பதிவு செய்த நாள்
31
மே
2012
10:05
விழுப்புரம் : விழுப்புரம் அருகே, எருமை மாடுகளை பலி கொடுத்து, நரிக்குறவர்கள் குல தெய்வ வழிபாடு செய்தனர். விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த நரிக் குறவர்கள், தங்கள் குல தெய்வ வழிபாட்டுக்காக, அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில், ஒன்று கூடினர். நேற்று முன்தினம் இரவு, தோகைப்பாடி அருகே உள்ள புளியந்தோப்பில், பெருமாளுக்கு பூஜை செய்து, விழாவைத் துவக்கினர். குல தெய்வமான காளிக்கு, நேற்று காலை, 6 மணிக்கு பூஜையை துவக்கினர். சாமி கும்பிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த நான்கு எருமை மாடுகளை, கழுத்தில் வெட்டி, பலி கொடுத்தனர். அதிலிருந்து பீறிட்ட ரத்தத்தைக் குடித்து, கோஷமிட்டு வழிபட்டனர். பின், ரவை ரொட்டி, எண்ணெயில் பொறித்த அடைகளை, காளிக்கு படையலிட்டனர். மது அருந்தி இருந்த நரிக்குறவர்களின் வினோத வழிபாடுகளை, அப்பகுதி மக்கள், வேடிக்கை பார்த்துச் சென்றனர். பூஜையில் ஈடுபட்டிருந்த நரிக்குறவர் சங்கத் தலைவர் சாலாமேடைச் சேர்ந்த கிங்காங் கூறியதாவது: இங்கு பல தலைமுறைகளாக, எங்கள் குல தெய்வமான காளிக்கு, பூஜை செய்து வருகிறோம். மக்கள் நலன் பெறவே, இந்த வழிபாடு செய்கிறோம். குலதெய்வ உத்தரவு கிடைத்ததும், இந்த மாதத்தில் பூஜை செய்வோம். நான்கு எருமை கிடாவும், எட்டு வெள்ளாடுகளையும் பலியிட்டு, அதன் ரத்தத்தை குடித்து, பூஜை செய்கிறோம். தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கி, இந்த பூஜை செய்வோம். விழுப்புரம், சென்னை, விருத்தாசலம், திருக்கோவிலூர், சிதம்பரம், செஞ்சி, பொள்ளாச்சி, மாயவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, நரிக்குறவ சொந்தங்கள், குடும்பத்துடன் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். அனைவரிடமும் வரி வசூலித்து, மூன்று லட்சம் ரூபாய் செலவில், இந்த வழிபாடுகளை செய்துள்ளோம். வழிபாடுகளை முடித்து, மாமிசங்களை குடும்பத்தினர்களுக்குப் பங்கு பிரித்து, பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை, வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆண்டுதோறும் பூஜை செய்து வரும் இந்த இடத்தில், காளிக்கு கோவில் கட்டி வழிபட அனுமதி வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு கிங்காங் கூறினார்.