பதிவு செய்த நாள்
13
டிச
2020
02:12
சென்னை:தமிழக தொல்லியல் துறையின், பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்கள் பட்டியலில், அழகர்மலை யானை சிற்பமும், கீழ்ராவந்தவாடி சிற்பக் குளமும், கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக தொல்லியல் துறை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, 92 புராதன சின்னங்களை பாதுகாக்கப்பட்டவையாக பராமரித்து வருகிறது.அத்துடன், இந்தாண்டு, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம்; அரியலுார் மாவட்டம், அழகர்மலை கிராமத்தில் உள்ள யானை சிற்பமும் சேர்க்கப்பட்டுள்ளன.கீழ்ராவந்தவாடி சிற்பக்குளம் அம்மாகுளம் என, அழைக்கப்படுகிறது.
இது, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த சின்னம நாயக்கரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில், ராமாயணம், மகாபாரதம், பெரியபுராண காட்சிகள், புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இதன் நான்கு வழிகளிலும், நந்தி சிலைகள் உள்ளன.சோழர்களுக்கு பின், தமிழகத்தை ஆண்ட விஜய நகர மற்றும் நாயக்கர் காலமான, 16, 17 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும், அழகர் மலை யானை சிற்பம், 80 அடி உயரம், 41 அடி நீளம், 12 அடி அகலத்துடன் பிரமாண்டமாக உள்ளது.யானையின் கழுத்து மேல்பகுதியில் மணிகளும், கால்களுக்கு இருபுறங்களிலும் தாளமிடும் சிற்பம், தும்பிக்கையின் முடிவில் வீரன் என, கம்பீரமாக உள்ளது. இவை இரண்டும், பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களின் பட்டியலில், இந்தாண்டு சேர்க்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.