பதிவு செய்த நாள்
29
மே
2012
11:05
சென்னை: சிவன் கோவிலில், 500 ஆண்டு பழமை வாய்ந்த, விஜய நகர மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மறைமலை நகர் அடுத்த கடம்பூர் கிராமத்தில், ஒரு சிவன் கோவில் உள்ளது. இதை புதுப்பிக்கும் பணி நடந்தது. கோவிலை சுத்தம் செய்யும் பொருட்டு, சுற்றி இருந்த முட்புதர்களையும், செடி, கொடிகளையும் வெட்டினர். பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கு கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு குறித்து, அரியலூர் அரசு கலை கல்லூரி பேராசிரியர் தியாகராஜனுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. கடம்பூருக்கு வந்த அவர், கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: கோவில் கருவறை தெற்கு சுவரில், விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் (1509-1530) கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. எட்டு வரிகளில் தமிழ் ஆங்கீரச வருடம் எழுதப்பட்ட இக்கல்வெட்டின் காலம், கி.பி., 1512. இதிலிருந்து கல்வெட்டு, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறிய முடிகிறது. கல்வெட்டு, இவ்வூர் பெயரை கடம்பூர் என்றும், இது நந்திபுரம் சீர்மையில் அமைந்த கிராமம் என்றும், சிவன் கோவிலை, உடையார் கயிலாயமுடையார் கோவில் என்றும் குறிப்பிடுகிறது.
கடம்பூர் செல்லும் வழியில் நந்திபுரம் உள்ளது. நந்திபுரம் என்ற பெயர், காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த, இரண்டாம் நந்திவர்மன் (732-796) அல்லது மூன்றாம் நந்திவர்மன் (846-869) என்ற பல்லவ மன்னர் காலத்தில் ஏற்பட்ட பெரிய வணிக நகரம் என்பதை உணர்த்துகிறது. கடம்பூர் கீழைத் தெருவில், மடைவிளாகமும், நஞ்சை பற்றில் கோவிலை புதுப்பித்துக் கட்ட, 2,000 குழி நிலமும் இறையிலியாக கொடுக்கப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. மடைவிளாகம் என்பது கோவிலை சுற்றி பிராமணர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் வசிப்பதற்கு உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி. இந்நில கொடையை, கிருஷ்ண தேவ மகாராயரின் வாசல் அதிகாரியாக பணியாற்றிய, நாகண்ணநாகம நாயக்கரின் தம்பி கொடுத்துள்ளார். கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்துள்ளதால், நாகண்ணநாகம நாயக்கரின் தம்பியின் பெயரை அறிய முடியவில்லை. இவருக்கு, நாயக்கத்தானமாக நந்திவரம் சீர்மை மன்னரால் கொடுக்கப்பட்ட பிரதேசம் என்பதையும், கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது தவிர, நாகம நாயக்கர் மகன் லிங்கப்ப நாயக்கர், கொண்டம நாயக்கர், கப்பு நாயக்கர் ஆகியோருக்கும், இவர்களின் கோத்திரத்துக்கும் புண்ணியம் ஏற்பட வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, இக்கோவிலில் ஐப்பசி, தை மாத அமாவாசை நாட்களிலும், சோமவாரத்திலும் பூஜை வழிபாடு நடத்த தேவதானமாக, நாட்டேரி புதுக்குளம் என்ற கிராமமும் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில், ஏற்கனவே ஒச்சிலமத்தான் எல்லய சோமாசியார் என்ற பிராமணருக்கும் நிலம் கொடுக்கப் பட்டிருந்தது. அந்த நிலம் நீங்கலாக, மீதியுள்ள நிலங்கள் இக்கோவில் பூஜை வழிபாட்டுக்கு கொடுக்கப்பட்டது என, கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வாறு கொடுக்கப்பட்ட நிலங்களுக்கும், ஊருக்கும் கூடுதலாக வரி வசூலிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிப்பகுதியில், இந்து தர்மத்துக்கு அகிதம் (தீங்கு) பண்ணினவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவர் என கூறப்பட்டுள்ளது.
சென்னை அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்டுள்ள கற்பலகை ஒன்றில், எழுதப்பட்டுள்ள அச்சுதராயரின் கி.பி., 1531ம் ஆண்டுக்கு உரிய கல்வெட்டு, கடம்பூருக்கு அருகில் உள்ள நந்திபுரம் பற்றி கூறுகிறது. நந்திபுரம் புதுப்பாக்கிழார் ஏகாம்பநாதர் என்பவர், மன்னருக்கு புண்ணியம் ஏற்பட வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, தீராவினை தீர்த்த தம்பிரானார் கோவில் திருப்பணிக்கு தண்டல் பற்றுச்சீர்மை, பச்சல் சீர்மை ஆகிய இரண்டு சீர்மைகளை, இறையிலியாகக் கொடுத்துள்ளார். இதிலிருந்து, நந்திவர்ம பல்லவர் காலம் முதல், விஜய நகர காலம் வரை, நந்திபுரம் ஒரு அரசியல், நிர்வாக முக்கியத்துவமிக்க ஊராக தொடர்ந்து இருந்து வந்தது என அறிய முடிகிறது. கடம்பூரின் அருகில் காயரம்பேடு என்ற கிராமம் உள்ளது. சோழர் காலத்தில், இவ்வூர் காசிரம்மேடு நாடு என்ற நாட்டுப்பிரிவின் தலைநகரமாக இருந்துள்ளது. கடம்பூர் சிவன் கோவிலில், பல்லவர் காலத்து கலை பாணியில் வடிக்கப்பட்ட ஜேஷ்டா தேவியின் சிற்பம் உள்ளது. பல்லவர் காலத்திலேயே இவ்வூரும், கோவிலும் இருந்துள்ளது என்பது புலனாகிறது. ஆனால், காலப்போக்கில், அக்கோவில் சிதிலமடைந்து போனதால், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. கல்வெட்டுகள், சிற்பங்கள் போன்றவை அந்த திருப்பணியின் போது மறைந்து விட்டன அல்லது அழிந்து போயின எனலாம். எஞ்சி இருப்பவை நந்திபுரம் என்ற ஊர் பெயரும், ஜேஷ்டா தேவியின் சிற்பமும் தான். இப்போதுள்ள கோவில், கி.பி., 1512ல் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்டதாகும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.