பதிவு செய்த நாள்
07
டிச
2020
01:12
தர்மபுரி: தர்மபுரி அருகே, காலபைரவர் கோவிலில், நாளை நடக்கவுள்ள ஜெயந்தி விழாவில், வெளி மாநில பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் புகழ்பெற்ற காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு தேய்பிறை, அஷ்டமி நாட்களில் வழிபாடு நடக்கும்.
இதில், உள்ளூர் மக்கள் மற்றும், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகை தருவர். இதேபோல் பைரவரின் ஜெயந்தி விழாவிலும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பது வழக்கம். அதன்படி, இக்கோவிலில் ஜெயந்தி விழா நாளை (8ல்) நடக்கிறது. விழா தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஆர்.டி.ஓ., (பொ) தணிகாசலம் தலைமையில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஜெயந்தி விழாவின்போது, வெளிமாநில பக்தர்கள் வருகைக்கு தடை விதிப்பது என்றும், உள்ளூர் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும். விழாவுக்கு வரும் பக்தர்கள், கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கோவிலுக்கு வர தடை விதிப்பது, சிறப்பு பஸ் வசதி கிடையாது என, முடிவு செய்யப்பட்டது.