ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சிஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.