பதிவு செய்த நாள்
13
டிச
2020
02:12
உத்திரமேரூர்:உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த புனரமைப்பு பணியின்போது, தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது.சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.அதன்படி, புதிய கற்கோவில் அமைப்பதற்காக, இம்மாதம், 10ம் தேதி, கணபதி ஹோமத்துடன் பாலாலயம் நடந்தது. தொடர்ந்து, புனரமைப்பு பணி துவங்கப்பட்டது.
இந்நிலையில், கோவில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள, கருங்கற்களாலான படிக்கட்டுகளை, திருப்பணிக் குழுவினர் நேற்று அகற்றினர்.அப்போது, அதன் கீழ், துணியால் சுற்றப்பட்ட, சிறிய அளவிலான மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, ஏராளமான தங்க காசுகள், ஆபரணங்கள் இருந்தன. இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த உத்திரமேரூர் தாசில்தார் ஏகாம்பரம், தங்க நகைகளை ஆய்வு செய்தார். கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு குறித்து, இன்று மதிப்பீடு செய்யப்படும் என, தெரிவித்தார்.இதற்கிடையே, கோவிலில் தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டதை அறிந்து, அதை காண, பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.