பிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவக்கனல் சத்திய லோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா! உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும்! என்று வேண்டினான். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், அவர் விபீஷணரிடம் தனது பட்டாபிஷேக பரிசாக அந்தச் சிலையைக் கொடுத்தார். அதை விபீஷணர் இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவிரிக்கரையில் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். திரும்ப வந்து எடுத்தபோது சிலையைத் தூக்க முடியவில்லை. அந்த இடமே ஸ்ரீரங்கம் ஆனது. பிற்காலத்தில், அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.