பதிவு செய்த நாள்
13
டிச
2020
02:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பின் போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், நாளை துவங்கி ஜனவரி, 4ம் தேதி வரை நடக்க உள்ளது.வரும், 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்ற, பரமபத வாசல் திறப்பு நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக, 24ம் தேதி மாலை, 6:00 முதல், 25ம் தேதி காலை, 8:00 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய பின், காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பகல்பத்து உற்சவ நாட்களில், நம்பெருமாள் புறப்பாடு நடைபெறும் போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளிய உடன், காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.ஜனவரி, 1ம் தேதி வேடுபறி உற்சவம் நடக்கும் போது, பகல், 12:30 முதல் மாலை, 5:00 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என, திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.