பதிவு செய்த நாள்
09
ஜன
2021
07:01
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 12ல் அனுமன் ஜெயந்தி விழா நடக்கவுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, உதவி ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 12ல் நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள், காலை, 5:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். சுவாமி தரிசனத்திற்கு namakkalnarasimhaswamianjaneyartemple.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை, 5:00 முதல், இரவு, 9:00 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 750 பேர் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில், அவரவர் விருப்பத்திகேற்ப முன்பதிவு செய்பவர்கள் அனுமதிக்கப்படுவர். டோக்கன் முறையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 1,500 பேர் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழயதைகள் ஆகியோர் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள், தீர்த்தம், பூ மற்றும் இதர பிரசாதங்கள் வழங்கப்படாது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
வடை தயாரிக்கும் பணி தீவிரம்: ஜெயந்தி தினத்தன்று காலை, 5:00 மணிக்கு, பக்தர் ஒருவரின் ஏற்பாட்டால், சுவாமிக்கு, ஒரு லட்சத்து எட்டு வடைகளால் மாலை கோர்க்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. காலை, 11:00 மணி வரை, வடை மாலை அலங்காரத்தில் பக்தர்ளுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரமேஷ் தலைமையில், 32 அர்ச்சகர்கள், கோவில் மண்டபத்தில் நான்கு நாட்கள் தங்கி இருந்து வடை தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். வடை தயாரிப்பதற்காக, 2,050 கிலோ உளுந்து மாவு, 32 கிலோ மிளகு, 33 கிலோ சீரகம், 125 கிலோ தூள் உப்பு, 650 லிட்டர் நல்லெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. கோவில் மண்டபத்தில் வடை தயாரிக்கும் பணி நேற்று மாலை, 4:30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை, வடை தயாரிப்பு நடைபெறும். அதன்பின், 1,000 வடைகள் வீதம் சுவாமிக்கு சாற்றும் வகையில், 52 கோர்வைகள் உருவாக்கப்படும். மற்ற வடைகள் சுவாமியை சுற்றி வைக்கப்படும். ஜெயந்தி விழாவையொட்டி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.