பதிவு செய்த நாள்
12
டிச
2020
06:12
தஞ்சாவூர்: 2020ம் ஆண்டின் கடைசி சனி பிரதோஷமான இன்று, தஞ்சை பெரியகோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரினசம் செய்தனர். சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு தனி சிறப்பு பெற்றது. அதிலும் சனி பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்றும், மஹா பிரதோஷம் என்றும் ஆன்மீக பெருமக்களால் போற்றப்படுகிறது.
அத்தகையை சிறப்பு மிக்க சனி பிரதோஷமான இன்று 2020 ஆண்டின் கடைசி சனி பிரதோஷம் என்பதால், தஞ்சை பெரியகோவிலில், மாலை 4.45 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,தயிர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நந்தியம் பொருமனை தரிசனம் செய்தனர். தெர்மல் மீட்டர் கொண்டு பக்தர்களை சோதனை செய்த பிறகே, கோவிலுக்குள்ளாக அனுமதிக்கப்பட்டனர்.
அபிஷேகத்தின் போதும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். இது குறித்து சிவாச்சாரியர்கள் கூறியதாவது; கொரோனா பரவலால் கடந்த மார்ச் 21, ஏப்ரல் 5,20,மே 5,20,ஜூன் 3,18, ஜூலை 2,18, ஆக்ஸ்ட் 1,16,30 ஆகிய தேதிகளில் நடந்த பிரதோஷம் பக்தர்கள் இன்றி நடந்தது. அதன் பிறகு செப்டம்பர் மாதம் கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில், 15 மற்றும் 29ம் தேதியும், அக்டோபர் 14,28 தேதியும்,நவம்பர் 12,27 தேதியும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் குறைந்தளவில் தரிசனம் செய்தனர். கொரோனா காலகட்டத்தில், 2 சனி பிரதோஷங்கள் வந்த நிலையில், பக்தர்கள் வழிப்பாடுகள் செய்ய முடியாத நிலையில், இந்தாண்டின் கடைசி சனி பிரதோஷம் என்பதால், அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இனி 2021 ல் ஏப்ரலில் 24ல் தான் சனி பிரதோஷம் வருகிறது என்றார்.