமடைந்தார்கள். உமாதேவியும் பெரிதும் மகிழ்ந்தாள். சிவபெருமான் தேவி கவுரிக்கு, அநேக ஆபரணங்களும் மலர் மாலைகளும், பீதாம்பரங்களும் அணிவித்து, தேவியுடன் கூடி வாழ்ந்திருந்தார் என்று வாயுதேவன் கூறினார்.

24. உலகம் அக்கினி சோமமயம்

இந்தப் பிரபஞ்சம் அக்கினி சோமாத்மகமாகவும், சப்தார்த்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது என்றும் சிவாக்ஞையே சிவசக்தி என்றும், சிவபெருமான் உமாதேவிக்குக் கூறியதாகச் சொன்னீர்களே! அந்த விஷயத்தைச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டும் என்று முனிவர்கள் கேட்க, வாயுதேவன் சொல்லத் துவங்கினார்.

முனிவர்களே! அக்கினி என்பது ஈஸ்வர சம்பந்தமான கோர தேஜோரூபமாகும். சோமம் என்பது சிவசக்தியின் அமிர்தரசஸ்வரூபம். அக்கினியில் அமிர்தம் உண்டாவது அதனால் அந்த அக்கினி விருத்தியடைதலும், அந்த அக்கினியிலேயே அவியைச் சொரிவதால் பயிர் உண்டாக மழை பொழிதலுமாகும். இந்தக் காரணங்களால் உலகம் அக்கினி சோமாத்மகம் ஆகும். அக்கினியானது அமிர்தத்துடன் ஸ்தூலசூஷ்மங்களாகி, நெருங்கிய பூதம் முதலியவற்றுடன் பொருந்திச் சாரமாகவும் ஒளியாகவும் இருக்கும். ஒளி சூரியனும் அக்கினியுமாகும். அமிர்தமோ சந்திரனும் அலைகள் பொருந்திய தண்ணீருமாகும். அவை அவ்வாறே உலகுக்குப் பயன்படும் அக்கினியே சிவமயம். அமிர்தமே சக்திமயம். இந்த அக்கினி சோமாத்மகமாகவே உலகம் விளங்கும். அக்கினிகளிலிருந்து அமிர்தம் தோன்றி, அந்த அக்கினியிலேயே ஒழுகும். ஆகையால், உலகம் சிவசக்திமயமாகும். அந்த அக்கினியால் உலகத்தை (நான் என்ற அகப்பற்றையும் எனது என்ற புறப்பற்றையும்) நீறுப்படுத்திய பஸ்மத்தை அணிந்தவர்கள். பாவம் ஒழிந்து சிவமயம் ஆவார்கள். மூலாதாரத்திலுள்ள அக்கினியால் தேகத்தைக் கொளுத்தி அந்தச் சாம்பலை மேலேயுள்ள அமிர்தத்தால் நனைத்தவர்கள் மரணத்துயரம் ஒழிந்து நித்திய முக்தியை அடைவார்கள். யோகப் பயிற்சியையுடைய பெரியோர்கள் தங்கள் யோக வல்லமையால் சூரியகலை, சந்திரகலை என்னும் இரண்டையும் அக்கினி கலையினால் ஒடுக்கி, அந்த அமிர்தத்தைப் புசித்து, நித்தியானந்த மோக்ஷத்தை அடைவார்கள்.

25. ஷடத்துவாக்கள்

வாயுதேவன் மேலும் கூறுகிறார், முனிவர்களே! இந்த ஜகம் முழுவதும் சப்த அர்த்த ஸ்வரூபமாய் இருக்கிறது என்று சொல்லும் விஷயத்தில் ஷடத்துவாக்களின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறேன். கேளுங்கள். சப்தம் இல்லாத பொருள் உலகத்தில் கிடையவே கிடையாது. அர்த்தம் இல்லாத சப்தமும் கிடையாது. ஆகையால் அந்தந்தச் சப்தங்களுக்கு அந்தந்த அர்த்தங்கள் அநாதியாகவே, சங்கேதங்களாக விளங்குவன. இது பிரகிருதியின் பரிணாமம். இது சப்தம் என்றும் அர்த்தம் என்றும் இரண்டு பிரிவுகளாக இருக்கும். பரமாத்ம ஸ்வரூபிகளான சிவ சக்திகளின் விபூதியாகத் தெரிந்து கொள்வீர்களாக. இதில் சப்தஸ்வரூபமான விபூதியானது ஸ்தூலம் என்றும் சூஷ்மம் என்றும் பரை என்றும் மூன்று வகைப்படும். இவற்றில் ஸ்தூலம் என்பது கேட்பது, சூஷ்மம் என்பது மனத்திலே சிந்திப்பது. பரை என்பது சிந்தனையற்று இருப்பது. அந்தப் பரையானது கிரியாசக்தி, ஞானசக்தி, இச்சா சக்தி (செயலாற்றல், அறிவாற்றல், விழைவாற்றல்) என்று மூவகைப்படும். அதில் பரையானது சிவதத்துவத்தை ஆஸ்ரயித்தலால் கிரியாசக்தியும், யோக சம்பந்தத்தினால் ஞான சக்தியும், ஈஸ்வர இச்சையுடன் கூடியிருப்பதால் இச்சா சக்தியுமாகும். இந்தப் பரையானது மூன்று சக்திகளாக இருப்பதால் சக்தி தத்துவம் என்ற பெயரைப் பெற்று, எல்லா காரணங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. இதற்குக் குண்டலினி என்றும் மாயை என்றும் தூய்மையான முக்கிய மார்க்கம் ஸ்வரூபமாகவுள்ள சதி என்றும் பெயர்களுண்டு. அந்தப் பராசக்தியே ஆறு அத்துவாக்களாக விளங்கும். அவற்றுள் சப்த அத்துவாக்கள் மூன்று. அர்த்த அத்துவாக்கள் மூன்று. இந்த ஷடத்துவாக்களும் லயபோகாதி காரங்களைச் செய்வன. சப்த அத்துவாக்கள் மந்திர அத்துவா, பத அத்துவா, வர்ண அத்துவா என்ற மூன்றாகும். அர்த்த அத்துவாக்கள், புவன அத்துவா, தத்துவ அத்துவா, கலை அத்துவா என்ற மூன்றாகும். அத்துவாக்கள் ஆறும் ஒன்றுக்கொன்று வியாப்பிய வியாபகத்துவம் உடையன. மந்திரங்கள் பதங்கள் ஆக்கப்படுவதால் மந்திர அத்துவாவைப் பற்றிய பதாதத்துவா வியாபரித்துள்ளது. பதங்கள் வர்ணத்தால் (எழுத்தால்) சேர்க்கப்படுவதால் பதாத்துவாவை வர்ணாத்துவா வியாபரித்துள்ளது. அண்டார்ந்தர்க்கதமான அநேக புவனங்களிலும் சிவாகமங்களில் சொல்லப்பட்டுள்ள அநேக புவனங்களிலும் வர்ணங்கள் பிறத்தலின், வர்ணாத்துவாவை புவனாத்துவா வியாபரித்துள்ளது. சாங்கியயோகப் பிரசித்தமான தத்துவங்களிலும் சிவாகமத்திற்கு பிரசித்தமான தத்துவங்களிலும் அநேக புவனங்கள் பிறத்தலின் புவனாத்துவாவைத் தத்துவாத்துவா வியாபரித்துள்ளது. தத்துவாத்துவாவைக் கலாத்துவா வியாபரித்துள்ளது.

பிரகிருதியானது நிவ்ருத்தி பிரதிஷ்டை வித்தை சாந்தி சாந்தியதீதை என்ற ஐந்து கலைகளாகி, ஷட் அத்துவாக்களையும் வியாபரித்துள்ளது. சிவத்ததுவமானது தன் சக்தியால் எல்லாத் தத்துவங்களையும் வியாபரித்துள்ளது. சிவ சொரூபத் தாலேயே மண்ணானது குடமாவதுபோல பிரபஞ்சத்தை நடத்துகிறது. சிவதத்துவமே ஷடத்துவாக்களால் அடையத் தக்கது. சக்திகளில் ஐந்து வகையை இனிச் சொல்லுகிறேன். நிவிருத்தியானது ருத்திர பதம் வரையும் சுத்தியாம் வித்தையானது வித்யேசுரபதமளவும் சுத்தியாம். சாந்தியானது அத்துவா அந்தமளவும் சுத்தியாம். சாந்தியாத்தையானது பரம வியோமமளவும் சுத்தியாம். இந்த ஐந்து கலைகளால் எல்லா பிரபஞ்சமும் வியாபரித்துள்ளது. ஆகையால் சாதகர்கள் இந்த விஷயங்களை நன்றாக அறிய வேண்டும். அத்துவாக்களின் தன்மையறியாது. முக்தி பெறக்க ருதுபவன் பயனடையமாட்டான். சக்தியின் வியாப்தியை உணராது தத்துவங்களும் அவற்றின் வியாப்தியும் விசுக்தியும் தெரியமாட்டாது. பரமசிவனுடைய வாமபாகத்தில் எல்லாவற்றுக்கும் காரணபூதமாக விளங்கும் சக்தி என்பது சிவ சம்பந்தமான ஆக்ஞை. இது ஆன்மாவின் மாயையும் அல்ல, விகாரமுமல்ல! பந்துவும் அல்ல முக்தியும் அல்ல. ஆனால் பந்த முக்திகளை உண்டாக்குவதும் சகல பாக்கியங்களையும் கொடுப்பதும், ஈஸ்வரனை ஒருபோதும் பிரியாததும், சிவத்தின் பாவானு குணமாகத் தருமங்களை ஆஸ்ரயிப்பதுமாகும். அந்தச் சர்வேஸ்வரனுக்கு அந்தச் சக்தியாகக் கிரகஸ்தன் என்றும், அந்தச் சர்வேசனால் அதற்குக் கிருகிணி என்றும் எப்போதும் பெயர்கள் விளங்கும். இந்த இருவருக்கும் எல்லா பிரபஞ்சமும் பிள்ளைகள். ஆகையால் ஜகம் முழுமைக்கும் சிவபெருமானே கர்த்தா என்றும் சிவசக்தியே காரணம் என்றும் இருவருக்கும் பேதம் உண்டாயிருக்கும். சிலர், சிவபெருமானே ஆண் பெண் வடிவாக இருக்கிறான் என்றும், சிலர் சூரியனிடத்தில், ஸம்வாய சம்பந்தத்தால், எப்படிப் பிரபை வேறுபட்டிருக்குமோ, அப்படியே பரமசிவனிடத்தில் சித்ரூபமான பராசக்தி வேறாக விளங்கும் என்றும் சொல்வார்கள். ஆனால் பரமசிவனோ யாவற்றுக்கும் காரணன். அவனுடைய ஆக்ஞாரூபமே பரமேஸ்வரி. ஆக்ஞா ரூபமான பரமேஸ்வரியால் பிரேரிக்கப்பட்ட சிவசம்பந்தமான மூலப்பிரகிருதி அழிவற்றதாக இருக்கிறது. அதற்குத்தான் மஹாமாயை என்றும், மாயை என்றும், பிரகிருதி என்றும் மூன்று குணங்கள் விளங்கும். அது காரிய பேதத்தால், மேலே சொன்ன மூவகைப் பேதமுற்று ஷடத்துவாக்களை உண்டாக்குகிறது. சப்தார்த்த சொரூபமான இந்த அத்துவா ஆறுவகைப்பட்டு ஜகத் ஸ்வரூபமாக இருக்கிறது. இதையே எல்லா சாஸ்திரங்களும் விரித்துக் கூறி நூல்கள் பெருகியுள்ளன.

26. சிவ விஜயம்

இவ்வாறு வாயுதேவன் சொல்லி வரும்போது, முனிவர்கள் அவரை நோக்கி, தேவரே! பிரமனின் மாணவராகிய தாங்கள் கூறியயாவும் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் பேரறிவினையும் ஊட்டுவித்தன. தாங்கள் கூறிய இயல்பினையுடைய எல்லாம் வல்ல இறைவனாகிய சிவ பகவான் பற்பல கர்மங்களுக்காகப் பற்பல திருவுருவங்களைப் பெற்றிருத்தல் தகுதி தானே என்பதையும் எங்களுக்கு விளங்கும்படி உரைத்தருள வேண்டும்! என்று கேட்க வாயுதேவன் கூற துவங்கினார்.

முனிவர்களே! காளகண்டமும் சடாடவியும் சர்ப்ப ஆபரணமும் புலித்தோலுடையும் யானைத்தோற் போர்வையும் சடையும் சந்திர சூடமுமுடைய அந்தப் பகவான் எந்தக் காலத்திலும் அனைவருக்கும் திருவருள் புரிந்துகொண்டேயிருப்பவன் அல்லன். எண்ணற்றோரை அவரவர் முறை தவறி நடக்கக் கண்டு, தண்டித்தும் இருக்கிறான். அவன் செய்த விஜயங்களில் சிலவற்றைச் சொல்கிறேன் கேட்பீர்களாக.

முன்பு ஒரு காலத்தில் பிரமனும் விஷ்ணுவும் ஒருவருக்கு ஒருவர் போர் செய்து தங்களுக்குள் ஒருவருக்கொருவரே பெரியோர் என்று உலகை அழிக்க எத்தனிக்க சிவபெருமான் அவர்களுடைய விவாதத்தை ஒழிக்கக் கருதி அங்குப் பிரசன்னமாக பிரமதேவன் தன் அகந்தையால், நீ எனது புருவ மத்தியில் உதித்த புதல்வன் அல்லவோ! என்று கூறி நடுத்தலையால் சிரிக்க, அவனுடைய நடுத்தலையைத் தன் நக நுனியால் கிள்ளி எறிந்தார். அன்று முதல் பிரமன் நான்முகனானான். ஒரு காலத்தில் தானவர் தலைவனான ஹிரண்ய கசிபு என்பவன் தேவர்களுக்கு துன்பமிழைத்து வந்தான். அப்போது திருமால் நரசிங்கமாக அவதாரஞ் செய்து தம் கணக்கற்ற கைகளால் அவனைப்பற்றி மடியில் வைத்துக் கொண்டு அவன் உடலைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து, உலகம் அழியவும் தேவர்களும் முனிவர்களும் நடுங்கவும் அனர்த்தம் செய்வதைக் கண்டு தேவர்கள் முறையிட அப்பொழுதும் சிவபெருமான், எண் நாற்புள்ளாகிய சரபத் திருவுருவம் எடுத்து, அந்தச் சிங்கத்தைப் பற்றி அதன் சர்மத்தை உரித்து ஆடையாக அணிந்தார். சிவபிரான் தன் மருமகன் என்றும் ஜகன் மாதாவாகிய பார்வதி தன் மகள் என்றும் இறுமாப்படைந்த தக்ஷனையும் அவனது யாகத்தையும் அங்கு வந்த தேவர்களையும் அழித்தார். மேலும் தராகன் புதல்வர்கள் மூவரும் பிரமனிடம் வரம் பெற்ற சிறப்பால் பொன், வெள்ளி, இரும்பாலாகிய மூன்று மதில்களுடைய முப்புரத்துடன் நினைத்த இடத்திற்கு சஞ்சரித்து ஆங்காங்குள்ள பிராணிகளையும் மரஞ் செடி கொடிகளையும் அழித்து வருவதைக் கண்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் பூமியே இரதமாகவும் சாரதியாகமுடைய நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாகவும் ஆதிசேடனே நாணாகவும், விஷ்ணுவே பாணமாகவும் அக்கினியே அதன் கூர்முனையாகவும், வாயுவே அந்த அம்பிற்றொடுத்த சிறகாகவும் பிறதேவர்களைப் பிற கருவிகளாகவுங்கொண்டு திரிபுரத்தை அணுகினார். அப்போது தேவர்கள் யாவரும் நம்மால் தான் திரிபுரம் அழிக்கப்படும் என்பதாகத் தனித்தனியே நினைத்து இறுமாந்திருந்தனர்.

அதையுணர்ந்த சிவபெருமான் தம் நெற்றிக் கண்ணாலேயே அந்த முப்புரங்களையும் எரித்தார். இதுவேயல்லாமல் தேவலோகத்தில் இருந்த சிவ பசுக்கள், ஓயாமல் பாலை ஒழுக்கிப் பயன்படக் கருதும்போது, சங்கரன் அவற்றை உற்றுப் பார்த்து எரித்துவிட்டார். ஜலந்தரன் என்ற அசுரன் ஒருவன் பிரம, இந்திராதி தேவர்களை வென்று, சிவபெருமான் ஒரு கிழவரைப் போல உருவங்கொண்டு அவனை வழிமறித்து எங்கே செல்கிறாய்? என்று கேட்டு அறிந்து, நீ சிவனை வெல்வதற்கு முன்பாக, நீ உண்மையில் அத்தனை வலுவுடையனவன்தானா என்று பரீட்சித்துப் பார்த்துக் கொள்ள வேண்டாமா? என்று கூறி தம் பாதத்தால் நிலத்தில் வளையமாகக் கீறி, இதை எடுத்து உன் தலைமீது வைத்துத் தாங்குவாயானால் நீ பலவான் என்பதில் சந்தேகமாகாது! என்றார். ஜலந்தரன் பூ! இதுதான் பெரிது! என்று இறுமாப்புடன் அதைத் தோண்டியெடுத்து மார்பிலும் தோளிலும் அணைத்து, சிரத்தின் மேல் அமர்த்த, அது சக்கராயுதமாகி, அவன் தலையிலிருந்து இரு பிளவாக அவனுடலைப் பிளந்தது. அதனால் ஜலந்தரன் ஒழிந்தான். மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், சிவபூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அவருடைய வாணாள் கழிய இயமன் அவரை அணுக, அவர் சிவபெருமானை வேண்ட, அப்பொழுது அந்த இலிங்கத்திலிருந்தும் தோன்றி தம் கையில் இருந்த சூலாயுதத்தினால் இயமனின் மார்பில் குத்தி அவனை உதைத்து ஒழித்தார். ஒருசமயம் விஷ்ணுவை ஆதிசேஷனால் பிணித்து நூறு யோஜனை தூரத்தில் சென்று விழும்படி வீசி எறிந்தார். துர்க்கா தேவியால் சும்பர் நிசும்பர் முதலான அசுரர் தொகுதியை தொலைத்தார். முருகபெருமானைப் புதல்வனாகப் பெற்றுத் தாரகாசுரன் முதலிய கொடியவர்களை ஒழித்தார். அந்தகாசுரனுடைய மார்பில் சூலாயுதத்தால் குத்தி, அவனைத் தோளின் மேல் தாங்கி அநேக காலம் வருத்தினார். கயிலாய கிரியை அடியோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு செல்லக் கருதிய இராவணாசுரனை ஒரு விரலினால் மலையின் கீழே அழுத்திப் பெருந்துயரடையச் செய்தார். இவை சிலவேயாகும். இவை போன்ற எண்ணிறந்த விஜயங்களைச் செய்துள்ளார் என்று கூற முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, தாங்கள் சிவபெருமான் செய்த தண்டங்களை எல்லாம் சொன்னதைப் போல, சிவபெருமான் எந்தெந்த வகையில் அருள் செய்தாரோ அவற்றையும் விரிவாகக் கூற வேண்டும் என்று கேட்டனர். வாயுதேவன் மகிழ்ச்சியுடன் சொல்லத் துவங்கினார்.

27. சிவபெருமானின் அருளியல்

முனிவர்களே! பாவத்தை ஒழிக்கத்தக்க அற்புதமான விஷயத்தை நீங்கள் கேட்டீர்கள். அந்த சிவபெருமானை, உருவமாக விளங்கும்போது காணமுடியுமேயல்லாமல், அருவமாக இருக்கும்போது அறியவல்லார் யாவர்? வேதசாரத்தை உணர்ந்த அறிஞர்களே! விறகில் பற்றி எரிகிற தீயைக் கண்டு தீயின் ஸ்வரூபாதிகள் இத்தன்மை என்று உணரலாமேயல்லாமல் அந்த விறகில் அந்தர்க்கதமாக விளங்கும் அக்கினியைக் காண வல்லவர்கள் இல்லை. பரம்பொருளாகிய சர்வேஸ்வரன், அருவமாதலேயன்றி ஆன்மகோடிகள் ஈடேறும் பொருட்டு, சதாசிவன், மஹேசன், உருத்திரன், விஷ்ணு, பிரமன் முதலிய மூர்த்தியாகித் திருவருள் செய்கிறார். அந்தக் கடவுள், பிரமன் முதலிய ஜீவ கோடிகள் செய்த பாவங்கள் ஒழியும்படி, அவரவர் குற்றங்களுக்கு ஏற்பத் தண்டஞ் செய்கிறார். இந்த நியாயத்தால் அல்லவோ, அரசர்கள் குற்றஞ் செய்தவர்களைத் தண்டிக்கிறார்கள். குற்றஞ் செய்தோரைத் தண்டிப்பதால் மன்னருக்குச் சிறிதும் தோஷமில்லை. பிதாவானவன் தவறான காரியங்களைச் செய்த புதல்வரைத் தண்டிப்பது, அவர்கள் மீது வைத்த அன்பினாலன்றி வேறல்ல. அது போலவே, கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் அவர்களுடைய பந்தங்களை அகற்றும்படித் தண்டனை செய்து, தம் கருணை நோக்கத்தைச் செலுத்துகிறார். துன்பஞ்செய்யும் கட்டி முதலிய நோயுற்றவனுடைய அந்தப் பாகத்தை அரிந்தாவது, சுட்டாவது வைத்தியன் அதை ஒழிப்பது போல தயாமூர்த்தியாகிய சங்கரன், ஆன்மாக்களுடைய விலை ஒழியும்படி வருத்திச் செய்துப் பிறகு அந்த வருத்தத்தையும் ஒழிப்பார். பல மூர்த்திகளாக, அந்தப் பகவான் விளங்கினாலும் ஆசை முதலிய தீமைகளை அடையார். குற்றமுள்ள பொருள்கள் யாவற்றையும் கொளுத்திச் சாம்பலாக்கித் தீயினுக்கு அந்தக் குற்றஞ் சிறிதும் இல்லாது இருப்பதுபோல, வினைச்சம்பந்தத்தை ஒழிக்கும் ஈஸ்வரனுக்குச் சிறிதும் வினை என்பதில்லை. நெருப்பானது இரும்பு முதலிய உலோகங்களைச் சுடுவது போல ஈஸ்வரன் எல்லா மூர்த்திகளையும் தத்தமக்கு இயன்றவாறு ஒழுகச் செய்கிறார். அந்தப் பகவான் சர்வ வியாபியாக எல்லாப் பொருள்களிலும் விளங்குகிறார். ஆகையால் அந்த ஈஸ்வரனை மண், கல், மரம், மணி முதலிய எல்லாப் பொருள்களிலும் பூஜிக்கத்தகும். தத்தமக்கு இயன்ற ஒரு பொருளில் அர்ச்சனை செய்தவர்கள் இஷ்டச் சித்திகளை அடைவார்கள்.

சித்தும் அசித்துமாகிய பொருட்களை ஒன்று சேர்த்தாலும் அவற்றுக்குள்ள குணங்கள் மாறாது. சூரியன் உதிக்கத் தாமரை விரிதலும் அதனோடு உள்ள பிற மலர்கள் விரியாததைப் போலும் என்று உணர்வீர்களாக; மல சம்பந்திகளுக்கு சிவபெருமான் ஒருபோதும் மோட்சங் கொடுக்கமாட்டார். மலத்தை ஒழித்தவர்களுக்கே சிவபிரான் மோக்ஷத்தைக் கொடுப்பார். ஆனால் சிவபெருமானுக்கு அந்த மலங்கள் இல்லை. மலமானது ஆன்மாக்களுக்கே உரியது. ஆகையால் சிவன் இன்ப துன்பங்களை அனுபவிக்க மாயா சம்பந்தத்தால் கருமங்களைச் செய்யும் கர்மமாயை கக்ஷன் அனுபந்தமான சம்சாரம் ஜீவனுக்கேயன்றி சிவனுக்குச் சிறிதுமில்லை. ஜீவனுக்குச் சதச்சித்தமாகத் தானே வரத்தக்கதோர் மலமுள்ளது. அது, தானே வருமானால் காரண நிமித்தமாக வரக்கூடியது. அந்தக் காரணம் ஒன்றேயாயினும் பல சக்திகளுடையதாக இருக்கும். கர்மமாயைகள் சிவனுக்குச் சிறிதும் இல்லை. ஆன்மாவானது யாவருக்கும் சமானமாக இருந்தாலும், சிலர் பந்தமுடையவர்களும் சிலர் முக்தர்களும் சிலர் பரர்களுமாக இருக்கிறார்கள். சிலர், லயபோகாதிகாரிகளாய் ஞான ஐஸ்வரியாதிகளின் தாரதம்மியங்களை அடைகிறார்கள். சிலர் மூர்த்திகளாகிறார்கள். இன்னுஞ் சிலர், சிவ சொரூபிகளாய் அத்துவாக்களின் சிரசில் இருப்பார்கள். சிலர் மகேசர்களாக அத்துவாக்களின் இடையில் இருப்பார்கள். சிலர், உருத்திரர்களாய் அத்துவாக்களின் அடியில் இருக்கிறார்கள். மாயா சம்பந்தமற்றுச் சிவசன்னிதியிலிருப்பவர்களில், ஆன்ம ஸ்வரூபம் கீழேயும் அந்தராத்ம ஸ்வரூபம் இடையிலும் பரமாத்ம ஸ்வரூபம் மேலேயும் விளங்கிப் பிரம, விஷ்ணு, ருத்திரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.  இந்த மூன்று பதவிகளில் அநேகர் வசிக்கிறார்கள். சாந்தியாதீதப் பதவியில் சைவர்களும் சாந்திபதத்தில் மகேசர்களும் வித்தியாபதத்தில் உருத்திர பக்தர்களும் பிரதிஷ்டா பதத்தில் விஷ்ணு பக்தர்களும் நிவர்த்தி பதத்தில் பிரம பக்தர்களும் வாழ்வார்கள். இவையே, தேவயோனி அஷ்டகமாகும். இவையே உச்ச ஸ்தானத்தில் இருப்பவனும் உத்தமமாகும். ஒன்பதாவது மானிடயோனி. அது மத்தியிலிருப்பதும் மத்திமமும் ஆகும். விலங்கு யோனிகள் ஐந்து வகை, அவை தாழ்வில் இருப்பனவும் அதர்மமும் ஆகும். ஆகப் பசுவர்க்கம் பதினான்கு வகைப்படும். ஜீவனுக்கு மலத்தின் ஏற்றக்குறைவால் இத்தகைய யோனிகள் உண்டாகின்றன. சம்சார காரணமான மலங்கள் ஆமம் என்றும் பக்குவம் என்றும் இருவகைப்படும்.

ஆமலத்தால் ஜீவர்களுக்குத் தாழ்ந்த யோனியும் பக்குவ மலத்தால் உத்தம யோனியும் சம்பவிக்கும். பசுக்களாகிய ஜீவர்களுக்கும் ஒரு மலமுடைமையைவிட இரு மலமுடைமை தாழ்ந்தும் மும்மலமுடைமை தாழ்ந்தும் உத்தம மத்திம அதர்மர்களாகிறார்கள். இந்த மூவகையினரையும் விடச் சாம்பவமூர்த்தியே சிறந்தவர். உருத்திராத்மகமான இந்த ஜகமானது உருத்திரனால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. ஜீவஸ்வரூபமான எல்லாவற்றையும் சிவபெருமானே அதிஷ்டித்துள்ளார். அண்டாந்தமான பூமியானது சதருத்திரர்களால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. மாயாந்தமான அந்தரீக்ஷமானது. அமரேசனாதி உருத்திரர்களால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. அங்குஷ்ட மாத்திரமான ஜீவர்களால் யாவும் வியாப்தமாக இருக்கின்றன. மகா மாயா வசதிகளான புவனாதிபதிகளும் அத்துவாக்களில் உள்ளவர்களுமாகிய தேவர்களால் யாவும் அதிஷ்டிக்கப்படா விட்டாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரால் அதிஷ்டிக்கப்பட்டும் யாவும் சாம்பவமூர்த்தியால் அதிஷ்டிக்கப்பட்டும் விளங்கும். இத்தகைய மூவகை மலசம்பந்தத்தால் ஜீவர்களுக்குச் சம்சாரம் என்ற நோய் உண்டாகிறது. இந்தச் சம்சார ரோகத்தை ஒழிப்பதற்குச் சர்வேசனுடைய அநுக்கிரகத்தால் உணடான சிவஞானமே பரம அவுஷதம். நோயாளிக்கு வைத்தியம் அந்த நோயைத் தீர்ப்பது போல பரமகாருண்யனான சர்வேஸ்வரன் சமுசாரரோகிக்கு நியாமகராக இருந்து அநாயாசமாக அதை ஒழித்துச் சுகப்படுத்துகிறார். துக்கம் உண்டாவதற்குச் சம்சாரமே காரணம்.

சுகமும் துக்கமும் சுபாவமாகவே உண்டாகும். ரோகமானது வைத்தியனால் உண்டாக்கப்படாதது மேலன்றி, சர்வேசனாலேயே சம்சார பந்தங்கள் உண்டாக்கப்பட்டாலும் அந்தப் பகவானுக்கு ஒரு தோஷமும் உண்டாகாது அவை சுபாவமாகும். சம்சார காரணமான மலமே மாயை. அது அசேதனமானது அது இரும்பைக் காந்தம் இழுப்பதைப்போல சிவபெருமான் கருதியவுடனே ஸ்வயமாக தொடருகிறது. அந்த மாயையை ஒழிப்பதற்கு சாந்நித்யமே காரணம். சிவபெருமானுடைய கட்டளையில்லாமல் யாதொரு காரியமும் நிகழமாட்டாது. யாவுஞ் சர்வேசனால் செய்யப்பட்டாலும் சுக துக்கங்களுக்காக நிந்திக்கப்படத்தக்கவர் அவர் அல்ல. சர்வேசனுடைய சக்தியே சர்வதோமுகியாக உள்ளது. அந்தச் சக்தியால் பிரபஞ்சம் யாவும் வியாப்தமாக இருந்தாலும் சர்வேசன் தூஷிக்கத் தக்கவரல்லர். அநாதியாக எல்லாப் பிரபஞ்சமும் ஈஸ்வரனுக்கு அடங்கியதாகவும் ஈஸ்வர ஆக்ஞா ரூபமான சக்தியையே பிரபுவாக உடையதுமாகையால் ஈஸ்வரன் தூஷிக்கப்பட மாட்டார். ஈஸ்வர சக்தியினாலுண்டாகும் மல சம்பந்தமான சம்சார பந்தத்தை அந்த ஈஸ்வரனாலேயே உண்டாகிறது என்றும் அவரே தூஷிக்க தக்கவர் என்றும் நினைக்கிற துன்மதியையுடையவன், அஞ்ஞானத்தால் நசிக்கிறான் என்று வாயுதேவன் முனிவர்களுக்குச் சொன்னான். அந்தச் சமயத்தில் சத்தியமான வாக்கு ஒன்று ஆகாயத்திலிருந்து இது சத்தியம் ஓம் என்று உண்டாயிற்று. அதைக் கேட்ட முனிவர்கள் மகிழ்ச்சியடைந்து சந்தேகம் தெளிந்து வாயுதேவனைத் துதித்தார்கள். வாயுதேவன், அம்முனிவர்கள் இன்னும் திடமாக உணரவில்லை என்று கருதி மேலும் தொடர்ந்தார்.

முனிவர்களே! ஞானமானது பரோக்ஷம், அபரோக்ஷம் என்றும் இருவகைப்படும். அதில் பரோக்ஷஞானம் நிலையற்றது அபரோக்ஷஞானம் நிலையானது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அநேக காரணங்களால் உண்டாவது பரோக்ஷஞானம். சிறப்பான அனுஷ்டானத்தால் உண்டாவது அபரோக்ஷ ஞானம். அபரோக்ஷ ஞானத்தைவிட்டால் மோக்ஷம் ஒரு காலத்தும் சித்திக்கமாட்டாது என்று மனதில் கொண்டு, ஜாக்கிரதையாக அனுஷ்டானங்களையே முயன்று சம்பாதிக்க வேண்டும்.

28. பாசுபதயோகமும் அஷ்டநாமமும்

முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, சுவாமி! எந்த விதமான சிறந்த அநுஷ்டானத்தால் அபரோக்ஷஞானம் உண்டாக்கி முக்தி எய்துமோ, அந்தப் அபரோக்ஷஞானம் அடைவதற்கு, சாதனமான அனுஷ்டானம் யாது? அதை அடியார்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். வாயுதேவன் தொடர்ந்தார்.

முனிவர்களே! சிரேஷ்டமான சைவ தர்மங்களே, சிறந்த அனுஷ்டானமாகும். அந்தச் சைவ தர்மத்தாலேயே அபரோக்ஷ ஞானம் உண்டாகி, முக்தியைக் கொடுக்கவல்ல, சிவபெருமானைப் பிரத்தியக்ஷமாகக் காணக்கூடும். அந்தச் சைவதர்மம் கிரியை, தவம், ஜபம், தியானம், ஞானம் என்று ஐந்து வகையாக விளங்கும். பரோக்ஷ, அபரோக்ஷ ஞானங்களை ஏற்படுத்தும் சைவதர்மங்கள் பரம் என்றும் அபரம் என்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளன. தர்ம சப்தத்திற்கு இவ்விதமாகப் பொருள் கொள்ளுவதற்கு வேதமே பிரமாணம், வேதங்களின் முடிவில் பரமான தர்மமும் பூர்வ பாகங்களில் அபர தர்மங்களும் சொல்லப்பட்டுள்ளன. ஞானியரே பரதர்மத்தை அனுஷ்டிப்பதற்கு உரியவர்கள். யாவரும் அபரதர்மத்தைச் சாதாரணமாக அனுஷ்டிக்கக் கூடியவர்கள். அபரதர்ம அனுஷ்டானமே பரதர்மம் கைகூடுவதற்கு முக்கியமான மார்க்கம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. பரதர்ம சிரேஷ்டானுஷ்டான சப்தத்திற்குப் பொருள் என்று இதிகாச புராணங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்தத் தர்மம், சைவ ஆகமங்களில் அங்க, உபாங்கங்களாக பிரசித்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆகமங்களில் சிவகாமங்கள் வேதத்தைத் தழுவினவும் சுதந்திரமானவையுமாக இருக்கும். சைவ ஆகமங்கள் காமிகாதி இருபத்தெட்டு வகையை உடையன. அவற்றுள் காமிகாதி முதலில் கூறிய பத்தும் சிவபேதம் என்றும் விஜயம் முதலிய பதினெட்டும் உருத்திர பேதம் என்றும், அவை சித்தாந்தம் என்றும் சொல்லப்படும். உக்கிருஷ்டமான பாசுபத  விரதத்தையும் ஞானத்தையும் பிரதிபாதிக்கும் பரதர்மமானது சதகோடியாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த யுகங்களில் ஆன்மாக்கள் உய்ய, பரமசிவனே ஆசாரியனாக இருந்து பிரவர்த்திக்கச் செய்கிறார். அநேகமாக விரிந்துள்ள ஆகமங்களை ருரு, ததீசி, அகஸ்தியர், உபமன்யு என்ற நான்கு மாமுனிவர்களே உலகில் பிரபலப் படுத்தினார்கள். அவர்களுடைய பரம்பரையில் வந்த அநேக ஆயிரவர்கள் பாசுபத ஆசாரியர்களாய்ப் பின்னர் பரவினார்கள். அந்த ஆகமங்களில், பரமதர்மமானது, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகையாக விரித்துரைக்கப்பட்டுள்ளது. பாசுபதயோகமானது திடமாகச் சிவபெருமானைத் தரிசிக்கச் செய்யும் வல்லமையை உடையது. ஆகையால், பாசுபத யோகமே மிகச் சிறந்த அனுஷ்டானம், அதுவே பரமதர்மம்.

முனிவர்களே! அந்தப் பாசுபத யோக சித்திக்காகச் சிவபெருமானே, ஆன்மாக்கள் மீதுள்ள கருணையினால், எட்டுத் திருநாமங்களைச் சொல்லியிருக்கிறார். அவற்றாலேயே பாசுபத யோகத்தை அடையலாம். பாசுபத யோகத்தாலேயே பரமேஸ்வரனைத் தரிசிக்கலாம். சிவபெருமானுடைய தரிசனத்தால் மாயை விலகும். அதனால் ஜீவன் முக்தனாகலாம். அந்த நாமாஷ்டகமாவது சிவ; மகேஸ்வர; ருத்ர; விஷ்ணு பிதாமஹ; ஸம்ஸார வைத்திய; ஸர்வக்ஞ பரமாத்மா! இந்த எட்டுப் பெயர்களுமே.

பிதாமஹ, ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ; பரமாத்மேநி முச்யத; எப்போதும் சர்வேஸ்வரப்பிரதி பாதகமாகும். அவற்றில் முதலில் கூறிய ஐந்தும் சாந்திய தீத பதத்திலுள்ள சதா சிவாதியர்களின் பெயர்கள். இவை சர்வேஸ்வரனுடைய பரியாய நாமங்கள். ஏனைய மூன்றும் மாயாவலம்பன வசத்தால் உண்டாயின. இவை ஈசனுக்கே உரிய சிறப்புப் பெயர்கள். அவை யாவை எனில்.

அநாதிமலஸம் ஸ்லேக்ஷ ப்ராக பாவர்த ஸ்வபாவத:
அத்யந்த பரிஸுத்ராத்மே த்யதோயம்ஸிவ உச்யதே:
அதவாசேஷ கல்யாண குணைககந ஈஸ்வர:
சிவ இத்யுச்ய தேசத்பி ஸ்ஸிவதத்வார்த்த வேதிபி:
த்ரயோவிம்ஸதி தத்வேப்ய: பரா ப்ரக்ருதிருச்யதே
ப்ரக்ருதேஸ்து பரம்ப்ராஹு: புருஷம் பஞ்சவிம் ஸகம்யம்:
வேதா நௌஸ்வரம் ப்ராஹுர் வாச்ய வாசகபாவத:
வேதைக வேதய யாதாத்ம் யாத் வேதாந்தேச: ப்ரதிஷ்டித்:
ஸரவ ப்ரக்ருதெனலீநோ போக்தாய: ப்ருக்ரு தேர்மத:
தஸ்யப்ரக்ருதி லீநஸ்ய: பரஸ்ஸ மஹேஸ்வர:
தததீ ப்ரவ்ருத்தித்வாத் பிரக்ருதே: புருஷஸ்யச
அதவாதி குணந்தத்வம் மாயே யமிதமவ்யயம்
மாயாந்து ப்ரக்ருதிம் விந்த்யாந் மாயி தந்து மஹேஸ்வரம்
மாயா வி÷க்ஷப கோநந்தோ மஹேஸ்வர சமந்வயாத்
ருத்து: கம்து: துஹே துர்வா: தத்ரா வயதிந: ப்ரபு:
ருத்ர இத்யுச்ய தேஸத்பி: சிவ: பரமகாரணம்
சிவதத்வாதி பூம்யந்தம் சரீராதி கபி திச
வ்யாப்யாதி திஷ்டதிஸிவ ஸததோருத்ரா இதஸ்தத:
ஜகத: பித்ரு பூதாநாம் சிவேமூர்த் யாத்மநாமபி
பித்ரு பாவேந ஸர்வேஷாம் பிதாமஹ உதீரிதா
நிதா நஜ்ஞோயதா வைத்யா ரோகஸ்ய விநிவர்தக:
உபாயைர் பேஷஜைஸ் தத்வ ஸ்வயபோதாதி காரத:
ஸம்ஸராஸ்யெ ஸ்வரோநித்யம் ஸமூலஸ்ய நிவர்தக:
ஸம்ஸார வைத்ய இத்யுக்தஸ் ஸர்வதத்வார்த்த வேதிபி:
தஸார்த்தஜ்ஞா நஸித்யர்த மிந்த்ரியேவே ஷுஸத்ஸபி
த்ரிகால பாவிநோபாவாந் ஸ்தூலாந் ஸூக்ஷ்மாநஸேஷத
அணவோ நைவ ஜாநந்தி மாயாணவ மலாவ்ருதா:
அஸத் ஸ்வபிச ஸர்வேஷு ஸர்வந்த் தஜ்ஞாநஹேதுஷு
யத்யதா வஸ்திகம் வஸ்து தத்த தைவ சதாசிவ:
அயத்நேநைவ ஜாநாதி தஸ்மாத் ஸர்வஜ்ஞ உச்யதே
ஸர்வாத்மா பரமைரேபிர் குணர்நித் யஸமந்வயாத்
ஸ்வஸ்மாத் பராத்ம் விரஹாத் பரமாத்மா சிவஸ்வயம்
நாமாஷ்டகம் இதம் சைவ லப்த் வாசார்ய ப்ரஸாதத:

மேலே சொன்ன நாமாஷ்டகத்தின் தமிழ்ப் பொருள் பின்வருமாறு: அநாதியாகவுள்ள மல சம்பந்தத்தை எக்காலத்திலும் இல்லாமையாலும் அத்யந்த பரிசுத்தனாக இருப்பதாலும் சிவன் என்றும் அல்லது அநந்த கல்யாண குணம் உடையவனாகையால் சிவன் என்று சொல்லப்படுகிறார். இருபத்து மூன்று தத்துவங்களுக்கும் பரமானது பிரகிருதி. அந்த இருபத்து நான்காவது தத்துவத்துக்கும் பரமாகவுள்ளவர் புருஷன். எவரை வாச்சியவாசக பாவத்தால் வேத ஆரம்ப காலத்தில் ஓம் என்ற பிரணவ ஸ்வரூபமாகவும் வேதாந்தங்களின் வேதத்தாலேயே தெரியத்தக்கவனாகவும் சொல்லப்படுகிறாரோ, அவரே பிரகிருதியின் லீனமாய் அதை அநுபவிக்கிறவராகவும் இருந்து பிரகிருதி புருஷர்களைத் தம் சுவாதீனஞ் செய்து கொண்டதால் அவர் மஹேசன் எனப்படுகிறார் அல்லது திரிகுண ஸ்வரூபமான அநாதியான மாயையே பிரகிருதி. அந்த மாயையைச் சுவாதீனம் செய்து கொண்டு மாயையை ஒழித்து, அநந்தராக இருப்பவர் மகேசன் எனப்படுவார், பக்தர்களின் துக்கத்தையும் துக்க காரணத்தையும் போக்கடித்துச் சுகத்தைக் கொடுப்பதால் உருத்திரன் எனப்படுகிறார். சிவ தத்துவம் முதல் பூமி வரையில் எல்லாப் பொருட்களிலும் வியாபித் துள்ளமையால் விஷ்ணு எனப்படுவார். உலகத்துக்குப் பிதுர்ப்பூதமான பிரமாதிகளுக்குப் பிதாவாகையால் பிதாமகனெனப்படுகிறார். ரோகமுடையவனுடைய ரோகங்களைக் கண்டுபிடித்து, அதற்குத் தக்க அவுஷதங்களைக் கொடுத்துப் பரிகரிக்கும் வைத்தியனைப் போல ஜீவனுடைய சமுசார ரோகத்தைக் கண்டு தம் கருணையால் அந்த சமுசார ரோகத்தைச் சிவஞான யோகாதி அவுஷதங்களைக் கொடுத்து திரிகரிப்பதால் சமுசார வைத்தியன் எனப்படுகிறார். சப்தாதி விஷய ஞானசித்திக்காக ஞானேந்திரிய கர்மேந்திரி யங்களில் திரிகாலங்களிலுமுள்ள ஸ்தூல சூக்ஷ்ம பாவங்களை மல சம்பந்தமுடைய ஜீவர்கள் உணரமாட்டார்கள். எல்லா ஞானங்களுக்குங் காரணமான ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் ஆகிய யாவுமே இல்லாவிட்டாலும் வஸ்துவின் உண்மையான ஸ்வரூபத்தை அநாயாசமாகத் தெரிந்து கொள்ள வல்லவராகையால் ஸர்வக்ஞன் எனப்படுகிறார். சர்வக்ஞத்வ ரதி குணங்கள் எப்பொழுதும் தன்னிடத்தில் விளங்குவதாலும் தன்னைவிடப் பரம்பொருள் இல்லாமையாலும் பரமாத்மா எனப்படுகிறார். இத்தகைய சிறப்புடைய இந்த நாமாஷ்டகத்தை உத்தம ஆசிரியனாலடைந்து, நிவர்த்தியாதி கலைகளிலுள்ள திருநாமங்களாகத் துதித்து உச்சரித்தவன் சகல சுகத்தையும் அடைவான்.

ஆவர்த்திதங்களான சிவாதி ஐந்து திருநாமங்களால் சுவாஸ்வாதிஷ்டான கிரமமாக ஸ்மரணை செய்து, அந்தந்த குணங்களை அதிக்கிரமிக்காது சோதனை செய்து, பிரேரிப்பிக்கப்பட்ட பிராண வாயுவால் பீடிக்கப்பட்ட அபானவாயு ஊர்த்த ஸ்தானத்தை அடையத்தக்க உத்தூதத்துடன் கூடியதும், உத்தூதமல்லாததுமாகிய ஐந்து திருநாமங்களை இதயம், கண்டம், தாலு, புருவ மத்தியம், பிரமாந்திரம் இவ்விடங்களிலிருக்கும் நிவர்த்தியாகிய கலா கிரந்திகளை முறைப்படி சுத்திசெய்து, மனம் புத்தி, வாசனை பஞ்சதன்மாத்திரைகளின் சம்பந்தமான புரியஷ்டதேகத்தையும் சுத்திசெய்து, பன்னிரு தளத்துடன் கூடிய கமலமலரின் பொருட்டில் விளங்கும். சந்திரனுக்கு மேற்பாகத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிவ தேஜஸின் நடுநாடியாகிய சுழுமுனை நாடியால் தன் ஆத்மாவை அடையச் செய்து, சக்தி சம்பந்தமான அமிர்த மழையால் நனைக்கப்பட்ட தேகமுடையவனாய்த் தன் ஆத்மஸ்வரூபத்தை இறக்கி, துவாதசதன சுவேதக மலத்துள்ள சந்திரன் விடப் பரமாக இருக்கும். அமிர்தாத்ம ஸ்வரூபனும் நிர்மலனும் மனோகர ஸ்வரூபியும் சுத்தஸ்படிக மயமானவனும் பிரசன்னனும் குளிர்ந்த காந்தியை உடையவனுமாகிய, அர்த்த நாரீஸ்வரனை இதயத்தில் நாமாஷ்டகத்தால் தியானித்து, பக்தியாகிய மலர்களால் அரிச்சித்துப் பிராணாயாமம் செய்து மனதை நிர்மலமாகச் செய்து, அஷ்டநாமங்களை ஜெபித்து, நாபியில் நாமாஷ்டகத்தால் ஆகுதிசெய்து, பூர்ணாகுதியும் முடித்து, வணங்கி, எட்டுவகை மலர்களால் புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து, கையிலே ஜலம் கொண்டு தன் ஆத்மாவை நிவேதித்து நிலத்தின் மீது நீரை விடுக்க வேண்டும். இந்த வகையாகப் பாசுபத யோகத்தை செய்தவனுக்கு அதிவிரைவில் சிறந்த பாசுபதஞானம் உண்டாகி, முக்தியானது கைகூடும். இந்த விஷயத்தில் சிறிதும் சந்தேகமில்லை என்று வாயுதேவன் சொன்னார்.

29. பாசுபத விரதம்

எல்லாப் பாவங்களையும் ஒழிக்கத் தக்கதும் வல்லதும், அதர்வசிரோபநிஷத்தில் சொல்லப்பட்டதுமாகிய பாசுபத விரதம் மிகவும் இரகசியமானது. அதை உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுங்கள். அதற்கு காலம் சித்திரை மாதப் பூரணை இடம் சிவ ஸ்தலமானது சிவாலயமாவது புண்ணிய ÷க்ஷத்திரமாவது தக்கதாகும். அத்தகைய இடத்தில் அதற்கு முற்பட்ட திரயோதசியில் நீராடி அனுஷ்டானத்தை முடித்து ஆசாரியாரை அடைந்து அவரைப் பூஜித்து பணிந்து, சிறப்பான பூஜைகளைச் செய்து வெள்ளை ஆடை தரித்து, வெண்மலர் மாலை அணிந்து, திருவெண்ணீறும் சந்தனமும் பூசிக்கொண்டு, கிழக்கு அல்லது வடக்குமுகமாக தர்ப்பாசனத்திலிருந்து, தர்ப்பையால் பவித்திரம் அணிந்து மும்முறைப் பிராணாயாமம் செய்து சிவபெருமானையும் உமாதேவியையும் குரு உபதேசப்படி தியானஞ் செய்து, இந்த மஹாபாசுபத விரதஞ் செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு தீøக்ஷ வகித்து, அது முதல் தன் ஆயுள்வரையில் பாசுபதவிரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அல்லது பன்னிரண்டு ஆண்டுகளாவது, ஆறு ஆண்டுகளாவது, மூன்றாண்டுகளாவது, ஓராண்டுகளாவது, ஆறு மாதங்களாவது, மூன்று மாதங்களாவது, ஒரு மாதமாவது, பன்னிரண்டு நாட்களாவது, ஆறு தினங்களாவது, மூன்று தினங்களாவது ஒரு நாளாவது அனுஷ்டிக்க வேண்டும். பிறகு அக்கினியைக் கொண்டு வந்து சமஸ்கரித்து, விரஜா ஹோமகிரமமாக நெய், சமிதை, செரு முதலியவற்றை ஓமம் செய்து, பூர்ணாஹுதி முடித்து, தத்துவ சுத்தியை உபதேசித்து, மேலே சொன்ன ஸமிதை முதலியவற்றால் பஞ்சாக்ஷர மந்திரத்தை கொண்டு ஹோமம் செய்து என் தேகத்தில் உள்ள தத்துவங்கள் எல்லாம் சுத்தமடையுமாக என்று ஸ்மரணை செய்து சுத்தம் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்பவன், பரிசுத்தனாகிறான். புனிதமான கோமயத்தைக் கொண்டுவந்து உருட்டி அபிமந்திரித்து அக்கினியில் வைத்து அதனருகையே இருந்து இரவைக்கழித்து, சதுர்த்தசி தினமாகிய மறுநாள் காலையில், தன் நித்தியக்கடன்களை முடித்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து மறுநாள் பூரணையில் தன் செய்கடன்களை நிறைவேற்றி, அக்கினியை அவித்து, தான் நீற்றிய நீற்றினையெடுத்து, சடையுடனாவது முண்டிதம் செய்து கொண்டாவது, குடுமி வைத்துக்கொண்டவது நீரில் மூழ்கி, சர்வ விரக்தனாயின் திகம்பரனாகவாவது மனம் திடப்படாவிடில் ஒரு காவி வஸ்திரமாவது நார்மடியாவது, பருத்தியாடையாவது தரித்து தண்டம் ஒன்றைக் கையில் பற்றி, அரையில் முஞ்சிப் புல்லால் திரித்த நாண் அணிந்து, கை கால்களைச் சுத்தஞ்செய்து இருமுறை ஆசமனீயஞ் செய்து விரஜாக்கினியால் செய்த திருநீற்றையெடுத்து, உச்சிமுதல் பாதம் வரையில் உத்தூளனஞ் செய்து, விதிப்படி திரிபுண்டரம் அணிந்து மனதில் சிவ பாவனை செய்து சிவயோகத்தைச் செய்ய வேண்டும். இப்படியாக நாள் ஒன்றுக்கு மும்முறை பாசுபத விரதஞ் செய்து கொண்டு, நவரத்தினங்கள் இழைத்த கர்ணிகை கேசரங்களுடன் கூடிய பொன்னால் அஷ்டதளகமலமாவது, சக்தியில்லாவிட்டால் செந்தாமரை மலராவது, விபூதியாற் சித்திரித்த மலராவது, பாவனாமாத்திரையாகவாவதுள்ள ஒரு கமலத்தில், ஸ்படிகலிங்க மூர்த்தியைப் பீடத்துடன் சாஸ்திர விதிப்படி எழுந்தருளச் செய்து, பிராணப் பிரதிஷ்டை முதலியவற்றைச் செய்து, ஐந்து திருமுகங்களுடன் கூடிய பரமேஸ்வரனே என்று தியானித்து, பஞ்சகவ்வியங்களால் அபிஷேகம் செய்து, சந்தனம், குங்குமம், கஸ்தூரி முதலிய வாசனைத் திரவியங்களால் அபிஷேகித்து ஆபரணாதிகளை அணிந்து, வில்வம் செந்தாமரை, வெண் தாமரை, கருங்குவளை முதலிய உன்னத மலர்களை சாற்றி, அருகு, அக்ஷதை முதலியவற்றால் கிடைத்தவரையில் சிறப்பாகப் பூஜித்து தூபதீப அர்க்கியங்கள் கொடுத்து இஷ்டமுடைய சிறந்த நியாயமான அன்னம் பக்ஷியம் போஜ்யங்களை நிவேதித்து ஜெய ஜெயவென்று பலமுறை கூறியவனுக்கு, அநேகம் பிறவிகளில் செய்த பாவங்கள் நெருப்புப் பொறிபட்ட பஞ்சுப்பொதிபோல ஒழியும்.

முனிவர்களே! வில்வபத்திரம், தாமரை மலர்கள் செங்குவளை முதலிய மலர்கள் ஆயிரத்துக்குங்குறையாமல் கொண்டுவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வளவு கிடைக்காவிட்டால், நூற்றெட்டாவது பொன்னாற் செய்த ஒரு மலராவது கொண்டு வந்து பூஜிக்கலாம். மலர்கள் ஆயிரத்தால் உண்டான பயனை, சுவர்ண புஷ்பம் ஒன்று அளிக்கும். இதர புஷ்பங்களுக்கு நியமம் இல்லாததால் கிடைத்தவரையில் பூஜிப்பது சிறந்ததாகும். இவ்வாறு அர்ச்சனைச் செய்த பிறகு அஷ்டாங்க அர்க்கியம் சமர்ப்பிக்க வேண்டும். அகோர முகத்தில் கரிய அகிலும் சத்தியோஜாத முகத்தில் வெள்ளரி தாரமும் வாமதேவ முகத்தில் சந்தனமும், தற்புருஷ முகத்தில் பொன்னரிதாரமும், ஈசான முகத்தில் பஸ்பமும் அணிய வேண்டும். இந்த வகையாகக் கந்தமிடுவதைச் சிறப்பாகப் பெரியோர்கள் கூறுவார்கள். அகோர முகத்திற்கு வெள்ளை அகிலும் சத்தியோஜாத முகத்திற்குச் சவுகந்திகமும் (நீலோற்பலக் கிழங்கும்) வாமதேவ முகத்திற்குக் காரகிலும் தத் புருஷமுகத்துக்குக் குங்கிலியமும் ஈசானமுகத்திற்கு வெட்டிவேர் முதலிய பொடியும் தூபங்கொடுக்க வேண்டும். சர்க்கரை, மது, கர்ப்பூரம், காராம்பசுவின் நெய், சந்தனம், அகரு முதலியவை கலந்த தூபத்தை எல்லா முகங்களுக்கும் கொடுக்கலாம். நெய்யால் திரி நனைக்கப்பட்ட தீபங்களையும் அதற்குப் பிறகு ஒவ்வொரு முகத்துக்கும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு முதல் ஆவரணத்தில் விநாயகரையும் முருகக் கடவுளையும் பஞ்சப் பிரமங்களையும், இரண்டாவது ஆவரணத்தில் அநந்தன் முதலிய வித்யேஸ்வரர்களையும், மூன்றாவது ஆவரணத்தில் பவன் முதலிய அஷ்ட மூர்த்திகளையும் மகாதேவன் முதலிய பதினோரு ருத்திரர்களையும், நான்காவது ஆவரணத்தில் கணநாதர்கள் அனைவரையும், ஐந்தாவது ஆவரணத்தில் திக்குபாலகர்களையும் பிரமபுத்திரர்களையும் ஜோதிர் கணங்களையும் எல்லாத் தேவர்களையும் தேவ மாதர்களையும் கேசரர்களையும் நாகலோகத்தில் வசிக்கும் பலவகைத் தேவர்களையும் முனிவர்களையும் யோகீஸ்வரர்களையும் கோமாதாக்களையும் ÷க்ஷத்திர பாலர்களையும் அவரவர் கணங்களையும் சராசரப் பிரபஞ்ச முழுவதையும் பூஜிக்கவேண்டும்.

இவ்வாறு ஆவரணபூஜை முடித்தபிறகு, சர்வேசனாகிய சாம்பவமூர்த்தியைப் பூஜித்து ஹோமம் செய்து நெய், தயிர் முதலியவற்றுடன் கூடிய தாம்பூலம் அளித்து, மீண்டும் மலர் மாலைகளும் ஆபரணங்களும் சாற்றி, காற்பூர நீராஞ்சனம் சமர்ப்பித்து, விசேஷ பூஜைகளை முடித்து, உபசாரங்கள் செய்து பலவாறு துதித்து, பஞ்சாக்ஷரஜபம் ஜெபித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, குருவையும் குருவால் எழுதப்பட்ட சுவடியையும் பூஜித்து நமஸ்கரித்து, அர்க்கியம் முதலியன அளித்து, அஷ்டபுஷ்பங்கள் சாற்றி சிவலிங்கத்தினின்றும் பெருமானை ஆத்மாரோபணஞ் செய்து, ஹோம அக்கினியையும் ஆத்மாரோபணம் செய்து கொள்ள வேண்டும். இந்த வகையாக நாள்தோறும் மனிதன் பூஜிக்கக் கடவன். இவ்வாறு பூஜித்த பிறகு அந்தச் சிவலிங்கத்தையும் பூஜா உபகரணங்களையும் குருவுக்குக் கொடுக்க வேண்டும். அல்லது சிவசன்னிதானத்தில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்த பிறகு எண்ணிலாத அந்தணர்களுக்கும் சிவபக்தர்களுக்கும் அன்னபானாதிகளை அளித்துப் பூஜிக்கவேண்டும். சக்தியிருந்தால் காய், கிழங்கு, பழம் முதலியவற்றை உண்ணக் கடவன் அல்லது பசுவின் பாலைப் பருகக்கடவன். அல்லது நியதி பிøக்ஷயெடுத்துப் புசிக்கக்கடவன். அன்றிரவில் தரையிலாவது சரகுகளைப் பரப்பி அவற்றின் பேரிலாவது மரவுரியின் பேரிலாவது படுத்துப் பிரமசரிய விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஆதிவாரம், திருவாதிரை நக்ஷத்திரம் பூரணை அமாவாசை. அஷ்டமி, சதுர்த்தசி இந்தத் திதிகளில் சக்திக்கேற்ப உபவாசம் இருக்கவேண்டும். பலவித முயற்சிகளாலும் சண்டாளர்கள் பதிதர்கள், பாஷாண்டர்கள், அசூயையுடையவர்கள் முதலியோரைக் காணவும் தொடவும் அவருடன் பேசவுங்கூடாது. அவரோசை கேட்கவும் கூடாது. அடக்கம், தானம், தயை சத்தியம், அஹிம்சை முதலியவற்றைச் சுபாவமாகவுடையவனாய், மகிழ்ச்சியடைந்து சிவத் தியானத்துடன் முக்காலங்களிலும் ஸ்நானம் செய்து கொண்டும், மனோவாக்கு காயங்களால் விசேஷமான பூஜையைச் செய்ய வேண்டும். அதிகம் சொல்வானேன்? இந்தப் பாசுபத விரதத்தைச் செய்பவர்கள் குருமுகமாக அதன் ஆசாரங்களை விசாரித்துத் தெரிந்து கொண்டு, பூஜை, ஜபம் ஹோமம் முதலியவற்றில் ஏதேனும் குறையேற்பட்டால் அதற்குத் தக்க பிராயச்சித்தங்களை செய்து கொண்டு, விரதத்தின் முடிவில் கோதானம் செய்து, ரிஷபத்தைச் சிவப்ரீதியாக விடுத்து வேதியருக்கும் பூஜை செய்யவேண்டும். மாதம்தோறும் செய்யத்தக்க பூஜாவிதியை இனி விரிவாகச் சொல்லுகிறேன்.

வைகாசி மாதத்தில் வைரத்தால் செய்த லிங்கமும் ஆனிமாதத்தில் மரகதலிங்கமும், ஆடி மாதத்தில் முத்து லிங்கமும், ஆவணி மாதத்தில் நீல லிங்கமும் புரட்டாசியில் பதுமராகலிங்கமும், ஐப்பசியில் கோமேதகலிங்கமும், கார்த்திகையில் பவளலிங்கமும், மார்கழியில் வைடூரிய லிங்கமும் தை மாதத்தில் புஷ்பராக லிங்கமும் மாசியில் சூரியகாந்தமணியாற் செய்த லிங்கமும் பங்குனியில் சந்திரகாந்த சூரியகாந்தமணியாற் செய்த லிங்கமும் பங்குனியில் சந்திரகாந்த லிங்கமும் ஆகிய இவற்றை, முறையே பூஜை செய்யவேண்டும். இந்த இரத்தினங்கள் கிடைக்காவிட்டால் பொன் அல்லது வெள்ளி, தாமிரம் அல்லது சிலை அல்லது மிருத்துவாலாவது சந்தனத்தாலாவது சிவலிங்கம் செய்து அதை பூஜிக்கலாம். விரத அனுஷ்டான காலத்தில் சர்வேஸ்வரனுக்கு என்று கரங்களைக் கூப்பி, யான் சிறியேன். பூஜை முதலியவற்றில் தவறியிருப்பேன். அவற்றை மனம் பொறுத்து எனக்குத் திருவருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். இப்படி செய்து, ஆசாரிய அனுமதி பெற்று, கிழக்கு நோக்கியாவது, வடக்கு நோக்கியாவது, தர்ப்பாசனத்திலிருந்து, பவித்திரம் அணிந்து பிராணாயாமம் செய்து, மூலமந்திரம் ஜெபித்து, சாம்பவியுடன் கூடிய சர்வேஸ்வரனை தியானஞ்செய்து, கைகளைச் சிரமேற் குவித்து ஜெகதீசா! தேவரீருடைய திருவருளால், இந்த விரதத்தை யான் அனுஷ்டித்தேன் என்று விண்ணப்பஞ்செய்து தர்ப்பையை வடபுறத்தில் எறிந்து, தண்டம், ஜடை, மரவுரி முஞ்சி அரைஞாண் முதலியவற்றை விலக்கி வெள்ளை வஸ்திரம் அணிந்து மும்முறை ஆசமனஞ் செய்து, பஞ்சாக்ஷர ஜபம் செய்யவேண்டும்.

இவ்விதமாக இந்தப் பாசுபத விரதத்தைத் தனது ஆயுட்காலம் வரையில் செய்பவன், நைஷ்டிகன். அவனே அத்தியாசிரமன், மஹாபாசுபதன், அவனே தவசிகளில் சிறந்தவன். அவனே மஹாவிரதன். மோக்ஷ அபேக்ஷயுடையவர்களில் பாசுபத விரதத்தை அனுஷ்டித்த யதியை நைஷ்டிக உத்தமன் என்பர் பன்னிரண்டு நாட்கள் அன்னத்தை விலக்கி, விரத அனுஷ்டானஞ் செய்தவனும் நெய்யை மட்டும் பருகி மூன்று நாட்கள் விரத அனுஷ்டானம் செய்தவனும் நைஷ்டிகன் என்றே சொல்லப் படுவார்கள். நாள்தோறும் இந்த விரத அனுஷ்டானத்தைச் செய்வதையே கடமை யென்று செய்துவருபவன் பெறுகின்ற கதியை யார் தான் அளவிட்டுக் கூறமுடியும்? உத்திர ஸ்வரூபமான விரஜா ஹோமத்தாற் செய்யப்பட்ட பஸ்மத்தை உடலில் பூசியவனுடைய பாவங்கள் யாவும் விரைவில் அழியும். அவனுக்கு விரைவில் மோக்ஷமும் சித்திக்கும் சிவாக்கினிக்கு வீரியமாகவுள்ள பஸ்மத்தை அணிபவர்களையும் பஸ்மபக்ஷணஞ் செய்பவர்களையும் பேய் பூதம் முதலியன துன்புறுத்தாது. பாவங்களையெல்லாம் ஒழித்தலால் பஸ்பம் என்றும் எல்லா ஐசுவரியங்களையும் கொடுப்பதால் விபூதி என்றும் யாவரையும் காப்பதால் ரøக்ஷ என்றும் சொல்லப்படும். அதிகம் சொல்வானேன்? பஸ்மதாரணத்தை விடாது செய்தவன் சாக்ஷõத் சங்கரனேயாவன். பூர்வம் உபமன்யு முனிவர் தமக்கு உற்றவினைச் சம்பந்தங்களை ஒழிக்கவும் தம் இஷ்டசித்தியை அடையவும், சிவகடாக்ஷத்தைப் பெறவும், பாசுபத ஆசாரியாராகவும், திருவெண்ணீற்றை அணிந்துள்ளார். அந்த விபூதியே எல்லாப் பாக்கியங்களுக்கும் காரணம்! என்று வாயுதேவன் முனிவர்களுக்குச் சொன்னார்.

30. உபமன்யு முனிவர் பெற்ற பேறு

முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, சுவாமி! உலக முழுவதும் வியாபித்துள்ளவரே! இளவயதினராகிய அந்த உபமன்யு முனிவர் எவ்வாறு சிவாகமங்களைக் கற்று, அவற்றின் பயனையும் திருநீற்றின் மகிமையையும் உணர்ந்து, அதைத் தரித்து பாசுபத விரதத்தை ஆஸ்ரயித்து சிவஞானத்தை அடைந்தார். இந்த விஷயத்தை விபரமாக எங்களுக்குச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள்.

வாயுதேவன் தொடர்ந்தார். முனிவர்களே! நீங்கள் யூகித்துக் கேட்ட விஷயம் அருமையானது. உலகத்திலுள்ள சிறுபிள்ளைகளைப் போல, உபமன்யு முனிவர் ஒரு சிறு பிள்ளையல்ல. அவர் வயதில் சிறியவரானாலும் மிகவும் ஞானசிரேஷ்டர். அவரை ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற சித்தர்களில் ஒருவராகக் கருதுவீராக! அத்தகைய சித்தராகிய அவர் பூமியில் தவச்சிறப்புடைய வியாக்கிர பாத முனிவர் செய்த தவப்பயனால் சிவாக்ஞைப்படி அவருக்குப் புத்திரராகப் பிறந்தார். அவர் பிறந்த போது, வியாக்கிரபாத முனிவரும் வசிஷ்ட முனிவரின் தங்கையாகிய அவரது மனைவியும் அந்தக் குழந்தையைச் சீராட்டி பாராட்டி வளர்க்கக் கருதி வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்திற்கு அனுப்பினார்கள். அங்கே, காமதேனுவின் பாலைப் பருகி களிப்புடன் வளர்ந்து வந்தார். அவ்வாறு வளர்ந்து வரும்போது ஒருநாள் அவருடைய தாய் தந்தையர் அங்கே வர, உபமன்யு முனிவர் அவர்களுடன் வந்து விட்டார். அங்கு ஒரு சமயம், உபமன்யு முனிவர் தாம் பருகிய காமதேனுவின் பாலைக் கருதி அழுதார். அப்போது அவருடைய தாயார், பாலென்று கூறி மாவைக்கரைத்துக் குடிப்பாட்ட, அவர் அதைப்பருகி இது பாலல்ல என்று துக்கிக்க, அவர் அன்னை, மகனே! சிவபெருமானை நோக்கிப் பெருந்தவஞ் செய்து அவருடைய திருவருளைப் பெறாத நமக்குப் பசுவின் பால் எங்கிருந்து கிடைக்கும்? என்று வருத்தத்துடன் கூற, உபமன்யு முனிவர், அப்படிச் சிவபெருமான் இருந்தால், நான் திருப்பாற்கடலையே சொந்தமாகப் பெறுவேன் என்றார். அதைக் கேட்ட தாய் மகனே சிவபெருமான் இல்லாமலா போய்விட்டார்? பிரமன் முதலிய தேவர்களையெல்லாம் சிருஷ்டித்து, அவர்கள் தன் கட்டளைக்கு உட்பட்டு உலக காரியங்களைச் செய்ய விடுத்தார். அவரே உலக நாயகர். அவருடைய திருவடிகளுக்கே பக்தி செய்வாயாக. அவருடைய திருவடியை அடைவதற்கு பஞ்சாக்ஷர மந்திரமே சாதனம். நீ அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தையே ஜெபிப்பாயாக. இது விரஜாஹோமத்தால் செய்த திருநீறு, இது உன் தந்தையால் உனக்குக் கொடுக்கப்பட்டது. இதை அணிவாயாக. இதனை அகோர மந்திரத்தால் அணிவாயானால் உன்னுடைய வினைகள் எல்லாம் ஒழியும் என்று கூறி, திருவெண்ணீறு கொடுக்க அவர் அதையேற்றுத் தேகத்தில் அணிந்து, செங்கல், மண் முதலியவற்றால் ஒரு சிறிய கோயிலும் சிவலிங்கமும் செய்து கொண்டு அநேக காலம் அந்தச் சிவலிங்கப் பெருமானை மலர்கொண்டு அர்ச்சித்து வந்தார். அந்தச் சமயத்தில் மரீசி முனிவரின் சாபத்தால் பேய் உருவேற்றிருந்த சில முனிபுத்திரர்கள் அங்கு வந்து, அவர் தவத்தை விக்கினஞ்செய்ய, அட்டகாசஞ் செய்தார்கள். அதைக் கண்ட உபமன்யு முனிவர் பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்க அதனால் அந்த முனிவரது புத்திரர்கள் தம் பேயுருவம் நீங்கி, இயற்கை வடிவேற்றார்கள்.

அப்போது சிவபெருமான் இந்திரனுடைய உருவத்தை எடுத்து உபமன்யு முனிவரிடம் வந்து, சிவபெருமானைப் பற்பலவாறு நிந்தனை செய்தார். அதைக்கேட்ட உபமன்யு முனிவர், சிவநிந்தை செய்யும் இவனைக் கொல்வதே தகுதி என்று அகோராஸ்திர மந்திரத்தை உச்சரித்து, திருக்கரத்தில் திருநீற்றை எடுத்துக், கோபத்தோடு எறிந்தார். அவ்வாறு எறிந்த அந்த அகோராஸ்திரத்தை இந்திர வடிவுடன் நிற்கும் சிவபெருமானின் அருகில் நின்ற நந்திதேவர் தடுக்க உபமன்யு முனிவர் மனம் வருந்தி இனி என் உயிரை விடுவேன் என்று தீர்மானித்து, மூலாக்கினியை எழுப்பச் சிவபெருமான் அந்த அக்கினியை அவித்து, ரிஷபாரூபராய் காராகண்டமும் மான் மழுவும் உமாதேவியாரும் உடன் விளங்கக் காட்சியளித்தார். தேவதுந்துபிகள் முழங்கின. மலர்மாரி பொழிந்தது. அப்சர மங்கையர் நடனமாடினார்கள். அந்தக் காட்சியைக் கண்ட உபமன்யு முனிவர், சிவபெருமானைப் பிரத்தியட்சமாகக் கண்டு, ஆனந்தக் கண்ணீர் பெருகக் கைகட்டி வாய் பொத்தி நின்றார். பணிவுடன் நின்ற உபமன்யு முனிவரை, சிவபெருமான் தம் அருகே அழைத்து உச்சிமோந்து உடலைத் தழுவி, உமாதேவியை நோக்கி, மலைமகளே! இவன் உன் மகன்! என்றார். உமாதேவியும் மனங்களித்து, தன் கரத்தை அவர் சிரமிசை இருத்தி இறவாப் பதவியை அடைவாயாக! என்றாள். அலைகள் புரளும் திருப்பாற்கடலை அவருக்குக் கொடுத்து மேருமலையும் பின்னடையும்படியான பெருஞ் செல்வத்தையும் கொடுத்தாள். மேலும் சிவபெருமான் அவருக்கு பாசுபதஞானமும் பாசுபதவிரதமும் பாசுபத யோகமும் உண்டாகுக. ஆகமங்கள், சம்ஹிதைகள், புராணங்கள் முதலியவற்றை இயற்றும் ஆற்றல் உனக்குப் பெருகுக! என்று வரங்கொடுத்து, தேவமுனி கணங்களுடன் அந்தர்த்தானமாகி, கைலாயகிரியை அடைந்தார் என்று வாயுதேவன் கூறினார்.

வாயு சம்ஹிதை (பூர்வ பாகம்) முடிந்தது.

 
மேலும் சிவமகா புராணம் »
temple news
காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  ... மேலும்
 
temple news
41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும் நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான ... மேலும்
 
temple news
2. தர்ம ஸம்ஹிதை காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் ... மேலும்
 
temple news
16. சிவலிங்க பூஜையின் பயன் சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய ... மேலும்
 
temple news
31. நரகலோக வர்ணனை வியாசரே! பாதாள லோகத்திற்கு மேலே இருக்கும் நரக லோகத்தையும் அதில் பாவிகள்கிடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar