பதிவு செய்த நாள்
07
டிச
2020
01:12
ஈரோடு: கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால், பூசாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மட்டுமே தீ மிதித்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில், பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு தீ மிதி விழா, தேரோட்டம் கடந்த மாதம், 24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கோவில்களில் கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் தினமும் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். அம்மனுக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான, தீ மிதித்தல் நேற்று காலை நடந்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் சிலர் மட்டுமே, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சில அடி தூரம் தேர் இழுக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல், அரசு வழிகாட்டு நெறிமுறைகளால், குண்டம் மற்றும் தேரோட்டத்தில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்நிகழ்வுகள் முடிந்ததும், கோவிலில் அம்மனை வழிபட பக்தர்களுக்கு அனுமதி தரப்பட்டது. கருங்கல்பாளையம் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நாளை காலை பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.