செட்டிமேடு வெங்கடாசலபதி கோயிலில் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2012 11:05
தென்காசி : செட்டிமேடு வெங்கடாசலபதி கோயிலில் வரும் ஜூன் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. நெல்லை மாவட்டம் டோனாவூர் அருகே செட்டிமேட்டில் பூமி நீளா சமேத வெங்கடாசலபதி கோயில் உள்ளது. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்கு பின்னர் தற்போது ஆந்திர மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் குடியேறிய வடுகாயர் (யாதவர்) சமுதாயத்தினர் தாங்கள் குடியேறிய ஊர்களில் வெங்கடாசலபதிக்கும் தங்களுடைய குல தெய்வமான கெங்கை அம்மனுக்கும் கோயில்கள் கட்டி வழிபட்டனர். அவ்வாறு கட்டப்பட்டதே செட்டிமேட்டிலுள்ள வெங்கடாசலபதி கோயில். இக்கோயில் ஆகம சாஸ்திரப்படி கற்பாறைகளால் கட்டப்பட்டு கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், மணிமண்டபம், வசந்த மண்டபம் அமைக்கப்பட்டது. மூலவருக்கு எழில்மிகு விமானம் கட்டப்பட்டுள்ளது. பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மகா மண்டபத்தில் கருடனும் ஆழ்வாராதிகளும் எழுந்தருளியுள்ளனர். வசந்த மண்டபத்தில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையினுள்ள மகேந்திர மலையில் எழுந்தருளியிருக்கும் திருமலை நம்பி கோயிலின் அடிவாரத்தில் திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசத்தின் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாக விளங்குகிறது. சிறப்பு மிக்க இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 1999ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதனையடுத்து வரும் ஜூன் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை செட்டிமேடு வடுகாயர் (யாதவர்) முன்னேற்ற சங்கத்தினரும், கோயில்கள் நித்திய ஆராதன கைங்கர்ய சபாவினரும் செயது வருகின்றனர்.