பரமக்குடி கோயில்களில் ஜீவராசிகளுக்கு படி அருளிய லீலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2021 04:01
பரமக்குடி : பரமக்குடி,நயினார்கோவில் சிவன் கோயில்களில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படியருளிய காலபைரவஅஷ்டமி விழாநடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று காலை 4:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 5:00 மணி தொடங்கி மூலவர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.காலை 9:00 மணிக்கு விநாயகர், வள்ளி -தெய்வானையுடன் முருகன் மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடன், விசாலாட்சி அம்மன் தனித்தனியாக புஷ்ப சப்பரத்தில் வீதி வலம் வந்தனர். இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் காலபைரவ அஷ்டமி விழாவையொட்டி,சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுநடந்தது.அப்போது சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளையும் காத்தருளும் லீலையாக பக்தர்களுக்கு அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது.*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையார் கோயிலில் நயினார்கோவில், நாகநாதசுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.