பதிவு செய்த நாள்
12
ஜன
2021
08:01
சபரிமலை : சபரிமலையில், மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல், நேற்று முடிவடைந்தது. இன்று பந்தளத்தில் இருந்து, திருவாபரணம் புறப்படுகிறது.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகளுடன், தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று நடந்த எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்வில், அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் குழுவினர், குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்றனர். இவர்கள் பெருவழி பாதைக்கு பதிலாக, வாகனங்களில் நிலக்கல்சென்று, அங்கிருந்து பம்பை வந்தனர். பந்தளம் கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து, இன்று மதியம் திருவாபரணம் புறப்படுகிறது. உச்ச பூஜைக்கு பின், திருவாபரணங்கள் பெட்டிகளில் வைக்கப்பட்டு, பவனி புறப்படும். போலீஸ், ஊழியர்கள் மட்டுமே இந்த பவனியில் வருகின்றனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த திருவாபரணங்கள், நாளை மறுதினம் மாலை சன்னிதானம் வந்தடையும். சன்னிதானத்தில் மகர விளக்குக்கு முன் நடக்கும் சுத்திகிரியைகள் இன்று துவங்ககின்றன. நாளை மறுநாள் மாலை, 6:30க்கு மகரஜோதி விழா நடக்கவுள்ளது.