பதிவு செய்த நாள்
31
டிச
2020
02:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புத்தாண்டு நள்ளிரவு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலில், டிச.31ம் தேதி படித் திருவிழாவும், நள்ளிரவு, 12:01 மணிக்கு புத்தாண்டு சிறப்பு தரிசனமும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு, இன்று படித் திருவிழா கோவில் சார்பில், எளிமையாக நடத்தப்பட உள்ளது.வெளியூர்களில் இருந்து வரும் பஜனை குழுவினர் படிகளில் நின்று பஜனை செய்வதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், இன்று முதல், ஜன.,1ம் தேதி வரை, மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான குடில்களில், பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் வழக்கம் போல், காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும். ஒரு மணி நேரத்திற்கு பொதுவழியில், 200 பேரும், கட்டண தரிசனத்தில், 200 பேரும் என, ஒரு நாளைக்கு, 4,800 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.ஆகையால், மேற்கண்ட இரு நாட்கள் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அதிகளவில் வருவதை தவிர்க்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.