பதிவு செய்த நாள்
21
டிச
2020
07:12
கரூர்: ’அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைகொடை, 3,000 ரூபாய் பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்’ பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு, ஹிந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது: ஹிந்து சமய அறநிலைதுறையில் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருணை கொடை, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, வருவாய் உள்ள கோவில்கள் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒருகால பூஜை, பட்டியலில் சேராத கோவில்கள் பணியாற்றி வரும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் கோவில் வருமானம் இல்லை என்ற காரணம் காட்டி, பொங்கல் கருணை கொடை வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து, பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. வருமானம் இல்லாத கோவில்களில் செயல் அலுவலர் சம்பளம், இதர படிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மட்டும் கருணை கொடை வழங்க, வருமானத்தை காரணம் காட்டுவது அநீதியாகும். இந்த ஆண்டு, பொங்கல் கருணை கொடையை உயர்த்தி, 3,000 ரூபாயாக, அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.