பதிவு செய்த நாள்
09
ஜன
2021
07:01
பல்லடம்: தைப்பூச விழா அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பல்லடத்தில் முருகனுக்கு வழிபாடு நடந்தது.
தமிழகம் முழுவதும் தைப்பூச விழா முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் அரசு விடுமுறை கடைபிடிக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். பல்வேறு தரப்பினரும் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பல்லடத்தில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவையின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். தைப்பூச விழா தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூச நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என, கடந்த ஏழு ஆண்டாக வலியுறுத்தி வந்தோம். பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க அரசு விடுமுறை அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி என பேரவை நிர்வாகிகள் கூறினர். முன்னதாக, ஸ்ரீவிநாயகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, முருக பக்தர் பேரவையின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.