பதிவு செய்த நாள்
11
ஜன
2021
03:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, 14 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும்.
நான்கு ராஜ வீதிகளில் தேரோட்டம் நடத்தப்படும். தைப்பூசத்தின் ஐந்தாம் நாள், மகா தரிசனம் நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். இந்தாண்டு கொரோனா பரவலால், இந்நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேரோட்டம் குறித்து, ஈரோடு ஆர்.டி.ஓ., சைபுதீன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், கொரோனா பரவலால், தைப்பூச தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கட்டளைதாரர் நிகழ்ச்சிகள், எளிய முறையில் நடத்த வேண்டும். சுவாமி வீதியுலா நடத்தக்கூடாது. திருவிழாவுக்காக தற்காலிக கடை, ராட்டினம், பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு காவடி எடுத்து வருதல், பூஜை பொருட்கள், அன்னதானம் வழங்குதலுக்கு அனுமதி இல்லை. தைப்பூச தினமான, வரும், 28, 29ல் மலைப்பாதை வழியாக, மலைக்கோவிலுக்கு செல்ல கார், வேன் போன்ற வாகனங்களுக்கு அனுமதி கூடாது. தைப்பூசம், மகா தரிசன நாட்களில் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியருள்வார். இதிலும் பக்தர்கள், சமூக இடைவெளி, முககவசம் அணிந்து தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தால், இ-பாஸ் முறை கொண்டு வரவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால், முருக பக்தர்கள் சோகம் அடைந்துள்ளனர்.