புதுக்கோட்டை :புதுக்கோட்டை அருகே சிறுமியர் மட்டும் பங்கேற்ற பொங்கல் திருவிழா நடந்தது. புதுக்கோட்டை ஆலங்குடி அருகே செரியலுார் கிராமத்தில் சிறுமியர் மட்டும் பங்கேற்கும் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது.
இதில் பெண் குழந்தைகள் பருவம் எய்தும் முன் கலந்து கொள்ள வேண்டும். பிறந்த சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் தாய் அல்லது சகோதரிகள் கலந்து கொள்வர். திருவிழாவில் பங்கேற்கும் குழந்தைகள் பெண்கள் திருவிழா முடியும் வரை விரதம் இருப்பர். பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில் வெற்று பொங்கல் வைத்து மூன்று படையல் போட்டு ஒரு படையலை விரதம் இருப்பவர்கள் சாப்பிடுவர்.
மற்ற இரு படையல்களை ஒரு ஓலைக் கூடையில் இரண்டு பெரிய சாணிப் பிள்ளையார்களுடன் எடுத்து செல்வர்.கூழைப்பூ ஆவாரம் பூ அருகம்புல் வேப்பிலை கரும்பு வெல்லம் ஆகியவற்றை கூடையில் வைத்து சிறுமியரும் பெண்களும் தனித்தனியாக கும்மியடித்தபடி தீர்த்தான்குளம் வரைபடையலை எடுத்து செல்வர். அங்கு கூடையில் உள்ள பொங்கலை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு மற்ற பொருட்களை குழியில் புதைத்து ஒரு சிறு பிள்ளையாரை அருகில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் காட்டில் வைத்து வழிபடுவர்.இந்த திருவிழாவை கொப்பித் திருவிழா என்றும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். நேற்று நடந்த திருவிழாவில் ஏராளமான சிறுமியர் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:முந்தைய காலத்தில் இப்பகுதியில் பிறந்த கொப்பி அம்மாள் என்பவர் சிறு குழந்தையாக இருக்கும் போது அம்மைநோய் தாக்கி இறந்துள்ளார்.அதன்பின் அம்மை நோய்தாக்கி யாரும் இறக்கக்கூடாது என்பதற்காக கொப்பியம்மாளை நினைத்து சிறு பெண் குழந்தைகள் அம்மைக்கு எதிரான நோய் தடுப்பு மூலிகைகளுடன் ஊர்வலமாக சென்று தீர்த்தான்குளத்தில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். காலங்கள் மாறினாலும் கலாச்சாரத்தை மாற்ற விரும்பாமல் இந்த வழிபாட்டை செய்து வருகிறோம். வெளியூர் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.