பதிவு செய்த நாள்
05
டிச
2020
07:12
சென்னை: தமிழகத்தில், பாரம்பரிய கோவில்கள் புனரமைப்புக்கு ஒப்புதல் கேட்டு, 353 விண்ணப்பங்கள், உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் முன் நிலுவையில் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அறநிலையத் துறை தெரிவித்தது.
சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த, கோவில் புனரமைப்பு குழுவை மாற்றி அமைப்பது தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.பாரம்பரிய கோவில்கள் பாதுகாப்புக்கான வழிமுறைகள் குறித்த அறிக்கையையும், மாநில மற்றும் மண்டல அளவிலான குழுக்களின் உறுப்பினர்கள் பட்டியலையும், அறநிலையத் துறை சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, உரிய நிபுணர் குழுவை அமைப்பதாகவும், அதற்கான உத்தரவை பிறப்பிப்பதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, கோவில் புனரமைப்பு தொடர்பாக எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, அறநிலையத் துறை ஆணையர் பிரபாகரன், உயர் நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு முன், 353 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன, என்றார்.
இதையடுத்து, இந்த விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க எத்தனை நாட்களாகும் என, நீதிபதிகள் கேட்டனர்.தினசரி அடிப்படையில், 10 விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கலாம் என, ஆணையர் பிரபாகரன் தெரிவித்தார்.அப்படியென்றால், நிபுணர் குழு தொடர்ந்து இயங்கினாலும், 60 நாட்களாகும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, நிபுணர் குழு செயல்பட துவங்கட்டும்; பாரம்பரிய, பழமைவாய்ந்த கோவில்கள் குறித்து கருத்து வேறுபாடு இருந்தால், அறநிலையத் துறையின் கவனத்துக்கு எடுத்து வரலாம்; அதை, நிபுணர் குழு முடிவு செய்யும் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.அத்தியாவசிய பணிகளை செய்யலாம்!
வழக்கு விசாரணையின் முடிவில், அறநிலையத் துறை சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராகி, தை மாதத்துக்கு பின், பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டியதுள்ளது; அதற்கு அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது; நீதிமன்றம் இதற்கு தீர்வு கூற வேண்டும், என்றார்.உடனே நீதிபதிகள், கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ளலாம்; அதற்கான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளலாம்; கோவில்கள் இடிப்பு கூடாது என்றனர்.