பதிவு செய்த நாள்
12
டிச
2020
10:12
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில், முன் அறிவிப்பின்றி, வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள், நேற்று வெளியிடப்பட்டன.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்ய முயன்றதால், இணையதளம் முடங்கியது. திருமலை ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இந்தாண்டு, 10 நாட்கள் சொர்க்கவாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இணையதளம்இந்நிலையில், இதற்கான டிக்கெட்டுகளை கடந்த வாரம் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டது.
திருமலையில், சொர்க்க வாசலை காண வேண்டும் என்ற ஆர்வத்தில், பக்தர்கள் இதை முன்பதிவு செய்ய முந்தினர். தேவஸ்தான இணையதளத்தில், ஒன்றரை லட்சம் பேர், ஒரே நேரத்தில், லாக் இன் செய்ததால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.அதனால், வைகுண்ட ஏகாதசி டிக்கெட் வெளியீடு தேதியை, மீண்டும் அறிவிப்பதாக தேவஸ்தானம் செய்தி குறிப்பு வெளியிட்டது. இதற்காக பக்தர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, 6:30 மணிக்கு, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வைகுண்ட ஏகாதசிக்கான டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. டிச., 25 - ஜன., 3 வரை தினசரி, 20 ஆயிரம் டிக்கெட் என இணையதள முன்பதிவில் வெளியிடப்பட்டது.இதை அறிந்த பக்தர்கள், டிக்கெட் முன்பதிவு செய்ய போட்டியிட்டனர். இதனால், மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, சர்வர் முடங்கியது. ஆனாலும், காலை, 8:00 மணிக்குள், 70 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. மேலும் பலர், டிக்கெட் பெற, தொடர்ந்து இணைய தளத்தில் முயன்று வருகின்றனர்.
அப்டேட்: காலை முதல் இரவு வரை முயன்றும், ஏராளமான பக்தர்கள் டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தற்போது, பலதரப்பட்ட டிக்கெட் முன் பதிவுகளை, மக்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே செய்து வருகின்றனர். அதனால் தேவஸ்தானமும், அதற்கேற்றார் போல், தங்கள் இணையதள தொழில்நுட்பத்தை, அப்டேட் செய்ய வேண்டும் என, பக்தர்கள் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.