பதிவு செய்த நாள்
02
ஜன
2021
10:01
தம்மம்பட்டி: உலிபுரத்தில், 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு, நவகண்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தம்மம்பட்டி அருகே, உலிபுரத்தில், சுவேத நதி தென் கரையில், 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் சேதமடைந்தது. இதனால், கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்கோவில் முன், இரு கல்வெட்டு, விவசாய தோட்டத்தில் இரு நவ கண்ட சிலைகள் கண்டறியப்பட்டு, கடந்த டிச., 25ல், சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கல்வெட்டு முன்புறம் சூரியன், பிறை நிலா, சூலம் ஆகியவற்றுடன், ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என எழுத்துகள் உள்ளன. மறுபுறம், 13 வரிகளுடன், அம்பலத்தடி நாயனார் கோவில் என குறிப்பிடப்பட்டுள்ளது. மகதை மண்டல ஒரு பகுதியாக உலிபுரம் இருந்துள்ளது. இப்பகுதியை, ஆட்சி செய்த தளவாய்திருமலையார், கோவில் அமைக்க இடம் கொடுத்து, அதற்குரிய செலவுக்கு தும்மலப்பட்டி என்ற ஊரில், நஞ்சை நிலம் தானமாக வழங்கியது இடம்பெற்றுள்ளது. மற்றொரு பலகை கல்வெட்டு, 1531ல், அச்சுததேவமகராயர் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில், உலிபுரம் என்ற ஊர், அப்போது, புலியுரம்பூர் என இருந்துள்ளது. கோவில் பூஜை செலவுக்கு, செக்கடிக்கோம்பை, தும்பலப்பட்டி ஊர்களில், நஞ்சை, புஞ்சை நிலம் கொடுத்து, அதற்குரிய அளவுக்கு, சூலக்கல் வைத்துள்ளனர். பல்லவர் காலம் முதல், நவகண்டமுறை இருந்துள்ளது. போர் தொடங்கும் முன், கொற்றவையின் துணை வேண்டி, வீரன் தன்னையே சுயபலி கொடுத்து கொள்வான். அந்த வீரரின் உடலில் ஒன்பது இடங்களில் சதையை எடுத்து கொற்றவையின் முன் வைத்து, தன் தலையை தானே வெட்டி சுயபலி கொடுப்பர். சுயபலி கொடுக்கும் வீரருக்கு, நவகண்டம் பெயரில் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்த குறிப்பும் இல்லை. இவை, 3 அடி உயரம், நேரான கொண்டை, முடிச்சு, காதில் அணிகலன் உள்ளன. இடது கையில் நீண்ட வாளில் கழுத்தை அறுப்பது போல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.