திருமங்கலம் : ”மதுரையில் தமிழ் பிராமி எழுத்துக்களை அறியும் விதமாக தொல்லியல் துறை சுற்றுலா தலம் அமைக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கிருபாகரன் விருப்பம் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் கிண்ணிமங்கலம் ஏகநாதர் பள்ளிப்படை கோயில் புனரமைப்பின் போது கல்வெட்டுகள், கற்கள் கிடைத்தன. அதில் தமிழ் பிராமி எழுத்தில் ’ஏகன் ஆதன் கோட்டம்’ என எழுதப்பட்டிருந்தது. இப்பகுதியில் இதுபோன்ற வரலாற்று சின்னங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் அக்கல்வெட்டுகளை நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டு, அதுகுறித்த விளக்கங்களை கோயில் நிர்வாகி அருளானந்தத்திடம் தெரிந்து கொண்டார். நீதிபதி கிருபாகரன் கூறுகையில், ”மதுரையில் தமிழின் தொன்மையை நிலைநாட்டக்கூடிய இடங்கள் அதிகமாக உள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்களை அறிய சுற்றுலா தலத்தை தொல்லியல் துறை ஏற்பாடு செய்தால் தமிழின் தொன்மை, கலாசாரத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்” என்றார். பேரையூர் அருகே உள்ள விஜயநகரம் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.