உடுமலை: கேரளா மலப்புரம் திருநாவாயா கும்பமேளாவின் துவக்கமாக, திருமூர்த்திமலையில் இருந்து மடாதிபதிகள் மற்றும் துறவிகள் முன்னிலையில், புனித தீர்த்தம் நேற்று எடுத்து செல்லப்பட்டது.
கேரள மாநிலம், மலப்புரம் திருநாவாயாவில், பாரதப்புழா நதியின் கரையில், பாரம்பரியமாக நடந்து வந்த கும்பமேளா திருவிழா 18ம் நுாற்றாண்டில் தடைபட்டது. இந்த விழாவை மீண்டும் இந்தாண்டு நடத்த, ஆன்மிகவாதிகளை உள்ளடக்கிய, ‘மகாமக மகோத்வ சமிதி’யினர் பணிகளை துவக்கினர். கும்பமேளா வரும் பிப்., 1ம் தேதி திருநாவாயாவில் நடக்கிறது. திருமூர்த்திமலையில் உருவாகும், பாலாறு உட்பட நதிகள் மேற்கு நோக்கி பாய்ந்து. கேரளா பாரதப்புழாவில் இணைகிறது. இந்த நதிகளின் புண்ணியத்தை போற்றும் வகையில், திருநாவாயா கும்பமேளா திருவிழா நேற்று திருமூர்த்திமலையில் துவக்கி வைக்கப்பட்டது. முதலில், திருநாவாயா பாரதப்புழா நதியின் தீர்த்தம், மும்மூர்த்திகள் ஒருங்கே அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தவத்திரு பேரூராதீனம் மருதாச்சல அடிகள் தலைமை வகித்தார். சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்தார்.திருமூர்த்தி மலை தீர்த்தம் மற்றும் திருவிளக்கு தீபம் கும்பமேளா பூமிக்கு அனுப்பப்பட்டது. திரளான பக்தர்களுக்கு மத்தியில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு திருமூர்த்தி மலையில் நடந்தது. வாரணாசி ‘ஜூனா அக்கடா’ மடத்தின் அவந்திகா பாரதி மாதாஜி, திருத்தணி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜீயர் சுவாமிகள், பூஜ்ய ஸ்ரீ குருபிரியா மாதாஜி, காமாட்சிபுர ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள், திருநெல்வேலி பூஜ்ய ஸ்ரீ புத்தாத்மாநந்த சரஸ்வதி சுவாமிகள், எட்டிமடை நிகிலானந்த அமிர்தா ஆகியோர் திருமூர்த்திமலைக்கும், திருநாவாயா சேத்திரத்திற்கும் உள்ள முக்கியத்துவம் குறித்து பேசினர். கும்பமேளா துவக்க நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.