பதிவு செய்த நாள்
25
டிச
2020
04:12
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற, வைணவ ஸ்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் ஒன்றாகும். இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த, 15ஆம் தேதி பகல்பத்து உற்சவம் துவங்கியது. 24 ஆம் தேதி இரவு, அரங்கநாத பெருமாள் மோகன அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் உலாவந்து, வெளி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஸ்தலத்தார்கள், நாச்சியார் திருமொழி என்னும், திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடினர். இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சேஷ வாகனத்தில் கோவில் வளாகத்தின் உள்ளே வலம் வந்து, சொர்க்க வாசல் கதவு முன்பு எழுந்தருளினார். அங்கு புண்ணியாகவாசனம் செய்து, மந்திர புஷ்பம் அஷ்டோத்திரம் வாசிக்கப்பட்டது.
பின்பு, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வாசல் எதிரே நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் ஆகியோர் எதிர்கொண்டு, பெருமாளை செய்வித்தனர். அங்கு ஆழ்வார்களுக்கு சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்பு சொர்க்கவாசல் வழியாக அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெளியே வந்து, கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என, அறிவிக்கப்பட்டதை அடுத்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சிவக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை கோவை ஐ.ஜி., பெரியய்யா, டி.ஐ.ஜி., நரேந்திரன் நாயர், எஸ்.பி., அருளரசு ஆகியோர் ஆய்வு செய்தனர். இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, இந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் செந்தில் வேலவன், மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி ஆகிய அதிகாரிகள் பங்கேற்றனர். காலை, 8:00 மணிக்கு பிறகு, பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கைலாஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.