புது டில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார். உத்தர பிரதச மாநிலம் அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 5.2 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களிடம் நிதி திரட்டும் திட்டம் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 27-ல் இப்பணிகள் முடிவடையும். இதனை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை கவனிக்கிறது. ரூ.20,000-க்கு மேல் நன்கொடை கிடைத்தால் அவற்றை காசோலையாக பெறுவது என முடிவு செய்துள்ளனர். நன்கொடையாக பெறும் பணத்தை 48 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுவரை ஆன்லைன் நன்கொடை மூலமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்துள்ளது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமான இயக்கத்தின் முன்னணி அமைப்பான வி.எச்.பியினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். இச்சந்திப்பில் வி.எச்.பி., சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மற்றும் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவரும் முன்னாள் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்களிடம் 5 லட்சத்து 100 ரூபாயை தனது பங்களிப்பாக ஜனாதிபதி வழங்கினார்.