பதிவு செய்த நாள்
01
ஜூன்
2012
10:06
செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில், வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளினார். காலை 8 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் வடம்பிடிக்க, தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. தேரடி தெரு, அனுமந்தபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, மண்டபத்தெரு வழியாக சென்று, காலை 10.15 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், கணிதாசம்பத், அறநிலையத்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.